மார்சிய நோக்கில் செயற்கை நுண்ணறிவு
மார்க்ஸியர்களாகிய நமது நோக்கம், தொழில்நுட்ப வளர்ச்சிகளை நிராகரிப்பதாக இருக்கக் கூடாது; மாறாக, அதன் பயன்பாட்டைத் தீர்மானிக்கும் முதலாளித்துவக் கட்டமைப்பையே நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். இந்த விவாதத்தின் திசையை மாற்றுவதன் மூலம், படைப்பூக்கத்தை ஜனநாயகப்படுத்துவதற்கும், முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளைத் தீவிரப்படுத்துவதற்குமான ஒரு கருவியாகச் செயற்கை நுண்ணறிவின் (AI) ஆற்றலை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
கொள்கை ரீதியாக மார்க்ஸியர்கள் எப்போதுமே தொழில்நுட்ப முன்னேற்றத்தை எதிர்த்ததில்லை. தொழிற்புரட்சி தொடங்கி டிஜிட்டல் யுகம் வரை, தொழில்நுட்ப மாற்றங்கள் என்பவை உற்பத்தி முறைகளை மறுசீரமைப்பதன் மூலம் இயல்பாகவே உழைப்பாளிகளை பாட்டாளி மயமாக்குகின்றன என்பதை நாம் புரிந்தே வைத்திருக்கிறோம். செயற்கை நுண்ணறிவும் இதற்கு விதிவிலக்கல்ல. எழுத்து, நிரலாக்கம், ஓவியம் போன்ற ஒருகாலத்தில் மனிதர்களுக்கு மட்டுமே உரியவை எனக் கருதப்பட்ட அறிவார்ந்த மற்றும் படைப்புச் சார்ந்த பணிகளின் கூறுகளைத் தானியங்கியாக மாற்றும் அதன் திறனே அதனை வேறுபடுத்துகிறது. இந்தச் சிதைவு முன்மாதிரி இல்லாததுமல்ல, இயல்பிலேயே எதிர்மறையானதுமல்ல. முதலாளித்துவத்தின் கீழான தானியங்கிமயமாக்கல் தொழிலாளர்களை இடம்பெயர்க்கிறது என்பது உண்மைதான்; ஆனால் நமது விமர்சனம் கருவிகளை நோக்கி அல்லாமல், தொழிலாளர்களுக்கு எதிராக முன்னேற்றத்தை ஆயுதமாக்கும் அமைப்பையே குறிவைக்க வேண்டும். இதன் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவை எதிர்ப்பது என்பது, வேலை இழப்பு போன்ற அறிகுறிகளை முதலாளித்துவச் சுரண்டல் என்னும் ஆணிவேர்ப்பிரச்சினையாகத் தவறாகப் புரிந்துகொள்வதாகும்.
ஜனநாயகப்படுத்தலும் பெருநிறுவனங்களின் ஆதிக்கமும்
காப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களைக் கொண்டு செயற்கை நுண்ணறிவைப் பயிற்றுவிப்பதன் மீதான அறம் சார்ந்த எதிர்ப்பு மேலோட்டமான நியாயத்தைக் கொண்டிருக்கிறது; ஆனால் அது முதலாளித்துவத்தின் கோணலான தர்க்கத்திற்குள் மட்டுமே செல்லுபடியாகும். அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள் என்பவை பெருநிறுவனங்களின் கைகளில் உரிமையையும் லாபத்தையும் குவிப்பதற்காகவே உள்ளதேயன்றி, தனிப்பட்ட கலைஞர்களைப் பாதுகாப்பதற்காக அல்ல. உதாரணத்திற்கு, டிஸ்னி நிறுவனத்தின் இரக்கமற்ற காப்புரிமை அமுலாக்கமானது, பொதுவெளியில் உள்ள கதைகளைத் தோண்டியெடுத்து அது லாபமடைந்த அதன் சொந்த வரலாற்றுக்கு முற்றிலும் முரணானது. மறுபுறம், ஓப்பன்ஏஐ பெருமளவில் தரவுகளைத் திரட்டுவது, கூட்டுப் பண்பாட்டுச் செல்வத்தை விட நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமைக் குவிப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் அமைப்பின் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகிறது. சாமானியர்களால் முடியாத ஒன்றை, பெருநிறுவனங்கள் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லாமல் மீற முடியும். நடைமுறையில், காப்புரிமை தனிப்பட்ட கலைஞர்களை விட முதலாளிகளுக்கே பெரிதும் உதவுகிறது. "திருட்டு" என்பதற்காகச் செயற்கை நுண்ணறிவைத் தாக்குவது, கலைஞர்களை அவர்களின் சொந்தப் படைப்புகளிலிருந்தே அந்நியப்படுத்தும் அதே அறிவுசார் சொத்துரிமை அமைப்புகளை அறியாமலேயே நியாயப்படுத்துகிறது. சிறந்த கைகளில் கிடைத்தால் லட்சக்கணக்கானோரை அதிகாரப்படுத்தக்கூடிய ஒரு கருவியை உருவாக்கத் தன் சொற்கள் பயன்படுத்தப்படுவதை ஒரு பாட்டாளி வர்க்க எழுத்தாளன் வெறுக்க வேண்டுமா? உண்மையான முரண்பாடு செயற்கை நுண்ணறிவின் பயிற்சி முறைகளில் இல்லை, அதன் வெளியீடுகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதில்தான் உள்ளது.
லாப நோக்கங்களிலிருந்து விடுவிக்கப்படும்போது, திறந்த மூல (Open-source) செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகள் படைப்பூக்கத்தை முன் எப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகப்படுத்துகின்றன. ஒரு செவிலியர் ஒரு போராட்டச் சுவரொட்டியை வடிவமைக்கவும், ஒரு தொழிற்சாலைத் தொழிலாளி ஒரு தொழிற்சங்கச் செய்திமடலை உருவாக்கவும், அல்லது ஒரு வாடகைதாரர் வாடகை நிறுத்தப் போராட்டத்தின் சாத்தியக்கூறுகளை உருவகப்படுத்தவும் அவை வழிவகுக்கின்றன. இது ஸ்டார் வார்ஸ் கதையை ரசிகர்கள் மறுஆக்கம் செய்வதற்கோ அல்லது வார்ஹோலின் கலையை வீதியோரக் கலைஞர்கள் தங்கள் பாணியில் மாற்றுவதற்கோ எவ்விதத்திலும் குறைந்ததல்ல. இது கூட்டுப் பண்பாடு தன்னைத்தானே மறுவாசிப்பு செய்துகொள்வது மட்டுமே, இது எப்போதும் நிகழ்வதுதான். ஊதியம் பெறும் உழைப்பைத் தானியங்கி லாப இயந்திரங்களைக் கொண்டு மாற்றுவதற்காகப் பெருநிறுவனங்கள் இந்தக் கருவிகளை ஏகபோகமாக்கும்போதுதான் அச்சுறுத்தல் எழுகிறது. ஆனால் இதில் உள்ள முரண் என்னவென்றால், அடிமட்டத் தளங்களில் செயற்கை நுண்ணறிவைப் புறக்கணிப்பது நிறுவனங்களின் தத்தெடுப்பை எந்த வகையிலும் தடுக்கப் போவதில்லை. மாறாக, இது ஒரு வலிமையான கருவியைச் சத்துருவிடம் சரணடையச் செய்வதற்கே ஒப்பாகும். அமேசானும் மெட்டாவும் நமக்கெதிராகப் பயன்படுத்த கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் அதே ஆற்றலை, சுதந்திரமாகப் படைக்கவும், ஒன்றிணையவும், கற்பனை செய்யவும் நமக்கான உரிமையை நாம் ஏன் மறுக்க வேண்டும்?
முதலாளித்துவத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதற்காக அதனை எதிர்ப்பது பயனற்றது மட்டுமல்ல, எதிர்விளைவுகளையும் தரக்கூடியது. ஸ்டேபிள் டிஃப்யூஷன் போன்ற கருவிகள் மூலம் ஒரு தனிநபர் தனது எண்ணங்களைச் சித்திரமாக்கும் பரிசோதனைச் சந்தோஷத்தையும், பெருநிறுவனங்களின் வெகுஜன உற்பத்தியையும் படைப்பூக்கம் குறித்த விமர்சனங்கள் குழப்பிக்கொள்கின்றன. நமது பணி தனிப்பட்ட பயன்பாட்டைக் கண்காணிப்பதல்ல, கூட்டு உரிமைக்காகப் போராடுவதே. இந்தத் தொழில்நுட்பம் ஒருசில பெருநிறுவனங்களால் பதுக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, பொதுவான செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை நாம் கோர வேண்டும். மூலதனத்திடம் அதனைச் சரணடையச் செய்வது தோல்வியை உறுதி செய்யும்; அதனை மீட்டெடுப்பது எதிர்காலப் போராட்டங்களுக்கான நமது ஆயுதக் கிடங்கை விரிவுபடுத்தக்கூடும்.
படைப்பூக்கம் என்பது மனித உத்தேசம், கருவியின் வெளியீடு அல்ல
செயற்கை நுண்ணறிவுக்குப் "படைப்பூக்கம் இல்லை" என்ற வாதம், தொழில்நுட்பத்தையும் கலையின் இயல்பையும் ஒருசேரத் தவறாகப் புரிந்துகொள்கிறது. படைப்பூக்கம் என்பது கருவிகளின் உள்ளார்ந்த பண்பல்ல—அது மனித உத்தேசத்தின் வெளிப்பாடு. ஒரு கேமராவால் ஒரு புகைப்படத்தைத் தீர்மானிக்க முடியாது; கோணத்தையும், ஒளியையும், தருணத்தையும் தேர்ந்தெடுப்பது புகைப்படக் கலைஞன்தான். அதேபோல, உருவாக்கும் தன்மைகொண்ட செயற்கை நுண்ணறிவு வெறுமையிலிருந்து யோசனைகளை உருவாக்குவதில்லை. அது மனிதர்கள் தங்கள் தரிசனத்தை நனவாக்கப் பயன்படுத்தும் ஒரு கருவி மட்டுமே. செயற்கை நுண்ணறிவு "படைப்பாற்றல்" கொண்டதா என விவாதிப்பது, ஒரு தூரிகை நிலப்பரப்புகளைக் கனவு காணுமா என்று விவாதிப்பதைப் போலப் பொருளற்றது. கருவி சடத்தன்மை கொண்டது; கலைஞனோ உயிருள்ளவன்.
ஒரு கேமராவை விடச் செயற்கை நுண்ணறிவுக்கு எந்தக் கூடுதல் சுயாதீனமும் இல்லை. பூங்காவில் ஒரு பறவையை நான் புகைப்படம் எடுக்கும்போது, அதன் கலைத்தன்மை நான் அழுத்தும் பொத்தானிலோ, நான் சரிசெய்யும் குவியத்திலோ இல்லை; மாறாக, ஒளியும் நிழலும் விளையாடும் விதத்தை அறிந்துகொள்ளவும், இறக்கையின் சாய்வை முன்கூட்டியே கணிக்கவும், அசைவுக்கும் அசைவற்ற தன்மைக்குமான அந்த நுண்ணிய கணத்தின் இணக்கத்தை உணரவும் பல ஆண்டுகளாக நான் என் கண்களைப் பழக்கிய அதில்தான் உறைந்துள்ளது. [இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் போன்ற] படங்களைப் பதிவு செய்ய என்னை அனுமதிப்பது இந்தத் திறன்கள்தாம்.
என் கேமராவை ஒரு புதியவரிடம் கொடுத்தால், அவர் அதைக் கொண்டு சுவாரஸ்யமான எதையும் உருவாக்குவது கடினம். செயற்கை நுண்ணறிவும் இதே போலத்தான் செயல்படுகிறது. யார் வேண்டுமானாலும் "பிரமாண்டமான விண்வெளிப் போர்" என்று தட்டச்சு செய்யலாம்; ஆனால் நிறக் கோட்பாடு, கதைக்களத்தின் இறுக்கம், அல்லது பண்பாட்டு குறியீடுகள் குறித்த புரிதல் இல்லாமல், அதன் முடிவு வெறும் இரைச்சலாகவே இருக்கும். இதையே நாம் ஏஐ குப்பை என்கிறோம். உண்மையான உழைப்பு என்பது, மூல வெளியீட்டை ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த ஒன்றாக உருமாற்றும் மனிதனின் தேர்ந்தெடுக்கும் திறனில்தான் அடங்கியுள்ளது.
ComfyUI போன்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் ஏற்கனவே கலைஞர்களால், குறிப்பாகச் சிறிய ஸ்டுடியோக்களால், ஒன்றிணைந்து தங்கள் தரிசனங்களுக்கு உயிர் கொடுக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கருவிகள் வேலைப்பளுவை எளிதாக்குகின்றன; ஆரம்பகால வரைபிலிருந்து செம்மைப்படுத்தப்பட்ட இறுதிப் படைப்பிற்கு விரைவாக மாற அனுமதிக்கின்றன. அவை மீளச் செயல்படும் சுறுசுறுப்பான படைப்புச் செயல்முறையை எளிதாக்கி, பரிசோதனைகளை ஊக்குவித்து, எதிர்பாராத, புதுமையான முடிவுகளுக்கு வழிவகுக்கின்றன. கலைஞர்களைப் பதிலீடு செய்வதற்கு மாறாக, செயற்கை நுண்ணறிவு அவர்களின் படைப்புத் திறனை விரிவுபடுத்துகிறது; சிறிய குழுக்கள் மிகவும் லட்சியகரமான திட்டங்களைக் கையிலெடுக்க முடிகிறது.
செயற்கை நுண்ணறிவை "ஆன்மா இல்லாதது" என்று தாக்குபவர்கள், அதிகாரத்தைத் தங்கள் வசம் மட்டுமே வைத்துக்கொள்ளத் துடிக்கும் பழைய மனநிலையின் எச்சங்களையே மீண்டும் மீண்டும் உமிழ்கிறார்கள். 1950களில், ஃபோர்ட்ரான் போன்ற உயர்நிலை மொழிகளைப் பயன்படுத்துவது "ஏமாற்று வேலை" என்று நிரலாளர்கள் இகழ்ந்தார்கள்; உண்மையான நிரலாளர்கள் அசெம்பிளி மொழியில்தான் எழுதுவார்கள் என்று பிடிவாதம் பிடித்தார்கள். அவர்கள் துயரத்தைப் புனிதத்துடன் குழப்பிக்கொண்டார்கள், நினைவகத்தைக் கைகளால் நிர்வகிக்கும் அந்தச் சலிப்பூட்டும் வேலைதான் படைப்பூக்கத்தின் சாராம்சம் என்பது போல. இன்று செயற்கை நுண்ணறிவால் அச்சுறுத்தப்படுவதாக உணரும் கலைஞர்களும் அதே பிழையைத்தான் செய்கிறார்கள். ஃபோட்டோஷாப் தூரிகைகள் மீதான ஆளுமையோ, எண்ணெய் வண்ணங்களோ கலையை வரையறுப்பதில்லை; அவை ஒரு குறிப்பிட்ட ஊடகத்திற்காக வளர்த்துக்கொள்ளப்பட்ட தொழில்நுட்பத் திறன்கள் மட்டுமே. ஓர் ஊடகத்தின் வழியே கருத்துகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் திறனே மெய்யாகவே முக்கியமானது. கருவிகள் பரிணமிக்கின்றன, அதற்கேற்ப மனித வெளிப்பாடுகளும் தங்களை மாற்றிக்கொள்கின்றன. புகைப்படம் முதன்முதலில் தோன்றியபோது, இயந்திரத்தனமான மறுஉற்பத்தி கலையின் மரணம் என்று ஓவியர்கள் அறிவித்தார்கள். ஆனால் அது சர்ரியலிசம், அருவக் கலை, சினிமா போன்ற புதிய வடிவங்களை ஈன்றெடுத்து, கலையின் சாத்தியங்களை விரிவுபடுத்தியது.
ஒரு கேமராவிற்கும் செயற்கை நுண்ணறிவிற்கும் உள்ள உண்மையான வேறுபாடு அதன் வீச்சில் உள்ளதேயன்றி, அதன் சாரத்தில் அல்ல. கேமரா உலகத்தை இருப்பதைக் காண்கிறபடியே பதிவு செய்கிறது; செயற்கை நுண்ணறிவோ சாத்தியமான உலகங்களை உருவகப்படுத்துகிறது. ஆயினும் இரண்டுக்குமே எது முக்கியம் என்பதைத் தீர்மானிக்க ஒரு மனிதன் தேவை. நான் எனது பறவைப் புகைப்படத்தை எடுத்தபோது, பூங்காவையோ, பறவை இனத்தையோ, அந்த அமைப்பையோ கேமரா தேர்ந்தெடுக்கவில்லை. அதேபோல, ஒரு சைபர்பங்க் நகரமைப்பு இருள்சூழ்ந்ததாக இருக்க வேண்டுமா அல்லது கற்பனைநயம் மிக்கதாக இருக்க வேண்டுமா என்பதைச் செயற்கை நுண்ணறிவு முடிவெடுப்பதில்லை. அந்த உத்தேசம், அந்த அர்த்தத்தின் ஊடுருவல், மாற்ற முடியாதபடி மனிதனுக்குரியது. தானியங்கிமயமாக்கல் படைப்பூக்கத்தை அழிப்பதில்லை, அது உழைப்பை மறுபங்கீடு மட்டுமே செய்கிறது. கணிப்பான்கள் எப்படி எண்கணிதத்தின் சலிப்பிலிருந்து கணிதவியலாளர்களை விடுவித்ததோ, அதேபோலச் செயற்கை நுண்ணறிவு கலைஞர்களுக்கான தொழில்நுட்பத் தடைகளைக் குறைத்து, கருத்தாக்கத்தின் மீதும் விமர்சனத்தின் மீதும் கவனத்தைத் திருப்புகிறது.
செயற்கை நுண்ணறிவுக் கலை மீதான உண்மையான பதற்றம் என்பது அதிகார சமநிலையைப் பற்றியது. நிறுவனங்கள் திறமையை எண்ணெய் வண்ணங்கள், பைதான், அல்லது டிஎஸ்எல்ஆர் கேமராக்கள் போன்ற குறிப்பிட்ட கருவிகளுடன் சமன்படுத்தும்போது, அவற்றைக் கற்றுக்கொள்வதற்கான நேரமும் வளங்களும் உள்ளவர்களுக்கே அவர்கள் சலுகை அளிக்கிறார்கள். உருவாக்கும் தன்மைகொண்ட செயற்கை நுண்ணறிவு, அதன் அனைத்துக் குறைபாடுகளுடனும், அணுகலை ஜனநாயகப்படுத்துகிறது. ஒரு தொழிற்சாலைத் தொழிலாளி இப்போது தன் வாழ்க்கை வரலாற்றைப் படங்களுடன் விளக்க முடியும்; லாகோஸில் உள்ள ஒரு பதின்ம வயதினனால் ஒரு காமிக் புத்தகத்தை வடிவமைக்க முடியும். இதன் பொருள் ஒவ்வொரு வெளியீடும் "கலை" என்பதா? இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் ஒவ்வொரு படமும் கார்டியர்-ப்ரெஸ்ஸனின் புகைப்படம் அல்ல என்பதைப் போலத்தான் இதுவும். ஆனால் புதியவர்களை விலக்கிவைக்க, இந்தத் தடுப்பாளர்கள் "அசல் தன்மை" என்பதை எப்போதுமே ஆயுதமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கேமரா கலையைக் கொல்லவில்லை. அசெம்பிளி வரிசைகள் கைவினைத்திறனைக் கொல்லவில்லை. செயற்கை நுண்ணறிவும் படைப்பாற்றலைக் கொல்லப் போவதில்லை. கலை உற்பத்தி என்று நாம் நினைக்கும் பல விஷயங்கள் குறிப்பிட்ட தொழில்நுட்பத் திறன்களோடு வேரூன்றியவை என்பதை மட்டுமே அது அம்பலப்படுத்துகிறது.
இறுதியாக, செயற்கை நுண்ணறிவு மீதான "திறன்" குறித்தான விமர்சனங்கள் அதன் குறுகிய கால பார்வையாலேயே சரிந்துவிடுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு அதிநவீன மாடலை இயக்குவதற்கு அதிக மின்சாரத்தை எரிக்கும் ஜிபியு தரவு மையங்கள் தேவைப்பட்டன. இன்று, டீப்சீக் மாடல் ஒரு சாதாரணப் பயன்பாட்டு கணினியில் வெறும் 200 வாட்ஸ் மின்சாரத்தில் இயங்குகிறது. இந்தத் திசைவழி கணிக்கக்கூடியதே. வன்பொருள் மேம்பாடுகள், குவாண்டைசேஷன் மற்றும் திறந்த-மூல கண்டுபிடிப்புகள் கணிப்பொறித் தேவைகளை அபரிமிதமாகக் குறைத்துள்ளன.
செயற்கை நுண்ணறிவின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த உச்சக்கட்ட வளப் பயன்பாட்டை மட்டுமே விமர்சகர்கள் தேர்ந்தெடுத்துக் காட்டுகிறார்கள். அதே வேளையில், செயற்கை நுண்ணறிவின் ஓர் வெளியீட்டிற்கான ஆற்றல் தடம்பதிவு ஆண்டுதோறும் செங்குத்தாகச் சரிகிறது. 2020 இல் ஜிபிடி-3 ஐப் பயிற்றுவிக்க சுமார் 1,300 மெகாவாட் மணிநேரம் தேவைப்பட்டது; 2023 வாக்கில், அதே போன்ற மாடல்கள் 90% குறைந்த மின்சாரத்தில் நிகரான செயல்திறனை அடைந்தன. இந்த முன்னேற்றம் தொழில்நுட்ப முதிர்ச்சியின் இயற்கையான வளைவு. இந்தப்போக்குகள் எதிர்காலத்திலும் தொடரும் என்று நம்புவதற்கு எல்லாவிதமான காரணங்களும் உள்ளன.
திறந்த மூலமா அல்லது செல்வந்தர் ஆதிக்கமா
ஒரு தொழில்நுட்பமாகச் செயற்கை நுண்ணறிவை எதிர்ப்பது என்பது, மரங்களைப் பார்த்துவிட்டு காட்டைத் தவறவிடுவதற்குச் சமம். இந்தக் கருவிகளை இனி யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. எந்தவொரு அறச்சீற்றமும் இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை. 19-ஆம் நூற்றாண்டு ஆலை முதலாளிகள் எப்படி நீராவி இயந்திரங்களை இடைவிடாது துரத்தினார்களோ, அதே காரணத்திற்காகவே பெருநிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் பின்னால் ஓடும். செலவுகளைக் குறைக்கவும், தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை உடைக்கவும், அதிகாரத்தைக் குவிக்கவும் தானியங்கிமயமாக்கல் நிறுவனங்களுக்கு வழிவகுக்கிறது. முதலாளிகளிடம் விடப்பட்டால், செயற்கை நுண்ணறிவு என்பது தொழிலாளர்களின் சுயாட்சியை நசுக்கும் மற்றொரு தனியார்மயமாக்கப்பட்ட ஆயுதமாகவே மாறும். இருப்பினும், அது பொதுவெளியில் உருவாக்கப்பட்டால், கூட்டுப் படைப்பாற்றலை விரிவுபடுத்துவதற்கான ஜனநாயகப்படுத்தப்பட்ட கருவியாக மாறக்கூடிய ஆற்றல் அதற்குக் கிடைக்கும்.
இந்தக் கதையை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். இணையம் என்பது பரவலாக்கத்தின் வாக்குறுதிகளோடுதான் தொடங்கியது; ஆனால் திறந்த நெறிமுறைகளைக் கண்காணிப்பின் பெரும் மதில்களாக மாற்றிய கூகுள் மற்றும் மெட்டா போன்ற ஏகபோக நிறுவனங்களால் அது கையகப்படுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு இப்போது அதே நாற்சந்தியில் நிற்கிறது. செயற்கை நுண்ணறிவு குறித்து அறம் சார்ந்த கவலைகள் உள்ளவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைக் கைவிட்டால், அதன் வளர்ச்சி தவிர்க்க முடியாமல் எவ்விதக் கூச்சமும் இல்லாதவர்களின் கைகளில் மட்டுமே விடப்படும். இதன் விளைவு, பொதுமக்களின் அணுகலுக்கு அப்பாற்பட்ட விலையில், லாபத்திற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டு, பங்குதாரர்களைத் திருப்திப்படுத்தத் தணிக்கை செய்யப்பட்ட தனியுரிம மாடல்களாக நிறுவனங்களின் ஏபிஐ சுவர்களுக்குள் பூட்டப்படும். டிஸ்னி நிறுவனம் "தேவதைக் கதைகள்" சார்ந்த பிம்பங்களை உருவாக்கும் பிரத்தியேக உரிமைகளைத் தன்வசம் வைத்திருப்பதும், அமேசான் தன் பிரைம் தொடர்களுக்காக "இயக்கநிலைக் கதைசொல்லல்" கருவிகளுக்கான காப்புரிமையைப் பெறுவதும் சாத்தியமாகும் ஓர் எதிர்காலம் அது. தொழில்நுட்பம் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இதுவே தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும். முதலாளித்துவத்தின் கீழ், புதுமைகள் எப்போதுமே பொதுமக்களின் நலன்களுக்கு மாறாக ஏகபோக அதிகாரத்திற்கே சேவை செய்கின்றன.
மறுபுறம், திறந்த-மூல செயற்கை நுண்ணறிவு முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு மாற்றுப்பாதையை வழங்குகிறது. 2022-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஸ்டேபிள் டிஃப்யூஷனின் கசிவு இதை நிரூபித்தது: சில மாதங்களிலேயே, கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் குழுக்கள் அதைத் தொழிற்சங்கப் பிரச்சாரம் தொடங்கிப் பழங்குடி மொழிகளைப் பாதுகாப்பது வரை அனைத்திற்குமான ஆயுதமாக மாற்றினார்கள். தொழில்நுட்பம் தற்சார்புடையது; ஆனால் அதன் பயன்பாடு வர்க்கப் போராட்டத்தின் ஆயுதமாக மாறுகிறது. பொதுவான செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு, வெளிப்படையான மாடல்கள், சமூகம் சார்ந்த பயிற்சித் தரவுகள் மற்றும் தொழிலாளர் கட்டுப்பாட்டிலான நிர்வாகம் ஆகியவற்றுக்கானதே இந்தப் போராட்டம். இது பண்பாட்டு உற்பத்திக்கான கருவிகளுக்கான போராட்டம். "நடுநிலையான தொழில்நுட்பம்" என்று நாம் அப்பாவியாக நம்புவதால் அல்ல; மாற்றுவழி என்பது நிலப்பிரபுத்துவக் கட்டுப்பாடு என்பதை நாம் அறிவோம் என்பதாலேயே.
செயற்கை நுண்ணறிவுக் கலைக்கு எதிரான பின்னடைவு, பெரும்பாலும் டிஜிட்டல் யுகத்திற்கு முந்தைய கைவினைத்திறன் மீதான ஏக்கத்திலேயே நிலைத்திருக்கிறது. ஆனால் "பட்டினிகிடக்கும் கலைஞனின்" போராட்டத்தைக் காதலோடு பார்ப்பது முதலாளித்துவக் கட்டுகதைகளுக்கே சாதகமாக அமையும். நிலப்பிரபுத்துவத்தின் கீழ், எழுத்தர்கள் அச்சு இயந்திரத்தைக் கண்டு புலம்பினர்; தொழில்மயமாக்கலின் போது நெசவாளர்கள் தறிகளை அடித்து நொறுக்கினர். இன்றைய கலைஞர்களும் அதே நாற்சந்தியில்தான் நிற்கிறார்கள்: ஒன்று தங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும், அல்லது நசுக்கப்பட வேண்டும். தங்களை மாற்றியமைத்துக்கொள்வது என்பது சரணடைவதல்ல; மாறாக, திறம்பட ஒன்றிணைவதற்கான வழிகளைக் கண்டறிவதாகும். இந்தக் கொள்கை நடைமுறையில் செயல்பட்டதற்கான ஓர் உதாரணம், 2023-ஆம் ஆண்டு ஹாலிவுட் எழுத்தாளர்கள் தங்களின் ஒப்பந்தங்களில் செயற்கை நுண்ணறிவிற்கான கட்டுப்பாடுகளைக் கோருவதற்குப் கூட்டுபேரத்தைப் பயன்படுத்தியது.
கலைஞர்கள் தங்களை நிலைப்பொருள் சார்ந்து வியூகரீதியாக ஒழுங்கமைத்துக்கொண்டால், அவர்களால் பயன்படுத்தக்கூடிய பேரம் பேசும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது. செயற்கை நுண்ணறிவின் துணைகொண்ட காமிக் புத்தகங்களில் மனிதக் கண்காணிப்பைக் கட்டாயமாக்க விளக்கப்படக் கலைஞர்கள் தொழிற்சங்கமாக இணைந்தால் என்ன ஆகும்? தங்கள் பாணியில் ஒரு மாடல் பயிற்றுவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் இசையமைப்பாளர்கள் ராயல்டி கோரினால் என்ன ஆகும்? பத்தாண்டுகால இருட்டடிப்புக்குப் பிறகு விஎஃப்எக்ஸ் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க ஸ்டுடியோக்களை வற்புறுத்தியதும் இதே தோழமை உணர்வுதான்.
செயற்கை நுண்ணறிவின் "ஆன்மா இல்லாத் தன்மை" குறித்து அறவுரை கூறுவது ஒரு முட்டுச்சந்து. முதலாளிகளுக்கு ஆன்மாக்களைப் பற்றிக் கவலையில்லை, அவர்களின் இலக்கு உபரி மதிப்பைச் சுருட்டுவதே. தன் சொந்த மாடலைப் பயிற்றுவிக்கும் ஒவ்வொரு தொழிலாளர் கூட்டுறவும், தனியுரிமக் கருவிகளைத் தவிர்க்கும் ஒவ்வொரு இண்டி கேம் ஸ்டுடியோவும், தங்கள் குரல் ஒலிக்கச் சுதந்திரமான ஏஐ கருவிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு தொழிலாளியும் கார்ப்பரேட் கட்டுப்பாட்டைச் சிறுகச் சிறுகச் சிதைக்கிறார்கள். அதிகாரத்தை மறுபங்கீடு செய்வது ஒரு பொருள்முதல்வாதப் பணியாகும். நீராவி இயந்திரங்கள் அழித்த குடிசைத் தொழில்களுக்காக மார்க்ஸ் கண்ணீர் வடிக்கவில்லை. உற்பத்திச் சாதனங்களைச் சமூகமயமாக்க வேண்டும் என்றே அவர் வாதிட்டார். செயற்கை நுண்ணறிவைத் தடுத்து நிறுத்துவது என்பது சாத்தியமான இலக்கல்ல; ஆனால் அதன் ஈவுத்தொகை ஒருசிலருக்கு அல்லாமல் பலருக்கும் சென்றடைவதை நம்மால் உறுதிசெய்ய முடியும்.
செல்வந்தர்கள் செயற்கை நுண்ணறிவின் அறம் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கவில்லை, இந்தத் தொழில்நுட்பத்தை உரிமையாக்கிக் கட்டுப்படுத்த அவர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள். கடந்த கால ஏக்கங்களில் பதுங்குவதா அல்லது நமது எதிர்காலத்தில் நமக்கான பங்கைக் கோரிப் போராடுவதா என்பதே நமக்கான தேர்வு. பயிற்றுவிக்கப்படும் ஒவ்வொரு திறந்த-மூல மாடலும், உருவாக்கப்படும் ஒவ்வொரு தொழிலாளர் கூட்டமைப்பும், மறுபேரத்திற்கு உள்ளாகும் ஒவ்வொரு ஒப்பந்தமும் முன்னோக்கிய ஒரு படியாகும். அச்சு இயந்திரமும் இணையமும் எப்படித் தடுக்கப்படவில்லையோ, அதேபோலச் செயற்கை நுண்ணறிவும் தடுத்து நிறுத்தப்படப் போவதில்லை. இயந்திரங்கள் எதிரிகள் அல்ல. உரிமையாளர்களே எதிரிகள்.