கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Friday, March 18, 2011
அதிசயமே வியந்து நின்ற அதிசயம் ஆழி சூழ் உலகு
''என் சமூகத்தில் உள்ள அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. ஆழி சூழ் உலகு நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது, வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை!''
--எழுத்தாளர் ஜோ டி குருஸ்
வாழ்க்கையை எத்தனைமுறை திருப்பி திருப்பி எழுதினாலும் ஏதாவது ஒரு சாரளம் மாத்திரம் நம் கண்ணில் பட்டு வாழ்வை புதிய வியாக்கியானத்தில் கொண்டு சேர்க்கிறது.எழுதப்படாத பல சமூக வாழ்க்கை நம் தமிழ் சூழலில் இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பதை மீண்டும் ஆழி சூழ் உலகு நாவல் மூலம் உணரமுடிகிறது.பிரமாண்ட எழுத்தாளர்களே மூக்கில் விரலை வைத்து அதிசயத்த அற்புதம் தான் ஆழி சூழ் உலகு என்ற அற்புத நாவல்.படைப்பனுபவத்திற்க்கு நல்ல கவனிப்பும் தேடலும் தான் முக்கியமானது என்பதை முதல் நாவலிலே மற்றவர்களுக்கு கற்று தருகிறார் நாவலாசிரியர்.
குமரி மாவட்டத்திலுள்ள ஆமந்துறை என்ற மீனவக் கிராமத்தினை மையமாகக் கொண்டு நாவல் விரிகிறது. 1985ஆம் ஆண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று திரும்பும் சிலுவை, சூசை, கோத்ரா பிள்ளை என்ற மூன்று பரதவர்களும் புயலில் மாட்டிக் கொள்வதாக நாவல் தொடங்குகிறது. மூவரும் மூன்று தலைமுறை களின் குறியீடுகள். பசியாலும் குளிராலும் வாடி நீரில் மிதக்கையில் ஒருவர் மற்றவருக்காக உயிர் துறக்கின்றனர்; சிலுவை மட்டும் காப்பாற்றப்படுகிறான். இதற்கிடையில் 1933ஆம் ஆண்டு தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் கடலிலும் கடற்கரையிலும் நடைபெற்ற சம்பவங்களின் வழியாக நாவல் தொடர்கிறது.
பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் விவரிப்பில் மூன்று தலைமுறைகளாக, கிராமத்தில் ஏற்படும் மாற்றங்கள் பதிவாகியுள்ளன. ஆமந்துறையில் மீனவர்களும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாடார்களும் வாழ்கின்றனர். இவர்களிடையே அவ்வப் போது மோதல்களும் கொலைகளும் நிகழ்கின்றன. ஆனால் நடப்பில் நாடார்களும் பரதவர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கின்றனர். கிறித்துவர்களாக வாழ்ந்தாலும் பரதவர் களிடம் நாட்டார் நம்பிக்கைகளும் நாட்டார் தெய்வ வழிபாடும் செல்வாக் கோடு உள்ளன. சான்றாக, திமிங்கலம் போன்ற பெரிய மீனிடம் மாட்டிக்கொள் ளும்போது குமரி ஆத்தாவைத் துணைக்கு அழைக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் கடலில் மீனுக்காகப் பயணம் செய்கையில் அவர்கள் கரை திரும்புவார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று. எப்பொழுதாவது கடலில் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அவர்களுடைய போராட்டம் இடைவிடாமல் தொடர்கிறது. பரதவர்கள் எல்லா வழிகளிலும் பொருளியல் ரீதியாகச் சுரண்டப்படுகின்றனர்; அவற்றி லிருந்து மீள்வது குறித்த தெளிவும் அவர்களிடமில்லை. அவர்கள் தங்களுக்குள்ளாகவே குழுக்களாகப் பிரிந்துகொண்டு அடிதடி, வெட்டுகுத்து, கொலை முதலான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பரதவர் வாழ்க்கையில் திருச்சபையின் ஆதிக்கம் மறுக்க முடியாத ஒன்று. அது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கலாம். கிறித்துவ ஆலயத்தில் பங்குத் தந்தையாகப் பணி யாற்றிய காகு பாதிரியாருக்கும் ஆமந்துறைப் பரதவர்களுக்கும் இடையிலான உறவு நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடனாக, கருவாடு வாங்கி வியாபாரம் செய்ய வந்த ரத்னசாமி நாடாருக்கும் ஆமந்துறைப் பரதவர்களுக்கும் இடை யிலான உறவு குறித்த சித்திரிப்பு மனித உணர்வின் உன்னதமான வெளிப்பாடு. பரதவர்கள் தொழில்ரீதியில் ஒன்றிணைந்தாலும் தனிப்பட்ட நிலையில் கிராமத்தினருடனும் தங்களுக்குள்ளும் முரண்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
பரதவர்களிடையே நிகழும் ஆண்-பெண் உறவின் பாலியல் ‘அத்துமீறல்களை’ நாவல் இயல்பாகப் பதிவு செய்துள்ளது. ஆண்களைப் போலவே பெண்களும் தங்கள் காமத்தினையும் காதலினையும் வெளிப்படுத்திடத் தயங்குவதில்லை. ரோஸம்மா இதற்கோர் உதாரணம்; தன்னிடம் உறவு கொள்பவனின் மகனிடம் உறவு கொள்கிறாள். பரதவர் குறித்த பல நாவல்களிலும் அவர் களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே பிரச்சினைகளும் அதனைத் தொடர்ந்து கலவரங்களும் நிகழ்வது பதிவு செய்யப் பட்டுள்ளது. இந் நாவலிலும் இவ்வாறான சம்பவமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாவலின் இடையிடையே சங்ககால நெய்தல் நில வாழ் வினைச் சித்திரிக்கும் பாடல்களை இணைத்திருப்பது நம்மை அருஞ்சொற்பொருட்களைத் தேடிப் படிக்கவைக்கிறது. பரதவர்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் கடல்புரத்தில், உப்புவயல், மாணிக்கம், வாங்கல், கன்னி எனப் பல நாவல்கள் வெளிவந்துள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமாகவும் புதுவித வாசிப்பனுபவத்தைத் தருவனவாகவும் உள்ளன. நிலத்தில் மட்டுமே வாழும் நமக்குக் கடற்புரத்தில் வாழும் பரதவர்கள் பற்றிய அறிமுகமின்மையும் பெரும்பான்மையான மக்களாக இருந்தும் அவர்கள் ஆதிக்க அரசியல் செய்யாமலிருப்பதும் அவர் களின் சாகச வாழ்வும் அவர்களைப் பற்றி வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
ஆழிசூழ் உலகி’ன் அடிநாதம் வலிமை வாய்ந்த மரணம். நாவலை வாசிக்கும் இரண்டாவது நிமிடமே கோத்ராபிள்ளையின் மரணம். பிறகு மடுத்தீன் மரணம். மரணம் தொழிற்சார்ந்த வாழ்க்கையிலும் வருகிறது; நோயிலும் வருகிறது. தொடர்ந்து மரணங்கள். சாவுக்குக் காரணம் தெரியவில்லை. பில்லி சூன்யமா? என்னும் குழப்பம். மரணத்தை எப்படி வெல்வது? என்ற ஆதங்கம் ஜோவை ஆழ்த்தினாலும் நாவலின் தளம் புறவயமாக இயக்கம் கொள்வதால் ஆழ்தளத்தில் அவரால் செல்ல முடியவில்லை. மரணத்தைத் தியாகத்தால் வெல்ல முடியும் என்கிறார். மரணமும் இயற்கையான தியாகம்தான். கடலுக்கும் கரைக்கும் இடையிலான மீனவனின் வாழ்க்கை போன்றது தான், வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான தொடர்பும். உயிரும் உயிரும் மோதும் தொழில்தான் மீன்பிடி வாழ்க்கை. இதில் யார் தோற்றாலும் கிடைப்பது மரணம். பிடித்த மீன் சாகக்கூடாது. செத்தா மற்றமீன் சாப்பிடும். பிறகு ‘கிழவனும் கடலும்’ போல எலும்புக் கூடுதான் கரைவந்து சேரும். எனவே வேட்டையாடிய உயிரை வேட்டையாளனே காப்பாற்றும் நிலை. கரைக்குக் கொண்டு வரப்படும் மீனுடன் ஜோடிமீன்கூட வருவதும். “நம்மள மாதிரி அறிவா அதுக்கு இருக்கும்? சிந்திச்சு பாத்தா அது நெலமையும் பாவந்தான...” என்று மேலும் தொம்மந்திரை பேசுவதும் மரணத்தின் ஆழம் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் விரிந்தது என்னும் உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த உணர்விலிருந்து புறத்தோற்றமாகத் தான் சார்ந்த சமூகத்தின் சித்திரங்களை மிகப்பெரிய கடலைப்போன்ற திரைச்சீலையில் தீட்டி இருக்கிறார்.
அமாவாசை இருளில் காற்றாலும் அலையாலும் மரம் உடைக்கப் பட்டுக் கடலுக்குள் தத்தளிக்கிறார்கள் சிலுவை, சூசையார், தொம்மந்திரை, வயதான பெரியவர் கோத்ரா பிள்ளை. அவர்களின் மரண அவலத்தினூடே நாவலின் கதை சொல்லப்படுகிறது. இயற்கையின் மாபெரும் சக்திக்குள் ஒன்றாகிக் கலக்கிறது கோத்ரா பிள்ளையின் மரணம். சாகும்போது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, குற்ற உணர்ச்சி, தவறுகள், உன்னதங்கள் எல்லாமே இயல்பாக அலசப்படுகின்றன. தான் சாகும்போது தோக்களத்தா கிழவியை (மனைவி) நினைத்தவாறு உயிரை விட்டதாக அவளிடம் கூறச்சொல்லும் கோத்ரா பிள்ளையின் பலவீனங்களும் இதில் அடக்கம். இவ்வாறு கதை சொல்லும் வடிவம் ஏற்கனவே எழுதப்பட்டதுதான். மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்யும் பெண் கீழே விழுவதற்குள் கதை சொல்லும் பாணியிலான புனைவுகளை நாம் வாசித்திருக்கலாம். ஆனால் தொழில் சார்ந்த வாழ்க்கையுடன் இணைத்து ஒரு இனவரைவியலை இந்த வடிவத்திற்குள் நிறுத்தி இருப்பதும் வேரும் கிளையுமாகப் படர்ந்த உறவுமுறையைச் சொல்லி இருப்பதும்தான் ஜோவின் திறமை.
‘உடல்’ என்பதன் இயக்கம் இரண்டு விதங்களில் இவரது நாவல்களில் இயக்கம் பெறுகின்றது. முதலாவதாக உழைப்பு சம்பந்தப்பட்டது. இரண்டாவதாக உறவு சம்பந்தப்பட்டது. இரண்டுமே உற்பத்தி சம்பந்தப்பட்டவை. (இந்த உற்பத்தி உறவில் சம்பந்தமில்லாத சாதி, ஆதிக்கம் பெறுவதுதான் ‘கொற்கை’யின் உள்ளடக்கம்.) உடல்மீதான வாழ்வம்சத்தின் முரட்டுத்தனம் கொண்ட உழைப்பாளர் வாழ்க்கையின் மரணமுடிவுகளைப் பதிவு செய்யும் தொடக்கம், வாழும் காலத்தில் அடையும் துடிப்பை இவற்றிலுள்ள பெரும்பாலான பாத்திரங்கள் உணர்த்தி நிற்கின்றன. தென்னைமரத்திலிருந்து விழும் சுந்தரபாண்டியின் மரணம்கூட இங்கு நினைவுகூரத்தக்கது. நாடார்களும் பனைகளிலிருந்து மீனவர்களைப்போலக் கதை பேசிக்கொண்டே தொழில் செய்கிறவர்கள். ‘தினமலர்’ பத்திரிகை தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் பனை யிலிருந்து கொண்டு உரத்துப் படித்த கதைகளும் குமரிமண்ணில் நடந்ததுண்டு. துப்பாக்கிச் சூடு நடைபெறும்போது துணியை உயர்த்திக்காட்டி சுடப்பட்டுச் சாவது பற்றி ஜோ எழுதி இருப்பதையும் இந்த உடல்வாழ்வின் முரட்டுத்தனம் என்று சொல்லலாம். இதையும் பனையேறி நாடார்களிடம் கண்டு கொள்ளலாம். நான் ஹைஸ்கூல் படிக்கும்போது எங்களுக்கொரு வரலாற்று ஆசிரியர் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லும் சம்பவம் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. குமரிமண்ணைத் தாய்த்தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தில் நேசமணி ஈடுபட்டிருந்த காலத்தில் பலர் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையான சம்பவங்கள் நடைபெற்றன. அவர்களைப் பற்றி ஒருவர் வில்லுப்பாட்டில், “அந்த மங்காடு தேவசகாயமும், கீழ்குளம் செல்லையாவும், மானம் காக்கும் போரில், மார்பில் குண்டடி பட்டனரே” என்று பொதுக் கூட்டங்களில் பாடுவாராம். இதனைப் பாடிவிட்டு அந்த ஆசிரியர், “நாயர்களின் போலீஸ் பட்டாளம் சுடுவதற்காகத் தோக்கை ஏந்தியதும் இவர்கள், ‘இஞ்ச சுடுடா’ என்று வேட்டியை உயர்த்திக் காட்டினார்கள். குண்டுபாய்ந்த இடம் மார்பில் அல்ல; மர்மஸ்தானத்தில்” என்பார்.
அதுபோல வர்மக் கலையிலும் இந்த ஒற்றுமையைக் காணமுடிகிறது. தொம்மந்திரையின் இடது குதிகால் நரம்பில் தூண்டில் ஏறிக் கொழுவு கிறது. உடனே கோத்ராபிள்ளை அவனது கையிலுள்ள சில நரம்புகளைப் பிடித்துவிட ரத்தப்போக்கு நின்றுவிடுகிறது. தொழிலுடன் தொடர்பு கொண்ட இத்தகைய உடல் மீதான எழுத்துக்கள் இயற்கைக்கும் நாகரிகத்திற்கும் இடையிலான முரண்பாட்டைப் பெரிதாக்குகின்றன. நாடார்களைவிட மீனவர்களிடம் இந்த இயற்கைத்தன்மை பெரிதாக உள்ளது. ஜஸ்டின் மரம் கரைபிடிக்கத் தனி ஆளாக வரும்போது பனை மரத்திலிருந்து மருக்கொழுந்தின் ஆட்கள் நாட்டு வெடிகுண்டு வீசுகிறார்கள். அவன் சிறிது பின்வாங்கி நிதானித்திருக் கலாம். ஆனால் அவனது உடல் அவனை உந்தித் தள்ளுகிறது. அவன் நெஞ்சைக் குண்டு பிளக்கிறது. பொதுவாகக் கலவரத்தின்போது பிணம் விழுந்தால் நாடார்கள் விட்டுவிட்டுப் பிறகு பார்க்கலாம் என்று ஓடித் தப்புவார்கள். மீனவர்கள் என்றால் அதை எடுக்கப்போய் கூட இரண்டு பேர்களைப் பலிகொடுப்பார்கள். இந்த இயற்கையான முரட்டுத்தனம் தான் ஜோவின் கைவண்ணத்தில் உடலெழுத்தாக உருமாற்றம் பெற்றிருக்கின்றது.
உறவு சம்பந்தப்பட்ட உடல் எழுத்தில் குறிப்பிட்டுச் சொல்லப் படவேண்டியது உறவைமீறிய வாழ்க்கை குறித்ததாகும். எந்தவிதமான வரைமுறைகள் எதுவுமின்றி உடலும் உடலும் சேரும் தன்மையில் தமிழில் இதுவரை இதுபோன்றதொரு படைப்பு வெளிவந்தது இல்லை. ஜஸ்டின் வழுக்குமரம் ஏறும்போது அவனைக் காதலிக்கும் வசந்தியின் மார்பகங்கள் பூரிக்கின்றன. அவன் வெற்றிபெற்றதும் அவள் அந்தரங்கத்தில் வழவழப்பு ஏற்படுவதை உணர்கிறாள். தன்னால் விரும்பப்படும் ஆணின் மீதான அளவுகடந்த பற்று அவனுடன் உடலு றவு கொள்வதற்குச் சமமானது என்ற வகையில் எழுத்தாக்குகிறார். இதே ஜஸ்டினுக்கும் வசந்தாவின் தகப்பனாருக்கும் வசந்த மாளிகை என்னும் ஒரே பெண்ணுடன் உறவு. தங்கச்சிமுறை வரும் எஸ்கலினோடு கில்பர்ட் கொள்ளும் உறவு. திடமனதில்லாத கில்பர்ட் சாமியார் படிப்பை உதறிவிட்டுக் கப்பல் தொழிலுக்குச் செல்கிறான். சித்தி முறை கொண்ட தன்னை விட இருபது வயது மூத்தவளான ரோசம்மாளோடு வருவேல் கொள்ளும் உறவு. அவன் தகப்பனார் விக்டர் பிள்ளையும் அவளுடன் உறவுகொள்வதை வருவேல் பார்க்கிறான். அவள் கிட்டத் தட்ட அவன் தாய்க்குச் சமமானவள். தூங்கிக்கிடக்கும் நிறைமாத கர்ப்பிணி மேரியைச் சுவரேறிக் குதித்துவந்து புணரும் சூசை. சாராயம் விற்கும் பண்டணத்தாளைப் போடத்துடிக்கும் சப்பாணியார். பிலிப் உடல்மீது மோகங்கொண்டு விளையாடும் சித்திக்காரி, மரியதாஸ் சாமியாருடன் ரென்சி கொள்ளும் உறவு. இவை போன்ற வரைமுறைகள் மீறிச் செல்லும் உடல் சார்ந்த உறவுகள் அனைத்துமே உடல் எழுத்தில் சேர்த்திதான். உடலுக்கு வெளியே உறவுகளற்ற தன்மைதான் புராதன எழுத்தை நோக்கிய பதிவுகளைச் செய்ய முயற்சிக்கின்றன. தரப்படுத்தப்பட்ட அல்லது நாகரிகம் செய்யப்பட்டவைகள் அனைத்துமே ஒழுக்கம் சார்ந்த அதிகார உலகத்தைக் கட்டமைத்துக்கொண்டிருக்கின்றன.
உடல்மீதான சாகசப் பயணத்தில் இவ் நாவல் குறிப் பிடத்தகுந்த இலக்கை நோக்கிச் செல்கின்றன. அது உறவுகளை வென்றெடுத்த உடல் சாம்ராஜியம். உணர்வுகளில் சங்கமிக்கும் இந்த உலகத்தில் எல்லாரும் உறவினர்கள்தான். ஆனால் எந்த உறவையும் அது விலக்கியோ, ஒதுக்கியோ பார்க்க மறுக்கிறது. இந்த நெருக்கம் தான் எழுத்துக்களில் புராதன வளத்தைச் சேர்க்கின்றன. பண்பாடு என்பது இவற்றின்மீது எழுப்பப்படும் கல்லறைகள் அல்லது மனித இழிவுகள் என்று ஆகிறது. அது தரும் குற்றஉணர்ச்சி இவ்வகையான எழுத்துக்களில் துளியும் இல்லை. ஆபாசம் என்ற கூச்சல் இல்லை. அணிவதைவிட அல்லது புனைவதைக் காட்டிலும் பெரிய ஆபாசம் எது? வேட்டையாடும் துடிப்பில் இருக்கும் உடல்கள் மீதான உணர்வுகளுக்கும் நெருக்கங்களுக்கும் மட்டுமே இவ்வகையான எழுத்துக்கள் முக்கியத்துவம் தருகின்றன.
முல்லை நிலத்து ஆயனுக்கும் மருத நிலத்து உழவனுக்கும் வாழிடம் சார்ந்து சாவை எதிர்கொள்கிற அச்சுறுத்தல்கள் எவையும் இல. மலை சார்ந்து வாழ்கிற குறவர்கள் மலையை முதல் முறை அறியும்போது ஒருவேளை இத்தகைய அச்சுறுத்தல் உண்டாகலாம். ஆனால் தான் வாழும் மலையை ஒரு முறை அறிந்துவிட்டால் பிறகு பழுதில்லை. ஏனென்றால் மலை அசையாப் பொருள். அசலம். அதில் கால்பாவி நிற்கலாம். நிலைமை என் பது அதன் மெய்ம்மை. அது நாளும் ஒரு கோலம் கொள்வதென்பது கிடையாது. ஆனால் கடல் அப்படியன்று. அது அசையும் பொருள். சலம் (சலசலப்பது சலம்; சலசலவாதது அசலம்). இன்றைக்கிருப்பதுபோல நாளைக்கு இருக்காது. நிலையாமை என்பது அதன் மெய்ம்மை. மிதக்கவும் வைக்கும்; மூழ்கடிக்கவும் செய்யும். நிலையாமையை உவமிப்பதாக நீரே அமைகிறது. நீர்க்கரை வாழ்வும் நீர்க்கோல வாழ்வாகவே நிலையாமையின் வசப்படுகிறது.
பரதவர்களைப் போலவே மறவர்களும் சாவை எதிர்கொள்ளும் வாய்ப்ப்பைப் பெற்றவர்கள்தாம். பரதவர்கள் நீர்க்களத்தில் சாவை எதிர்கொள்பவர்களானால் மறவர்கள் போர்க்களத்தில் சாவை எதிர்கொள்பவர்கள். ஆனால் மறவர்கள் எதிர்கொள்ளும் சாவும்கூட வாழிடம் சார்ந்து அவர்கள்மீது திணிக்கப்பட்டதன்று; நாளும் நிகழ்வதுமன்று.
எனவே மரணத்தின்முன் வாழ்வின் பெறுமதி என்ன என்ற கேள்வியை அலசுகிற புதினத்தின் கதைக்களமாக அமையத்தக்கது நெய்தல் நிலம் மட்டுமே. நெய்தலின் உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும். இரங்கலுக்குரிய பறையான சாப்பறையே நெய்தலுக்குரிய பறை. அந்தப் பறைக்கே நெய்தல் என்று பெயர் (ஓரில் நெய்தல் கறங்க...புறம். 194).
நிலையாமை என்கிற அடிக்கருத்தைப் புலப்படுத்துவதாகவே ' 'ஆழிசூழ் உலகின் ' ' தொடக்கப்பகுதிகள் அமைகின்றன. எடுத்த எடுப்பிலேயே ஆவேச அலைகளால் அடியுண்டு கட்டுமரம் கவிழ்ந்து சிதைகிறது. கடலால், அதாவது நீரோட்டத்தால், கடலை அலைக்கழிக்கிற காற்றால், கடலில் உலவுகிற மீன்களால் என்று நிலையாமை எப்போதும் பல்லிளித்து முன்நிற்பது அருமையாகச் சித்திரிக்கப்படுகிறது.
கடல் வாழ்வின் நிலையாமை புரியாவிட்டால் பரதவனைப் புரியாது. அவன் கடல் மாதிரி; எப்போது சீறுவான் எப்போது ஆறுவான் என்பது யாருக்கும் பிடிபடாத மந்தணம். பரதவனை மிகத் தெளிவாக நான்கைந்து வரிகளில் விளக்கிவிடுகிறார் ஜோ டி குரூஸ்:
' '...சரியான மிலேச்சப் பயலுவ... றால் சீசன் ஒண்ண வரும் பாத்துக்கிடுங்க, அப்ப ஒரு பயலையுங் கையில புடிக்க முடியாது. நூறு ரூபா நோட்ட காதுல சொருகி வெச்சிகிட்டு அலைவானுவ. பஸ்சுல ஏறுனா நோட்ட குடுத்திற்று சில்லற கேக்குறதே இல்ல...கையில காசு வந்திற்றா...! திசயவெள தியேட்டர்ல படம் பாக்க மாட்டான்வ. இங்கயிருந்தே டக்கர் புடிச்சிகிட்டு திருநவேலி நாரோயில்தாம். துணிக்கடையள் ள போயி வெல கூடுன துணி போடுலன்னுதாம் கேப்பானுவ. ' '
'நாளை பிழைத்துக் கிடப்போமா என்று தெரியாது. இன்று இருக்கிறோம். ஆகவே துய்த்து விடுவோம் ' என்ற 'உறுதியின்மை ' உளவியலே பரதவர்களை இத்தகைய நிலைகளுக்கு உந்தித் தள்ளுகிறது. எந்த ஒன்றையும் நாளைக்கு என்று ஆற வைக்க அவர்களுக்கு வசதி வாய்ப்பில்லை. அது துய்ப்பானாலும் சரி; பழி வாங்குவதானாலும் சரி.
பரதவர்களின் இந்த 'உறுதியின்மை உளவியலின் ' புறவெடிப்பாக வெளிப்படுகிற கண்மண் தெரியாத முரட்டுத்தனத்தைக் காட்சிப்படுத்துகிற இடங்களும் புதினத்தில் ஏராளம். அந்த முரட்டுத்தனம் ஆண்களுக்கு மட்டுமானதாக இல்லாமல் பெண்களுக்கானதாகவும் இருப்பது வசந்தா, கலிஸ்டா, மயிலாடியாள் ஆகியோர் வழியாகப் புலப்படுத்தப்படுகிறது.
சாவு தன்னை வெடிகுண்டின் வழியாகச் சுவை பார்க்க வருகிறது என்று தெரிந்தும் பின்வாங்காமல், புறமுதுகு காட்டாமல், நெஞ்சில் குண்டை வாங்கிச் சாவுக்குத் தன்னை உண்ணக் கொடுக்கிற ஜஸ்டினின் வீரம்; எத்தனை கடும்பகையிலும் ஒரு துறைக்கும் மற்றொரு துறைக்குமான கடல் மோதல்கள் கரைக்கு இடம்பெயர்ந்துவிடாமல் கவனித்துக்கொள்கிற ஒழுங்கு; பெண்களை, குழந்தைகளைக் குறி வைக்காத ஆண்மை; பகையாட்களானாலும் தஞ்சமடைந்தவர்களைக் காக்கும் அறம்--என்று பழந்தமிழ் மரபில் சொல்லியும் பேணியும் வரப்பட்ட புறமரபுகள் அனைத்தும் இன்னும் பரதவர்கள் நடுவில் உயிர்த்துக் கிடப்பதைப் புதினத்தின் வழியாக அறியமுடிகிறது.
1933-இல் தொடங்கி 1985வரையிலான அரைநூற்றாண்டுக் காலத்தையும் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மூன்று தலைமுறையினரையும் இந்தப் புதினம் மையம் கொண்டிருக்கிறது. கோத்ராப் பிள்ளை மூத்த தலைமுறையின் படியாள்; சூசை நடுத் தலைமுறையின் படியாள்; சிலுவை இளைய தலைமுறையின் படியாள்.
கதையின் மையக் கதைமாந்தர்களாக ஆண்களில் கோத்ரா, சூசை, ஜஸ்டின் ஆகியோரும், பெண்களில் தோக்களத்தாள், மேரி, வசந்தா, அமல்டா ஆகியோரும் இவர்களையன்றிக் காகு என்ற பாதிரியாரும். ஏனைய கதைமாந்தர்கள் அனைவரும் இந்தக் கடற்புறத்துச் சேலையின் கரைக்கும் முன்றானைக்கும் வண்ணம் சேர்ப்பவர்கள் மட்டுமே.
புதினம் நெடுகிலும் யாருடைய பிறப்பைப்பற்றியும் ஒரு சிறுகுறிப்பும் கிடையாது. தன்னுடைய முன்னுரையில் புதின ஆசிரியர் சொல்வதுபோல, ' 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சனன வழி ஒன்றுதானே! ' ' அதில் விதந்தோத என்ன இருக்கிறது ?
ஆனால் மரணவழிகள்தான் எத்தனையெத்தனை ? மரணத்தின்முன் வாழ்வின் பெறுமதி என்ன என்று பேச விழைகிற இப்புதினத்தில் ஏராளமான சாவுகள் நிகழ்கின்றன. கடலில் கவிழ்ந்து செத்தவன், வெட்டுப்பட்டும் குத்துப்பட்டும் செத்தவன், இயற்கையாகச் செத்தவன், நோய்வாய்ப்பட்டுச் செத்தவன், வாழ விருப்பமின்றிச் செத்தவன், பிறர்வாழத் தான் முன்வந்து செத்தவன்...
மிக்கேல் பர்னாந்து, வியாகுலப் பிள்ளை, இருட்டியார், சுயம்பு, தொம்மந்திரை, ஊமையன், காகு, ஜஸ்டின், கோத்ரா, சூசை என்று பல கதைமாந்தர்கள் சாகிறார்கள். இவர்களில் கடைசி நான்குபேர் தவிர்த்த ஏனையோரின் சாவுகள் பெரிய அசைவுகள் எதையும் உருவாக்கவில்லை. காகு, ஜஸ்டின், கோத்ரா, சூசை ஆகியோரின் சாவுகள் உலுக்குகின்றன.
ஜஸ்டின் என்ற சண்டியர் தன்னுடைய பிழைகளுக்காக வருந்தி மனம் திரும்பிய நிலையில் சாவை எதிர்கொள்கிறான். அவ்வாறே சூசை என்ற உல்லாசியும் தன்னுடைய பிழைகளுக்காக வருந்தி மனம் திரும்பிச் சாவைத் தழுவுகிறான்.
ஜஸ்டின் மனம் திரும்பியது வாழ்வை விரும்பி. தன் மகனுக்காக வாழ வேண்டும் என்ற ஆவல் உந்த மனம் திரும்பினான். ஆனால் வாழமுடியாமல் கொலையுண்டான். ஆனால் சூசையின் மனத் திருப்பமோ சாவை நோக்கி அவனை உந்தித் தள்ளியது. தன்னுடைய உல்லாச விழைவினால் அழிந்துபோன ஒரு குடும்பத்தின் கடைசிப் படியாளாகிய பிறன் மகன் ஒருவனைக் காப்பாற்றத் தன்னைத் துறந்துகொண்டான்.
காகு என்ற பாதிரியார் ஆமந்துறை என்ற அந்த நெய்தற்புறச் சிற்றூரின் வாழ்வுக்கு விளக்கேற்றியவர். தான் பணியாற்றுகிற பங்குகளின் மக்களுக்காக வாழ்வதைத் தவிர அவருக்குத் தனியாக வாழ்வொன்றும் இல்லை. அவர் மூத்து இயற்கையாகச் சாகிறார். ஊரே இடம்பெயர்ந்து அவருடைய சாவுக்குப் போகிறது. அவருடைய சாப்பெட்டியைச் சுமக்கும் உரிமையை அவர்மேலான அன்பினால் தனக்குக் கோருகிறது.
காகு பாதிரியார் சாமியாராக இருந்து பிறருக்காக வாழ்ந்தவர்; கோத்ரா இல்லறத்தானாக இருந்து பிறருக்காக வாழ்ந்தவன்; பிறருக்காகத் தானே முன்வந்து செத்தவன். சூசை தன் வாழ்வைப் பிறன் மகனுக்காகத் தியாகம் செய்வதற்குக் கோத்ராவே வழிகாட்டி. சூசையாவது தன்னுடைய பிழைக்குக் கழுவாயாகத் தன் உயிரைத் தந்தான். கோத்ராவோ யாருக்கும் எந்தக் கடப்பாடும் இல்லாத நிலையிலும், எந்த எதிர்பார்ப்பும் பற்றுதலுமின்றி உயிர் துறந்த, தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன். மனுமகனாகத் தன் வாழ்வின் பெறுமதியை மரணத்தில் நிறுவிய கிறித்து சாவதற்குரிய சாவைச் செத்தவன்.
----------------------------------------------
நாவலின் பக்கமெல்லாம் பொங்கிப் பெருகி வருகின்ற விதவிதமான மீன் கள். அவை எப்படிப்பட்டவை தெரியுமா? ஓங்கல் மீன்களின் வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும் மற்ற பகுதிகள் கரு நீலமாகவும் வழவழவென பார்ப்பதற்கு அழகாய் இருக்கும். முத லில் பார்ப்பவர்கள் மிரண்டு விடுவதுண்டு. போஸ்கோ எனும் மீனவனும் அப்படித்தான் ஒங்கலைப் பார்த்துப் பயம் கொள்கிறான். அப்போது தொம் மந்துரை எனும் தேர்ந்த கடலோடி அவனுக்குச் சொல்கிறான். “போஸ்கோ, பயப்புடாத. ஒங்கல்வ ரொம்ப நல்லதுவ. காந்திமாரி, சாதுவானதுவ. தோணியள்ல போற நம்ம ஆள்க தவறி கீழ வுழுந்திற்றான் வயின்னா இந்த ஒங்கல்வதாம் சுத்தி நின்னு சுறாப்பயல்வ கிட்ட வராம காப்பாத்துமாம்”. மீனுக்கும் பரதவர்களுக்குமான புரிதலும், கடலோடு இயைந்த அவர்களின் வாழ்வையும் அறிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது இந்த ஒரு துளி.
கடலின் விதவிதமான ரூபங்களை யும் கூட வாசகன் தொம்மந்துரையெனும் தேர்ந்த கடலோடியின் கண்களின் வழியாக கண்டடைகிறான். கருத்துப் பெருத்த வரிப்புலியன் தண்ணீருக்கு அடியில் மற்றொரு கருப்பும் அலைகிறது. அது என்ன தெரியுமா; “வரிப்புலியும் எப்பவும் ஜோடியாத்தாம் அலையும். இப்ப மாட்டிக்கிட்டது ஆணா, பெண்ணா தெரியலா”. “ஆணா இருக்கும் அது தாம் ஜோடியா நிக்கிற பொட்டகிட்ட பலத்த காட்டுறதுக்கு இந்த துள்ளு துள்ளுறாம்”. “சரிதாம் அண்ண, மரத்துகிட்ட சேர்ந்து வரும் போது பார்த்தமில்ல. அதுக்கு கீழேவே ஒரு கறுப்பு வந்துகிட்டேயிருக்கு”. “யாருக்குத் தெரியும், பரந்த கடல்ல ஜோடிய சுத்திக்கிட்டு இருந்திருப்பாவ, இப்ப நம்மாளு எதுலேயோ மாட்டிகிட்டான், நெனச்ச இடத்துக்கு போவ முடியல்லியே, முத்தங்கித்தம் குடுக்க முடியல்லியேன்னு சோகமா சுத்திக்கிட்டு இருக்குமாயிருக்கும்”. ஒரு படைப்பின் அதீதமான சாத்தியங்களையும் தேர்ந்த படைப்பாளியால் எட்டி விட முடியும் என்பதை தன்னுடைய முதல் நாவலில் நிரூபித்தவர் ஜோ. டி. குரூஸ்.
ஆமந்துறையெனும் பரதவர்களின் கிராமத்தில் வாழ்ந்த தொம்மந்துரையெனும் மீனவனின் கொடி வழிக் கதைதான் “ஆழிசூழ் உலகு” என்ற போதும் கதைகள் யாவும் காலக்கிரமமாக வரிசை வரிசையாக அடுக்கித்தரப்படவில்லை. பரதவர்களின் குலப்பாடகனான ஜோ.டி.குரூஸ் அவரது ஞாபகங்களின் ஊடாகப் பயணித்து 1933ல் துவங்கி 1985 வரையிலுள்ள அறுபது ஆண்டு காலத்திற்கும் மேலான ஆமந்துறைக்கும், தூத்துக்குடித் துறைமுக வளர்ச்சிக்கும் உள்ள உறவு. இந்த ஊரின் காவல் தெய்வம் போல வாழ்ந்த காகுச்சாமியார் எனும் கிறிஸ்தவ பாதிரியின் பிரம்மாண்டமான ஆகிருதி. ஊருக்குள் நிலத்திலும் மனிதர்களுக்குள் நிகழும் மனவெழுச்சி, மாற்றங்கள், கோபங்கள், பாலியல் இச்சைகள், பாலியல் மீறல்கள் என யாவற்றையும் ஒரு குலமரபுப் பாடலின் நுட்பத்தோடு பதிவு செய்திருக்கிறார். கடலின் அலையைப் போல காலத் தின் பெருவெளிக்குள் முன்னும், பின்னுமாக அலைவுறுகிறது நாவல். அவற்றிற்குள் காட்சிப்படுவதெல்லாம் பரதவ மக்களின் தனித்த மனக்கிலேசங்களே என்பதை வாசகன் கண்டடைவான்.
பரதவர்களின் வாழ்விடமான கடல் நிலையாமையின் அடையாளம், விவசாயம், கால்நடை பராமரித்தல் போன்ற தமிழர்களின் நிலம் சார் தொழில்களில் இருக்கும் குறைந்தபட்ச நிச்சயம் கூட பரதவ மக்களின் குலத்தொழிலான மீன் பிடித்தலில் சாத்தியமில்லை. இந்த நிச்சயமின்மையே அவர்களின் குணநலன்களையும், வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இயற்கை முன் வைக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கான பெருத்த நம்பிக்கையை புனித அந்தோணியாரை (அய்யா) தவிர வேறு எவரும் அளித்திடவில்லை. அவர்களின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகிற போதும், சுக்கு நூறாகச் சிதைகிற போதும் அய்யாவின் காலடியில் மண்டியிட்டுக் கதறிக்கடைத்தேறுகிறார் கள். “கண்ணீர்க் கடலில் தத்தளிப்பவர்களின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக இருக்கிறது மதம்”, என மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருப்பார். அதற்கான இலக்கிய சாட்சியை நாவலெங்கும் நாம் வாசித்தறிகிறோம்.
கிறிஸ்தவம் வந்தடைந்த செய்தியை நாவல் ஒரு புள்ளியில் சொல்லிச் செல்கிறது. நாயக்கர்களிடம் இருந்தும்., முகம்மதியர்களிடம் இருந் தும் எங்களைக் காப்பாற்றினால் நாங்கள் கிறிஸ்தவத்திற்குள் ஐக்கியமாகிறோம் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்று, போரில் எதிரிகளை வீழ்த்தியதற்கு காணிக்கையாக கிறிஸ்தவத்திற்குள் கரைந்தார்கள் என்றொரு வாய்மொழி வரலாறு இத்தென்பகுதி கடற்கரைக் கிராமங்களில் புனித சவேரியாரின் பெயரால் சொல்லப்பட்டு வருவதையும் நாவல் பதிவு செய்கிறது. கடற்கரைக் கிராமத்துக் கிறிஸ்தவ திருவிழாக்களையும் கூட நாவல் அழுத்தமாக அதன் அழகியலோடு பதிவு செய்துள்ளது. தேர்த்திருவிழாக்களில் ஊர்ந்து வரும் சப்பரங்களும், அவற்றில் வீற்றிருக்கும் புனித சவேரியார், அந்தோணியார், தேவமாதா ஆகியோரின் சொரூபங்களும் ஐரோப்பிய கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் புதிதானது.
தென்குமரிக் கடற்கரையில் கோயில் கொண்டிருக்கும் கன்னியின் மீதான பரதவர்களின் நம்பிக்கை மகத்தானது. கடலையும், கடலுக்குள் மீன்பாடு அமைவதையும், பெரு வெள்ளம், ஆழிப் பேரலை இவற்றில் இருந்தும் தம்மைக் காக்கும் பெரும் சக்தியவள் என்கிற அவர்களின் நம்பிக்கையைக் கண்டறிந்ததால்தான் இங்கே கிறிஸ்த வத்தை பரப்பிட வந்த புனித சவேரியார், அவர்களுக்குள் மாதா வழிபாட்டைப் பிரபலப்படுத்தினார். ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம் தவிர வேறு எங்கும் யேசுவின் தாயான மேரிமாதாவைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் இல்லை. மதம் பரப்ப வந்த ஐரோப்பியர்கள், பரதவர்களின் தொல் சடங்குகள், குலமரபு, நம்பிக்கைகள் ஆகியவற்றை உள்வாங்கிக் கொண்டு அதன் வழியாகவே மதத்தையும், மத நிறுவனங்களையும் கட்டமைத்தனர் என்கிற சமூகவியல் ஆய்வினையும் நாவல் கொண்டிருக்கிறது.
தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் கலந்திருக்கிற கத்தோ லிக்க கிறிஸ்தவத் திருச்சபைகளின் மீதான விமர்சனத்தையும் நாவல் வைத்திடத் தவறவில்லை. கோயில் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கும் பரதவர்களின் வாழ்வை மேலேற்றுவதற்குப் பதிலாக திரு விழாக்கால காணிக்கையிலும் ஏலம் விடும் பொருட்களின் மூலமாக கிடைக் கும் பணத்தின் மீதும் மட்டுமே குறியாக இருக்கும் சாமியார்கள் பாலியல் மீறல்களை நிகழ்த்துவதையும் நாவல் தொட்டுச் செல்கிறது. இது மட்டுமல்லாது எல்லா மீனவக் கிராமங்களையும் ஊர்க்கட்சி, சாமியார் கட்சி என இரண் டாகப் பிரித்துப் போட்டு தனக்கு வேண்டியவர்களை மட்டும் நிர்வாகத் தில் வைத்துக் கொண்டு அட்டூழியம் செய்பவர்களையும் நாவல் படம் பிடித் துக் காட்டுகிறது. இந்த எளிய விமர்சனங்களை எல்லாம் அழித்து எழுதும் பேராற்றல் மிக்கவராக காகுச் சாமியார், நாவல் எங்கும் பிரம்மாண்ட ரூபம் கொள்கிறார்.
ஆமந்துறையெனும் மீனவ கிராமத்திற்கு பங்குத் தந்தையாக காகுச் சாமியார் வந்த நாள் முதல் அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்கிறவராகவே வாழ்கிறார். புனித சவேரியாரின் மறு வடிவம் போலத்தான் நமக்குக் காட்சிப்படுத்தப்படுகிறார். அவரின் மீது கொண்ட பேரன்பினால்தான் நாவலாசிரியர், புத்தகத்தின் பிற்சேர்க்கையில் அவரின் முழுப் பக்க புகைப்படத்தை இணைத்துள்ளார். பலி பூசை நடத்தி விட்டு காணிக்கையை எண்ணிக் கணக்கிட்டு திருச்சபை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கிற வெறும் மதப் பிரசங்கியல்ல காகுச் சாமியார் என்பதை நாவலெங்கும் நாம் கண்டுணர்கிறோம். தொம்மந்துரைக்கு விதவை மதினியைத் தாரமாக்குகிறார். விதவைத் திருமணத்தை ஆதரிக்கிறவராக மட்டும் அவரை நாம் பார்க்க முடியாது. அப்படியிருந்தால் காகுச் சாமியாரின் மரணம் நிகழ்ந்த போது ஆமந்துறையே திரண்டு போய் அவருக்கான மரியாதையைச் செய்திருக்காது. இறால் மீன் ஏற்றுமதிக்குள் கிறிஸ்தவப் பாதிரிமார்களின் நுட்பமான பங்கும் இருப்பதை அவர்களுடைய கடிதங்களை ஆய்வுக்குட்படுத்தினால் கண்டறிய முடியும். “ஆழிசூழ் உலகு” என்கிற இப்பெரும் படைப்பே கூட காகுச் சாமியார் சொல்கிற “நண் பர்களுக்காக உயிரை விடுறதை விட மேலான தியாகம் ஒன்றுமில்லை”ங்கிற இப்புள்ளியில் தான் சுழல்கிறது என்று நான் நினைக்கிறேன்.
ஆற்ற இயலாத பெருங்கோபம் தன்னுள் நீங்காது நிறைந்திருப்பதால் தான் ஜஸ்டின் வெட்டுண்டு கிடக்கிற போதும் அவனுடைய நெஞ்சாங் கூட்டிற்குள் மண்ணை அள்ளி நிறைக்கிறாள் வசந்தா. தன்னைத் தன் பிராயத்தில் துரத்தி துரத்தி வேட்டையாடியவன்; தன் தகப்பனைத் திட்டமிட்டு வெட்டிக் கொன்றவன் ஜஸ்டின். அவனை எப்படி எத்தனை நாளானா லும் மன்னிக்க முடியும் வசந்தாவால். விதவை மதினி அமலோற்பவத்தைத் திருமணம் செய்த பிறகு பிறந்த குழந்தை தனக்குப் பிறந்ததா, தன் அண்ணனுக்குப் பிறந்ததா என்கிற குழப்பமின்றி அன்பைக் கொட்டி பிள்ளையை வளர்க்க தொம்மந்துரையால் மட்டுமே முடியும். ஊரையே செல்வச் செழிப்பாக்கிய மிக்கேல் பர்னாந்து இலங்கையில் மரணத்திற்கு பிறகு ஆமந்துறை வந்தடைந்த அவளின் மருமகளான சாராவிற்கு சூசையார் நிகழ்த்திய மிருக குரூரத்தை எண்ணி தனக்குள் வதைபட்டு, அவளின் மகளான சிலுவையை தன் நெஞ்சில் சுமந்து வளர்ப்பதென நாவல் விதவிதமான மனித உணர்வுகளால் நெய்யப்பட்டிருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)
சாமான்யரின் வெறி - பணி மலையாளபடம்
ஜோஜு ஜார்ஜ், பணி(வேலை) திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமாகிறார், சரியான வேகத்தில் நிகழ்வுகள் வெளிப்படும் ...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
கவிஞர் அனார் : தமிழின் நவீன கவிதைகளுக்கு மிக வலுவான பங்களிப்பை தருகின்றவர். "ஓவியம் வரையாத தூரிகை(2004)", "எனக்குக் கவிதை முக...