Friday, March 13, 2009

இரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள்


கேரென் ப்ரெஸ்

ஆங்கிலத்தில் எழுதும் இந்தத் தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர், தனது இளமைக்காலந்தொட்டே இனவெறியாட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தென்னாப்பிரிக்க சோசலிச அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புடைய அவர். மக்கள் கல்வி தொடர்பான பல பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது கவிதைகள் நளினமானவை. அமைதியான, ஆனால் அழுத்தமான தொனியில் அவலம், சோகம், களிப்பு, நையாண்டி, மௌனம் முதலிய உணர்வுகளை வெளிப்படுத்துபவை. தான் வாழ நேர்ந்துள்ள நேர்மையற்ற, ஈனத்தனமான சமுதாயத்தில் தனக்கும் தன் கவிதைகளுக்குமான கண்ணியத்தையும் மதிப்பையும் தக்கவைத்துக் கொள்வதையே முதன்மையான கடமையாகக் கருதிக் கவிதைகள் எழுதி வருகிறார். அவரது மூன்று கவிதைகளின் தமிழாக்கங்கள் இங்கு தரப்படுகின்றன.


தென்னாப்பிரிக்கக் குடியுரிமை பெற ஒரு விண்ணப்பம்

நாடே
மலைத்தொடரில் விரியும் உனது நாட்கள்
எனது வருகையை அணைத்துக்கொள்ளுமா?
எதற்காகவோ காத்திருக்கும்
வெறுமையான சுவர்கள் உள்ள ஒரு அறையில்
நான் காத்திருக்கிறேன்.
கடலிடையே, தெருக்களிடையே, வானத்திடையே
நான் செல்கிறேன்
என்னுடன் உரையாட அவற்றுக்கு நேரமில்லை.
நாடே
உனது நிலா வெளிச்சம் என்னைப் பருகுவதற்காக
நான்தூசியாக வேண்டுமா?
எனது ஜன்னலை நீ திறப்பதில்லை.
ஜன்னல் கண்ணாடி மீது சாய்ந்து கொண்டிருக்கிறேன்
இரவு முழுவதும் கடல் காகங்களுடன் நீ பேசிக்கொண்டிருப்பது
எனக்குக் கேட்கிறது.
நான்ஒளிமயமானவள்
ஓளியூடுருவ முடியாதவள்
உரத்துச் சொல்லப்படக் காத்திருக்கும்
ஒரு மந்திரச் சொல்
நாடே, எனது நிழலாக மாறு
நான் உனது உடலாக அமைவேன்.
(From the collection Home, P.O. Box 1384 Sea Point 8060, South Africa)


19 ஆம் நூற்றாண்டின் நன்றியுணர்வு

கப்பல் தளபதிகள் இங்குதான் வருவர்
நங்கூரம் பாய்ச்ச
இருண்ட குரூரங்களை உண்டு பெருத்த கனவுகளை
இறக்கி வைத்தவாறு
தமது தாடிகளிலிருந்து அற்பத்தனங்களின் துகள்களை
தட்டியுதிர்த்தவாறு
அவர்களது மனைவியர் அமைதியான மண்ணைத்
தோண்டுகின்றனர்
குழந்தைகளை, பணியாட்களை, கடவுளின் கருணை
என்ற பொறிகளை விதைக்கின்றனர்
சிறுத்தைகளும் காடுகளும் அண்டவிடாமல்
திருப்பி அனுப்பப்படுகின்றன.
கரகரப்பான குரலுடைய குதிரை வீரனிடமிருந்து
வாங்கப்பட்ட சிங்கத்தின் புட்டம் போன்ற நிலம்
வீடுகளின் வரவேற்பறையிலிருந்து பார்த்து ரசிக்கும்
ரோஜா மலர்களாய் துண்டு போடப்படுகின்றது
உள்ளுர்க் குடிகளின் அம்மணத்தை மறைக்க
ஆடைகள் கொடுக்கப்படுகின்றன
ஆனால் அவர்கள் ஓயாது இடம் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.
புகையிலைப் பை ஒவ்வொன்றையும் நிரப்புகிறது
நகராட்சி அதிகாரம்.
கடலுங்கூட மந்தமாக இருக்கக் கற்றுக்கொண்டுள்ளது.
இரவில் மட்டுமே மூடுபனி எழுகின்றது
மணல் மீது மௌன நடை போட்டவாறு
பாறைகளின் மீது கப்பல்கள் மோதிச் சிதறுவது
கண்கூடாகத் தெரிகிறது
மூழ்கிக் கொண்டிருப்பவர்களின் ஓலத்தைக் கேட்டு
கப்பல் தலைவர்கள் புருவத்தை நெறிக்கிறார்கள்
அவர்களது பேரப்பிள்ளைகளோ
அந்தக் காட்சியைப் பார்க்க கூடுகின்றனர்
மிட்டாய் வண்ணங்களிலான கோடுகள் போட்ட
தொப்பிகளை அணிந்தவாறு.
அவர்கள் யாருக்கேனும் நன்றி சொல்ல வேண்டுமோ?
தூக்கிலிடப்பட்டவர்களின் மலையிலிருந்து
வீசுகிறது காற்று
நீங்கள் தான் தப்பித்துவிட்டீர்களே
என்பதை நினைவுறுத்தியவாறு.
பொதுக் குளியலறைகளுக்குச் செல்ல
அவர்களை வண்டிகளில் வைத்து
நகர்த்திச் செல்கின்றன கறுப்புக் கைகள்
அவர்களது மனைவிமார்கள்
விதவிதமான சவமாலைகளைத் தொடுப்பது எப்படி
எனத் தமக்குள்ளேயே பேசிக்கொள்கின்றனர்
அவர்களது சருமத்தை வெய்யில் உரித்தெடுக்கிறது.


(From the collection Echo Location-A Guide to Sea Point for Residents and for Residents and Visitors, Gecko Poetry, Umbilo, Durban 4001, South Africa)

அவளைத் தேடிக் கொண்டிருக்கிறான்...

அனைவரும் சென்ற பிறகு
அந்த இடத்திற்குத் திரும்பிவந்தான்
மணலில் மண்டியிட்டுத் தோண்டினான்
அவளை வெளியே எடுத்துவர.
சடலத்தைப் புதைக்கப் பயன்படுத்தும் மண்வெட்டியால்
தோண்ட முடிவதைக் காட்டிலும் ஆழமாக
உதிரும் மணல், அக்குள் வரை.
அப்படியும் அவனது விரலிடுக்குகளுக்கு அகப்பட்டதெல்லாம்
சின்ன வெள்ளை நண்டுகள் மட்டுமே
தொடர்ந்து தோண்டினான் கைகளால்
கடலேரி முழுவதிலும், அவளை நினைத்து அழுதுகொண்டே
மண்ணைப் பிய்த்து எறிந்தவாறு
அவளது சுவாசம் அவன் காதை நெருடுகிறது
நிமிர்ந்து பார் நிமிர்ந்து பார்
மரகதப் பச்சை நெஞ்சுடைய தேன் சிட்டின்
மேலெழும்பும் சிறகடிப்பின் மீது
நான்பறந்து கொண்டிருக்கிறேன்
நிமிர்ந்து பார், என் அன்பே
நான் அப்பொழுதே தப்பிவிட்டேன்
என்றாள் அவள்
மனதினூடாகத் தோண்டிக் கொண்டிருந்த
அவனுக்குக் காதில் எதுவும் விழவில்லை
அவன் நிமிர்ந்து பார்ப்பதற்காக
அவள் காத்துக் கொண்டிருக்கிறாள்.

(From the collection Home, P.O. Box 1384 Sea Point 8060, South Africa)

அன்ட்யெ க்ரோக் :

தென்னாப்பிரிக்காவின் நிகழ்கால முக்கியக் கவிஞர்களிலொருவராகக் கருதப்படும் இப்பெண் கவிஞர், "ஆப்பிரிக்கான்ஸ்' மொழியில் கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதி வருகிறார். அண்மைக்காலம் வரை தென்னாப்பிரிக்காவில் ஆட்சியதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருந்த "ஆப்ரிக்கானர்' இனத்தில் (இவர்கள் டச்சுக்காரர்களின் ஒல்லாந்தியர்களின் வம்சாவழியினர்) பிறந்திருந்தாலும் அவ்வினத்தினரின் இனவெறியையும் இனவெறியாட்சியையும் தன் இளையப் பருவத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளார்.

இனவொதுக்கல் (Apartheid) ஆட்சி முடிந்த பின் அவ்வாட்சியின் கீழ் நடந்த கொடூரமான சித்திரவதைகள், ஒடுக்குமுறைகள் போன்ற மனித உரிமை மீறல்களையும் இனவெறிக்கு எதிராகப் போராடிய குழுக்களும் அமைப்புகளும் கையாண்ட வன்முறைகளையும் தீர விசாரித்து, நீதியையும் உண்மையையும் நிலைநாட்ட அமைக்கப்பட்ட உண்மையறியும் ஆணையத்தின் செயற்பாடுகள் குறித்து விரிவாக, விமர்சன நோக்குடன் எழுதியுள்ளார். இவரது கவிதைகள், தூய்மை, காதல், ஊடல், கூடல் போன்றவற்றைப் பேசும் அகப்பாடல்களாக ஒரு புறமும் அரசியல், தத்துவம், அழகியல், வரலாறு முதலியவற்றை விவாதிக்கும் புறப்பாடல்களாக மற்றொரு புறமும் விரிவடைகின்றன. முழுக்க முழுக்க அரசியலின் தர்க்க வாதங்களுக்குள்ளேயே சிக்கிப்போய்விட்ட ஒரு சமுதாயத்தில் கவிதையிள் அடையாளம். இருப்பு என்ற பிரச்சினைகள் அவரது கவிதைகளில் அலசி ஆராயப்படுகின்றன. அவரது கவிதையொன்று (ஆங்கிலம் வழி) தமிழாக்கம் செய்யப்பட்டு இங்கு தரப்படுகின்றது.


பேச்சுமொழி

சொற்களில்
பயனற்ற யுகங்களில்
நான் அப்பட்டமாக
ஊறித் திளைப்பதால்
பொய் சொல்கிறேன்
என்று எனக்குத் தோன்றுகின்றது
இத்தனை அநீதிகளுக்கு நடுவே
கவிதை ஒரு சொகுசாக நீடித்தால்
அதுவும் கூட ஒரு பொய்யாகி விடுகிறது.
நான் அநீதிகளின்
எதிர்க்கரையில் வாழ்கிறேன்
அதனால்தான்
எனக்குள்ளே
குரல் நரம்புகளை மீட்டி
சுருதி சேர்க்க
எனக்கு நேரமிருக்கிறது.
நான் இதைச் செய்வதில்
என்ன தவறு?
இந்த நாடு ஏற்கனவே பாழடைந்துவிட்டது.
கட்டளையிடுகிறார்கள்
சொற்கள் ஏ.கே. 47களாக வேண்டும்
சொற்கள் எப்போதும் போராட வேண்டும்
கவிதை பயனுள்ளதாக இருக்க வேண்டும்
செயலாக வேண்டும்
போராட்டங்களை விபரிக்க வேண்டும்
நிலைப்பாடு மேற்கொள்ள வேண்டும்
களைகள் ரோஜாக்களைவிட வலிமையானவை
விதைக்கப்பட்ட கவிதை
ஒலி மழையில் நனைந்து
காடாக வளர்கிறது.
(அரசியலின் மூடத்தனத்திலிருந்து
இந்த கவிதையை
நான் எப்படி பாதுகாப்பது?
சோகத்தில் நான் ஆழ்ந்திருக்க
என்னை சந்தேகிக்கிறார்கள்
எனது சாதாரணச் சொற்களைக்கூட
ஏற்க மறுக்கிறார்கள்.)
உனது கண்பார்வையின் வீச்சு நிற்கும் இடத்தில்
மூச்சுக் காற்றுக்கு அந்தப் பக்கமாக இரைகின்ற
கவிஞனின் கேட்கப்படாத கவிதை
என்னை வெட்கமுறச் செய்கிறது.
அங்கு கற்கள் பாவிய சாலையில்
கறுப்பர் குடியிருப்பில் உள்ள கடைக்கு அருகே
விடியலுக்கு முன்னே
யாரேனும் ஒருவர் காணாமல் போயிருக்கலாம்.
ஏதொவொரு போரில் சண்டையிடுவது போல
காற்று வீசுகிறது.
உலகின் முக்கால் வாசிப்பேர் வாழும்
நகரக் குடியிருப்புகளில்
குழந்தைகள் கால்பந்து ஆடுகின்றன.
அங்கு அவர்கள் நியாயமாகவே
சமத்துவத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
உன்னைப் போலவே
கூச்சத்துடன், தைரியத்துடன் அல்லது
மடத்தனமாக
அல்லது ஒருவேளை நம்மைப் போலவே
சோம்பேறிகளாக, ஊழல் படிந்தவர்களாகக்
காத்திருக்கின்றனர்.
அவர்கள் கையிலிருந்து தொங்குகின்றது
நம்பிக்கை, பசி, கனவு ஆகியவற்றால்
பின்னப்பட்ட இந்த வஞ்சகக் கம்பளம்
ஆனால் கவிஞனோ
ஒதுங்கி நிற்கிறான்.
கோரிக்கை மனுக்கள்
அநீதியான தீர்மானங்கள்
அவன் காதுக்கு எட்டுகின்றன.
அவன் கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டான்
கவிதைக்கு இடமில்லை
குளிரில் நீலம் பாரித்து நிற்கிறான்
சிந்திக்கும் கவிஞன்.
மிக மெல்லிய குரலில்
தான் கைது செய்யப்பட்டதை
அவள் மீண்டும் விவரிக்கிறாள்
அவளது சொற்கள்
நாக்கிலேயே கரைந்து விடுகின்றன
அவை
அச்சில் இல்லை
புகைப்படங்களில் இல்லை
புள்ளிவிவரங்களில் இல்லை
எல்லா இடங்களிலும் ஈரம் படிந்துள்ளது.
காணாமல் போனவர்கள்
சித்திரவதைகள்
அனாமதேய மரணங்கள் பற்றிய
வதந்திகள்.
மரநிழல் படிந்த புறநகர்ப்பகுதிக்குள்
போராட்டம்
வடிந்து விழுகிறது
காதுகளுக்கு எட்டாத
கோபக் கூச்சல்களின் ஊடாக
இது வதந்திகளின் நாடாகிவிட்டது.
எனது புலன்களால்
இலைகளிலிருந்து ஓலங்களைப்
பிரித்து எடுக்க முடியாமல் போனால்
மளிகைக் கடைகளுக்கு வெளியே உள்ள
தடுப்பு வேலிகளிலிருந்து இரத்தத்தைப்
பிரித்து எடுக்க முடியாமல் போனால்
அல்லது
எனது மேசைக்கு அருகே உள்ள தடுப்புகளிலிருந்து
மரணத்தைக் கொத்தி எடுக்க முடியாமல் போனால்
உண்மைக்காக எப்போதும் போராடும்
எழுதுகோலும் தாளும் நடத்தும்
துப்பாக்கி சண்டையில்
மனம் இறுகி நான் இறப்பேன்.
எல்லா எழுத்தாளர்களும்
மடிந்துவிட்டனர் அல்லவா
அவர்களால்
ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றியோ
ஒடுக்கப்பட்டவர்களுக்காகவோ
எழுதமுடியாது
ஒடுக்கப்பட்ட எழுத்தாளன்
கோபத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறான்
இதைத்தான் சொல்கிறார்கள்
""அழகியல் மட்டுமே ஒரே அறநெறி''
என்றும் அவர்கள் சொல்கிறார்கள்
ஆனால் காலத்தின் தேவைகளோ
நடுநிலை எதையும் சகித்துக்கொள்வதாக இல்லை
இரன்டு தீமைகளில்
எதையும் நான் தெரிவு செய்யவில்லை.
பேராசையும் இழித்துரைப்பும் மண்டிக்கிடந்த
ஒரு குலத்தில் நான் பிறந்தேன்
எப்பொழுதும் நான் தனிமையானவளாகவே
என்னை உணர்ந்தேன்

எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு புதர்.
எனக்கும் படுகொலைகளுக்குமிடையே ஒரு புதர்.
பசி, வீடின்மை, நிலமின்மை ஆகியவற்றை எதிர்கொள்ள
என்னை எதுவுமே ஒரு போதும் ஆயத்தப்படுத்தியதில்லை.
இணைப்புப் பாலமொன்று அமைக்க
நான் முயற்சி செய்கிறேன்
ஆனால்
எல்லாமே பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன
நான் ஒரு வழிகாட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
பிரச்சாரம், வாய்வீச்சு
ஆகியவற்றில் எச்சரிக்கையாக இருங்கள்
தன்னுணர்வோடு சொல்லப்படும் நயம் கூட இல்லாத
பொய்கள் எனும் சாட்டையடியின் கீழ்
வெளிவரும் முரட்டுத்தனமான சொற்றொடர்களில்
எச்சரிக்கையாக இருங்கள்
அழகியலால் எப்போதேனும் பயனுண்டா?
உயிர் பிழைத்தலை ஆய்ந்தறிவதை
நான் ஒருபோதும் நிறுத்துவதில்லை
இந்த நொய்மையான மென்மையான
அளவுகோலைக் கொண்டு
நான் ஒவ்வொரு உறவையும்
நேர்மையாக ஆய்வு செய்கின்றேன்
மூச்சுவிட, மூச்சுவிட, ஆம்! மூச்சு விடுவதற்காகவே
இதைச் செய்கிறேன்
மொழி ஒரு போதும்
பயனற்றதாகவோ
போலியானதாகவோ இருந்ததில்லை
ஆனால் கவிஞன் தன் கவித் தொழிலை
மேற்கொள்ள விரும்பினாலும்
அரசியல் சொற்கள் அணிவகுத்து முன் சென்றாலும்
அநீதிகள் என்னவோ நிஜமானவையே.
நான் எழுதுவதில்
எனக்குப் பிறகும் எஞ்சுபவை
பொய்க்கும் ஆரவார வெடிகுண்டுக்கும்*
இடையே நடக்கும் பழங்காலச் சண்டையினுடாகத்
துளிர்விடும்.

* ஆரவார வெடிகுண்டு: தென்னாப்பிரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டிலிருந்து தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முதலிரண்டு ஆண்டுகள் முடிய, அங்கு குடிபெயர்ந்த டச்சு (ஒல்லாந்திய) வம்சாவழியினரான போயர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்குமிடையே நடந்த போரில் இது போயர் யுத்தம் என அழைக்கப்படுகிறது பயன்படுத்தப்பட்ட ஒரு நூதனமான வெடிகுண்டின் பெயர் லிட்டெட்(Lyddite) புழுதியையும் மண்ணையும் கிளப்பிக்கொண்டு பேரொலியோடு வெடிக்கும் அந்த குண்டு பல சமயங்களில் குறி தவறவும் செய்யும். மூலக் கவிதையில் பயன்படுத்தப்பட்டுள்ள Lyddite என்ற சொல் இங்கு "ஆரவார வெடிகுண்டு' எனத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
(From the collection Down to the Last Skin. Random Poetry (Random House), Johannesburg, 2000)
THANKS:www.keetru.com

Monday, March 09, 2009

லியனார்ட் கோஹன் கவிதைகள்


இரங்கற்பா

சிதறிவிழும் மலை நதிகளினூடே
அவன் எங்கு உள்ளான் என்று காணச்
செல்லாதீர்கள்;
அவை கடவுள் உருவாக்கியபோது இருந்ததைவிட
இப்போது மிகவும் குளிரால் உறைந்து கிடக்கின்றன.
துண்டு துண்டாய்க் கிடக்கும் அவனுடலைத் தேடி
வலிமையுடன் நகரும் நதிகளையும் துழாவாதீர்கள்
அல்லது பாறைகளையும் ரத்தக் கசிவுகள் தேடிப்
புரட்டிப் போடாதீர்கள்;
ஆனால் வெம்மை கொண்ட உப்புக் கடல்களின்
மெல்லிய அலை கொண்ட பசும் நீர்ப்பரப்பினூடே
அவன் முகடுகள் நோக்கிப் பயணம் செய்திருக்கக்கூடும்
நீரில் அலைந்து திரியும் வண்ணமயமான மீன்கள்
பனி பொதிந்த அவன் உடலைச் சீண்டி
அலைகளின் ரகசியக் கூடுகளை அவனது
காற்றில் சிறகடிக்கும் கப்பற் பாயின் கீழ் அமைக்கும்.


வடு எதனையும் பனி விட்டுச் செல்லாதபோது


இருண்ட பசுமையான மலையின்மீது
வடு எதனையும் பனி விட்டுச் செல்லாதபோது
உன் உடலின் மீது என்னுடல் எந்த
வடுவையும் விட்டுச் செல்வதில்லை
எப்போதும் செல்லாது.

காற்றும் கழுகும் மோதிக் கொள்ளும்போது
எதுதான் இறுதியாகக் கிட்டும்?
இவ்வாறே நானும் நீயும் நம்மை எதிர்
கொண்டு, புரண்டு பின் உறங்கிப் போவோம்.

பல இரவுகள் நிலவும் நட்சத்திரங்களுமின்றித்
தோன்றும்போது நாமும்
ஒருவர் மற்றவரிடமிருந்து நீண்ட தொலைவு
விலகிச் செல்லும்போது
பிரிந்து கிடக்கத் தோன்றுமோ.

(மான்ட்ரியல் நகரில் பிறந்த நவீன ஆங்கிலக் கவிஞரான லியனார்ட் கோஹன் 'பீட்' பாடகர்களை அடியற்றித் தமது கவிதைகளை எழுது பவர். அமைப்புகளுக்கெதிரான குரலை வெளியிடும் தம் கவிதைகள் மூலம் புதிய மதிப்பீடுகளுக்கான முயற்சிகளை உருவாக்கவும் பாடுபடக்கூடியவை அவை. இனக் கலவரங்களுக்கெதிரான மிகவும் அரசியல் நிலைப்பாடுடைய குரல் இவரது. பத்து கவிதைத் தொகுதிகளுக்குமேல் பதிப்பித்துள்ளார்.)
Thanks:www.keetru.com

Friday, March 06, 2009

ஐரோப்பாவின் மனசாட்சி நீட்சே


“தத்துவ அறிஞர்” என்னும் சொல்லின் திட்டமான கருத்துப்படி ஆராயப் புகுந்தால் நீட்சே புலவர், சமூகவியலாளர் என்ற வகையில் அடங்குவாரேயன்றித் தத்துவ அறிஞர் என்ற வகையில் அடங்க மாட்டார். மேலும், அவர் ஓர் அனுபூதிமான். ஐரோப்பிய அனுபூதிமான்கள் வரிசையிலே அவர் ஒருவராய் இருக்கின்றார். நீட்சேயின் கொள்கைகள் ஆழமற்றவையானாலும், பிளேக், விட்மன் முதலிய ஞானிகளின் குரலையே அவரிடத்தும் கேட்கின்றோம். இம்மூவரும் இக்கால ஐரோப்பாவின் சமயக் கருத்தைக் கூறும் ஒருமை நெறியாளர். இவர்களுடைய மதம் கருத்துவாதம் சார்ந்த தனித்துவம் எனலாம். நீட்சேயின் தற்படைப்புத் திறம் விளக்கமில்லாத செயற்கையான புதுமையிலே தங்கியிருக்கிறதெனக் கூற முடியாது. ஆனால், மிகப்பழையதொரு கொள்கையை அவர் கவிதைப் பண்போடு திருப்பிக் கூறுகிறார். அவ்வளவுதான் என்று வைத்துக்கொள்வோமானால், அவர் என்றுமே மேற்கொள்ளாத சில கோட்பாடுகளை நாம் மறுத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் உண்டாகாது.

மிகைபடக் கூறும் தன்மையும், காரசாரமான போக்கும் அவருடைய நூலிலே ஓரளவு காணப்படுகிறதென்பது உண்மையே. ஆனால், தகுதியற்ற மதிப்பீடுகள், போலியாசாரக் கொள்கையாளர் காட்டும் ஒழுக்கம், பாசாங்கு என்பவற்றுக்கெதிராக ஆர்வத்தோடு கூறும் கண்டனமாகவே அöது அமைந்திருக்கிறது. இந்தக் கண்டனத்தை மக்கள் மிக்க வெறுப்போடு ஏற்றனர் என்பதைக் காணும்போது, நீட்சே ஒருசமயம் ஒரு தீர்க்கதரிசியாய் இருக்கலாமென்றும் எண்ண வேண்டியிருக்கிறது. அவர், கட்டடம் எழுப்புவோர் கழித்துவிட்ட கல்லைப் போன்றவர்; "மக்கள் உன்னை ஏளனஞ் செய்தால் உனக்கு மங்களம் உண்டாக” என்னும் முதுமொழிக்கு இலக்கணமானவர். நீட்சேயின் “அதிமனிதன்” என்னும் அழகிய கோட்பாடு விசேடப் பொருளுடையது. இது சீனருடைய அதீத மனிதன் என்னும் கோட்பாட்டையும், இந்தியத் தத்துவ தரிசனங்களிலே கூறப்படும் மகாபுருடன், போதிசத்துவர், சீவன்முத்தர் என்னும் கோட்பாடுகளையும் ஒத்தது. சீவராசிகளெல்லாம் ஒன்றோடொன்று பிணைந்துள்ளன; எல்லாம் ஒன்றே. புருடனும் பிரகிருதியும், ஆன்மாவும் சடமும் ஒன்றோடொன்று இணைந்து பிணைந்திருக்கின்றன என்ற எண்ணம் இடையறாது அனுபூதிமான்களின் சிந்தனையில் ஊறிக்கொண்டிருக்கும். இதுவே இந்த அனுபூதிமானிடம் காணப்படும் கொள்கைகளுள் முக்கியமானது. இலௌகிகம், தெய்விகம் என இரண்டாய் விடயங்களைப் பிரிக்கும் தூய்மைவாதிகளுக்கு இது மாறானது.

நன்மை தீமை என்பவற்றுக்குச் சார்பற்ற சனாதனமான பயன்மதிப்புக் கொடுத்து, நரக சுவர்க்கங்களைப்பற்றியும், பாவ புண்ணியங்களுக்குப் பிரதியுபகாரமாகப் பரிசும் தண்டனையும் வழங்கும் முறையைப்பற்றியும் பேசும் சமயங்களைப்போலல்லாது எந்த மதக்கோட்பாடுகளிடையிலும் விரக்தியின்றித் தாராளமாகப் பழகும் நிலையும் அவரிடமுண்டு. "எல்லாப் பொருள்களும் இணைந்து பிணைந்து ஒன்றையொன்று மோகித்துக்கொண்டு கிடக்கின்றனஃ என்று அவர் கூறுகின்றார். "என் சகோதரர்களே, நான் உங்களை வேண்டிக் கேட்கிறேன். உலகத்தோடு ஒன்றியிருங்கள். பரலோகவிடயங்களைப்பற்றிப் பேசுவோரின் பேச்சைக் கேளாதீர்ஃ, "எனக்கு- எனக்குப் புறம்பாக ஒன்று எப்படி இருக்க முடியும்? அப்படியொன்றில்லைஃ, "ஒவ்வொரு கணமும் வாழ்வு தொடங்குகின்றது. ஒவ்வோர் "இவ்விடத்திலும்ஃ "அவ்விடம்ஃ என்று பந்து சுற்றிக்கொண்டு வருகிறது. நடு என்பது எங்குந்தானுண்டுஃ, "ஒவ்வொரு கணத்திலும் ஆக்க நிலை நியாமானதாகத் தோன்ற வேண்டும்......... எதிர்கால நிகழ்ச்சி நிகழ்கால நிகழ்ச்சிகளுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் சமாதானம் கூறக்கூடியதாய் இருக்கக் கூடாது.ஃ இந்த வாக்கியங்கள் எல்லாம் "தத்துவமசிஃ என்னும் வேதாந்த மகா வாக்கியம் போன்றவை. இவை ஒருமைக் கொள்கையிலிருந்து அனுமானிக்கப்பட்டவை; அனுபூதிக் காட்சியின் பயனாக உண்டான கூற்றுகள்.

அதீத மனிதன் நன்மைதீமைகளுக்கு அதீதமாயுள்ளவன். அவன் மக்களுள் மாணிக்கம்; மக்களுக்குத் தலைவனும் இரட்சகனும் அவனே. இக்கொள்கை உலக சரித்திரத்திலே அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டு வருகிறது. இந்த இலட்சியத்தை அடைந்தவனுக்கு இந்திய நூல்களிலே பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. அருகதன்(சிறந்தோன்), புத்தன்(ஞானம் பெற்றோன்), ஜீனன்(வென்றவன்), தீர்த்தங்கரன்(கரையைக் கண்டவன்), போதிசத்துவன்(பூரண அறிவுள்ளவன்), சீவன் முத்தன்(சீவனோடிருக்கும்போதே விடுதலை பெற்றவன்) என்பன சில. இவனுடைய செய்கைகள் நன்மை தீமை என்ற பாகுபாட்டைச் சேராதவை. அöது அவனுடைய சுதந்திர நிலையிலிருந்து உண்டானவை.

இந்தச் சீவன்முத்தரைப்பற்றி நீட்சே என்ன கூறுகின்றார் என்பதைப் பார்ப்போம். "இனம், மேலினம் என்ற வகையில் நமது வளர்ச்சி உயர்கின்றது. ஆனால், "எல்லாம் எனக்காகஃ என்ற எண்ணம் மிகக் கீழ்த்தரமானது. அது பயங்கரமானதொன்று.ஃ இவ்வாறு கூறும் ஒரு கொள்கை தன்னலம் கருதும் கொள்கையா? அப்படியானால், உபநிடதக் கோட்பாடுகளையும் தன்னலங் கொண்டவையென்றே கூற வேண்டும். அங்கே இந்த ஆன்மாவின் நிமித்தம் நாம் எல்லாப் பொருள்களையும் எமக்கு இதமானவை என்று கொள்ளுகின்றோம். ஒருமைவாதி கட்குத் தன்னலம் பிறர் நலம் என்ற பேதங்கிடையாது. ஏனெனில், அங்கே எல்லாருடைய நலமும் ஒன்றே. சுவானுபூதியே மேலான சேவை. நாம் செய்யக்கூடிய மேலான தொண்டு ஒரேயொரு சேவை. அது நாம் நமது சுயநிலையை அடைதல். அது நீ ஆகிறாய். இது கருத்துவாதச் சார்பான தனித்துவவாதம். அöதாவது தனிநிலைக் கொள்கை, உள்ளத்தே சாந்தி பெறுதல் என்ற இந்தக் கோட்பாடு எல்லா நிலைகளிலும் பொருத்தமானது. ஏனெனில், நாம் செய்து கொண்டவை நம்மை இரட்சிப்பதில்லை. நாம் என்னவாயிருக் கிறோமோ அதுவே இரட்சிக்கும். எல்லாப் பொருள்களும் உன்னை நோக்கிப் பாயவும், உன்னிலே கலக்கவும் முயல்; பின்னர் அவை உன்னிலிருந்து வெளியே உனது அன்பின் கொடையாகப் பாயட்டும். இத்தகையதோர் அன்புக்கொடை எல்லாப் பயன் மதிப்புகளையும் தன்னுள்ளடக்கியதாயிருக்கும். இத்தகைய தன்னலம் சுகத்துக்கேதுவானது; பரிசுத்தமானது என நினைக்கிறேன்.


ஆனால், வேறு ஒரு தன்னலமுமுண்டு. இது மிக்க வறுமையும் தணியாத பசியுமுடையது. இöது எப்பொழுதும் களவெடுக் கவே பார்த்துக்கொண்டிருக்கும். ஒளியுள்ள பொருள் எல்லாவற்றையும் கள்வனுடைய கண் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும்; பசியுடையரிடத்துக் காணும் வேட்கையோடு நிறையப் பொருள் வைத்திருப்பவரை அளவிட்டுப் பார்க்கின்றது; எப்போதும் வள்ளல்களின் வீட்டைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டேயிருக்கும். "இதுவே பெண்ணணங் கைத் தெய்வமாக உருவகப்படுத்தியது. இது பயமும் குரோதமுங் கொண்டு வாழ்வதிலும் சாவதே மேல்; மற்றவர்களின் கோபத்துக்கும் அச்சத்துக்கும் ஆளாவதிலும் சாவதே பன்மடங்கு மேல்ஃ என்று கூறிக்கொள்ளும்.

ஒருவன் தனது துயர்களையும் மற்றவர் துன்பங்களையும் நினைந்து நினைந்து இரங்குவதை நீட்சே வெறுக்கிறார். வாழ்வு கட்டமானதே; உயர்மனிதன் விடயத்தில் அவன் உயர்ந்த வாழ்வைத் தானாகவே தெரிந்துகொண்டபடியால் மிக கட்டமுள்ளதே. "என்னுடைய துயரும் நண்பர் துயரும்.... இவற்றைப்பற்றி ஏன் கருத்துக் கொள்ள வேண்டும்?” "வாழ்வு சகிக்க முடியாத கட்டம் நிறைந்தது” என்று நீர் எனக்குச் சொல்லுகிறீர். அப்போது நீர் ஏன் காலையில் மமதை கொள்கிறீர்? மாலையில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு இருக்கிறீர்?” மேலைநாட்டுச் சனநாயகங்கள், கூடிய தொகையினர்க்குக் கூடிய மகிழ்ச்சியைக் கொடுப்பதே நமது லட்சியமெனக் கொண்டிருக்கும் நோக்கத்துக்கு இந்தக் கொள்கை மாறுபட்டதாகும்.


ஐரோப்பாவிலே, ஐரோப்பிய நீட்சிய யுத்தத்தையுண்டாக்கியவர் களில் நீட்சேயும் ஒருவர் எனக் கூறி, நீட்சே போன்ற கவிஞரும், தத்துவ ஞானியும், அனுபூதிமானுமான ஒருவரை கிராம்ப்ஸ், ட்ரீக்ஸ் ஆகிய கிளர்ச்சிக்காரரோடு சேர்த்துக் குறிப்பிடு வோரைப் பற்றிப் பேசுவதனால் பயனில்லை. செர்மனி, இங்கிலாந்து ஆகிய தேசங்களிலேயுள்ள மட்டமானவர்களை நீட்சே எவ்வாறு இகழ்ச்சியுடன் நோக்கினார் என்பதை அவருடைய எழுத்துகளிலிருந்து எடுத்துக்காட்டலாம். ஐரோப்பாவிலே விவேகமும் சீர்மையுமுள்ள பண்பாடு பிரான்சின் பண்பாடென்றும், பிரான்சின் உயர்ந்த உணர்ச்சித் திறனை செர்மனியின் இரசாபாசத்தோடு ஒப்பிட்டுக் காட்டினார். நீட்சே ஐரோப்பாவின் அடிப்டை ஒற்றுமையை நன்கு உணர்ந்திருந்தார் என்பதை மேற்கோள்களால் காட்டுவது எளிதாயிருக்கும். இன்று துயர் சூழ்ந்த நிலையிலே அந்த ஒற்றுமை வெளியாகியுள்ளது. ஆனால், இஃது ஒன்று சேர்ந்த அசையும் ஒரு சலனமாய் அன்றும் இன்றும் காணப் படுகிறது. அந்த ஒற்றுமையின் முன்பு இன்றை குரோதங்கள் ஒரு சிறு சம்பவம் போலவே தோற்றமளிக்கின்றன. நீட்சே தேசாபிமானத்தை உயர்வுக்கு ஏதுவான ஒரு பண்பாக என்றுமே கருதியிருக்க மாட்டார்.

தேசாபிமானம் என்ற பைத்தியத்தன்மை ஐரோப்பிய நாடுகளிடையே மனச்சோர்வுடன் கூடியதொரு பிரிவை உண்டாக்கிவிட்டது. இந்தப் பைத்தியத்தன்மையைப் பயன்படுத்திக் குறுகிய நோக்கமும், அவசர புத்தியுமுள்ள அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைப் பெற்றுவிட்டார்கள்; அவர்கள் பின்பற்றும் பிரிவுக்கொள்கை எவ்வளவுதூரம் கோணங்கிக் கூத்தென்பதை அவர்கள் உணர்வதில்லை. இக்காரணங்களாலும், இங்கே கூறமுடியாத வேறு பல காரணங்களாலும், ஐரோப்பா ஒன்றுபட விரும்புகிற தென்பதற்குரிய காணத் தவற முடியாத அறிகுறிகள் இப்போது தட்டிக் கழிக்கப்படுகின்றன. அல்லது தான்தோன்றித் தனமாகவும், தவறாகவும் தப்பருத்தம் செய்யப்டுகின்றன. இந்த நூற்றாண்டிலே வாழும் அறிவாளிகளும், தாராள சிந்தை யுடையவர்களும் அவர்களுடைய ஆன்மாவின் நூதனமான தொழிற்பாட்டுச் சத்தியும் இந்த ஒற்றுமைக்கே முயன்று கொண்டிருக்கின்றது. இப்புதிய ஒற்றுமைக்கு வழி காண்பதில் ஈடுபட்டிருக்கிறது. இதன் பயனாக எதிர்கால ஐரோப்பாவின் ஆதரிச புஐடனை எதிர்நோக்கியிருக்கிறது. போலித்தன்மை களிலோ, பலவீனமான தருணங்களிலோ, வயோதிகக் காலத்திலோதான், ஒருசமயம் அவர்கள் தாய்நாட்டின் சேய்களானார்கள். ஆனால் தேசாபிமானிகளாக மாறியதும் அவர்கள் தங்களுடைய சுயஇயல்பை மாற்றிக்கொண்டார்கள். இந்த ஐரோப்பிய ஒற்றுமை நிசமானதொரு காரியமென்பதை உறுதிப்படுத்துவதற்கு இன்று ஐரோப்பா மாத்திரம் அன்று, உலகம் முழுவதுமே- பெரியோரின் அருட்சத்தியால் ஒன்றுசேர விரும்பிய இந்த உலகம் முழுவதுமே - உலக சரித்திரத்திலே முதன்முதலாகன அதன் அடிமனத்திலிருந்து வந்த இந்த இலட்சியத்தை அடையும் தருவாயிலிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உலக ஒற்றுமை என்ற கருத்து மிக அருமையான கருத்துதான். ஆனால் அது செயற்படுமா என்று எண்ணினர். இன்று இந்தநிலை உண்டாகியிருக்கின்றது.

அதிகார வேட்கைக்கும் கொடுங்கோன்மைக்கும் எவ்வகைத் தொடர்புங் கிடையாது. அஃது உயர்குடியினரின் கொடுங் கோன்மைக்கும் மாறானது. இன்னம் துன்பம் என்ற இரட்டைகளின் நோக்கங்களில் நமது வாழ்வு சிக்கக்கூடாது. வாழ்வின் இலட்சியம் சீவன்முத்தர் நிலையடைவதே. அந்தநிலை சுதந்தரமும் இயல்பாகக் கருமங்களைச் செய்யும் பண்பு முடையது. அது நன்மைதீமைக்கு அப்பாற்பட்ட நிலை. இந்நிலை பகவத்கீதையில் துக்கிக்கத்தகாதவர் விடயத்திலே துக்ங்கொள்ளுகிறாய் (அசோச்சியானன்வசோச்ஸ்த்வம்) எனக் காட்டப்படுகிறது.போலி இரக்கங் காட்டாது தலைமகன் போருக்குச் சித்தமுடையவனாக வேண்டுமென்றும், பயன் கருதாமல் கடமையைச் செய்ய வேண்டுமென்றும் அது கூறுகிறது. "வெற்றிதோல்வி என்ற இரண்டின் அடிப்படை மனோபாவம் ஒன்றே” என்று கூறுகிறார் விட்மன். "எந்த மனோபாவத்துடன் யுத்தத்தில் வெற்றி ஈட்டப்படுகிறதோ அதே மனோபாவத்துடன் தோல்வியும் கிட்டுகிறது. தலைவன் காயமடைவானானால், தனது தோழர்களை முன்செல்லுமாறு கூறுவானேயொழியத் தனக்கு நிகழ்ந்த ஆபத்தைக் குறித்து அனுதாபங் காட்டுமாறு சைனியத்தைத் தாமதிக்கச் செய்ய மாட்டான்; தோழர்கள் தன்னைப் பின்பற்ற மாட்டார்களென நினைத்து அவர்களை அவமானப்படுத்த மாட்டான். "இரக்கத்தைக் காட்டிலும் உனது அன்பு பலமுள்ளதாய் இருக்கட்டும். அந்த அன்பு தன்னலச்சார்பான அன்பன்று; அயலானை நேசித்தலன்று; தேசாபிமானமன்று; உனது அயலானிடத்தில் அன்பு காட்டுவதிலும் சிறப்புடையது எதிர்காலத்தவரிடம் காட்டக்கூடிய அன்பு; மக்களிடத்துக் காட்டக்கூடிய அன்பிலும் மேலானது, பொருள்களிடத்தும் கற்பனைப் பொருள்களிடத்தும் காட்டக்கூடிய அன்பு. "நான் என்னை எனக்கு இனியவரிடத்தும் எனக்குச் சமமான அயலாரிடத்தும் அர்ப்பணம் செய்கிறேன். இதுவே கலைப்படைப்பாளர்கள் எல்லாரும் பேசக்கூடிய மொழி.” "ஓ என் சொற்களை உணரக்கூடியவரே நீர் சங்கற்பம் செய்யக் கூடியதை நிறைவேற்றுவீராக. ஆனால், முதலில் சங்கற்பம் செய்யக்கூடிய சக்தியை உடையவராவீராக!”

தன்னை அடக்கி ஆளமாட்டாதவன், மற்றவர்களுக்கு அடங்கி நடப்பானாகõ இந்தக் கோட்பாடு, "நாம் நினைத்தபடி செய்தல், நமது சித்தப்படி நடத்தல்” என்ற கோட்பாட்டுக்கு வெகு தூரத்திலுள்ளது. "எல்லாம் எனக்கே என்று சொல்லும் கீழான மனோபாவம் நமக்குப் பயங்கரத்தை உண்டாக்குவதாகும்” என்கிறார் நீட்சே.

நீட்சேயின் போதனை தூய நிட்காமிய கருமம்: "நான் சுகத்தைத் தேடுகிறேனோ? நான் எனது கருமத்தைச் செய்வதிலேயே ஊக்கமுடையேன். இன்பதுன்பம் என்ற வகையில் உலகத்துப் பயன்களை அளவிட்டுக்கொள்ளும் முறையை ஆக்கச் சத்தியுடையோரும் கலைஞரும் மிகக் கேவலமானதாகவே கருதுவர்” என்று அவர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். ஏனெனில், சீவன்முத்தனுக்கு இன்பமுமில்லை; துன்பமுமில்லை. "நீ மனத்தில் சங்கல்பம் செய்வதைச் செயலில் செய்.” இந்தக் கோட்பாடு அகங்காரமுடையதுமன்று; பிறர்நலச் சார்புடையது மன்று. புலன்களின் தூண்டுதல்களுக்கு இசைதலும் அவ்வப்போதுண்டாகும் விருப்பங்களுக்கு இணங்குதலும், நமது சூழ்நிலைக்கு நாம் அடிமைப்படுவதாகும். இது பற்றற்ற சங்கற்பமாகாது; அதற்கு எதிரானதாகும். தன்முனைப்பு, சீவன்முத்தனுக்கு ஏற்புடையதொன்றன்று. சீவன்முத்தன் தன்னை மேலோங்க விடமாட்டான். இது பிறர் நலம் நாடலுமன்று. ஏனெனில், எனக்குப் புறம்பானது ஒன்றில்லா விட்டால் பிறர் நலத்துக்கு எங்கே இடமிருக்கப்போகிறது? ஆன்ம போதமே உயர்ந்த கடமை; தன்னை அறிதல், சுவானுபூதி. "வைத்தியரே முதலில் உமது நோயைச் சுகப்படுத்தும். அதன்பின்னர் உம்மிடம் வந்த நோயாளியையும் சுகமாக்கும்.” தன்னுடைய நோயை முதலிலே தீர்த்து அதைத் தன் கண்ணாலே காண்பானாக. "எவன் தன்னைச் சுகப்படுத்திக் கொள்கிறானோ அச் சுகப்பாடே சிறந்த பரிகாரம்.ஃ சுவாங்கு என்பவரின் பழையதொரு கோட்பாடு இது. புராதன இருடிகள் முதலில் ஞானத்தைத் தாமே பெற்றார்கள்; பின்னர் மற்றவர்கள் பெற வழி செய்தனர். இந்த ஞானத்தை நீர் பெறும் வரையும் துர்ச்சனருடைய செயல்களைப்பற்றிக் கருத்தெடுப்பதற்கு உமக்கு எங்கே நேரம் வரப்போகிறது? உனது ஆன்மாவை நீ வளர்த்துப் பேணிக்கொள்; மற்றவையெல்லாம் தாமாகவே வளர்ந்து செழிக்கும். இயேசுநாதர், "உன் கண்ணிலுள்ள துரும்பை முதலில் வெளியே எடுத்துவிடுஃ என்று கூறியிருப்பது ஞாபகத்துக்கு வரும்.

உலகத் தலைவர்கள், கடமை என்பதற்குச் சாதாரணமாகக் கொடுக்கப்படும் பொருளில் கடமையை உணர்ச்சியோடு செய்பவரல்லர். ஞானக்காட்சியில்லாதவர்கள் கடமையை ஒரு வியாச்சியமாகக் கொள்வர். அஃது ஒரு தலைக்கீடு. மேதாவிலாசமுள்ளவர்களின் செயல்கள் விதிகளுக்குக் கட்டுப்பட்டிருக்க மாட்டா. ஆனால், உள்ளிருந்து வரும் கட்டளைக்கு அடங்க வாழ்வை அர்ப்பணம் பண்ணுவர். இந்தக் கட்டளை உலகத்தவர்க்குத் தீமையுடையதாகத் தெரிந்தாலும் அவர்கள் அதையே நிறைவேற்றுவர்.

இயேசு தாழ்மையுடையவரா? அல்லது
தமது விநயத்தை உறுதிப்படுத்த நிரூபணங்
களைத்தாம் காட்டினாரா?
குழந்தையாயிருந்த காலத்திலே
பெற்றோரை விட்டு ஓடிவிட்டார்.
அதனால் அவர் பெருந்துயரடைந்தார்.
அவர் நாவில் வந்த வார்த்தைகள் இவையே;
"நான் என் பரமபிதாவின் கருமங்களையே
செய்கிறேன்”.

ஒரு கருமத்தின் செம்மை அதைச் செய்வோனுடைய ஒருமைப்பாட்டிலே தங்கியிருக்கிறது. கருத்தா பூரணமாக ஒன்றுபட்டவனாயிருக்க வேண்டும். தமது சுபாவத்துக் கேற்றவாறு நாம் கருமத்தைச் செய்ய வேண்டும். அந்தச் சுபாவம் பூரண வளர்ச்சியடைந்துவிட்டதானால் தெய்விகம் பூரணமாக வெளிப்படும். இத்தகைய கருத்துகளை மனத்தில் வைத்துக்கொண்டுதான் நீட்சே ஆழ்ந்த சிரத்தையுடன் பின்வருமாறு அறைகூவுகிறார்:

"தாயானவள் குழந்தையிலே கண்ணுங் கருத்துமாய் இருப்பதுபோல உமது உயிர் உமது கருமத்திலிருக்கட்டும். நண்பர்களே! அப்போது நீவிர் தன்னலமற்ற கருமமே சிறந்தது என்று சொல்வதை நிறுத்திவிடுவீர்கள்”.

சாக்ரடீஸ் செய்த பிரார்த்தனையும் இதுதான். "உள்ளும் புறமும் ஒத்திருப்பதாக; அகமனிதனும் புறமனிதனும் ஒரே மனிதனாக இருப்பானாக” என்பதே. இது தவிர்த்த மற்றவை எல்லாம் பாசாங்கு. குறைந்த தரத்திலேயுள்ள மனிதன் வெளி விவகாரங்களையே பொருளாகக்கொண்டு வாழ்க்கையை நடத்துகிறான். நீண்ட ஆயுள், கீர்த்தி, செல்வம், பட்டம், பதவி, நன்மக்கட்பேறு என்பவற்றில் பற்றுள்ளவரை அவனுக்குச் சுதந்தரம் கிடையாது. உயர்ந்த படியிலுள்ள மனிதன் வேறு வகையான வாழ்க்கையுடையவன். சுவாங்கு கூறுவதுபோல அவனுடைய வாழ்க்கை அவனுடைய அகத்தன்மையோடு பொருத்தமுடையதாய் இருக்கும். அவனுக்கு நிகரானவர் உலகில் கிடையாது. அவர்கள் தமது வாழ்வை அகத்து விவகாரங்களைக்கொண்டு ஒழுங்கு செய்வர்.

"பிரேம சாகரம்” என்னும் நூலிலே "சீவன்முத்தர் செய்ய முடியாதது என்ன? அவர்களுடைய போக்கை யார் அறிவார்? தமக்காக அவர்கள் எதையும் செய்வதில்லை; தம்மை அடைந்து போற்றித் துணை கேட்போர்க்கு அவர்கள் வேண்டுவதைக் கொடுப்பர். அவர்களுடைய போக்கு அதுதான். எல்லாரோடும் அவர்கள் சேர்ந்துள்ளவராகவே காணப்படுவர். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒருவரோடும் சேராது தாமரை இலையிற் பனித்துளிபோலத் தனித்து ஒட்டாது நிற்பதைக் காணலாம்ஃ எனக் கூறப்பட்டுள்ளது. சுவாங்கு சீவன்முத்தரைப் பற்றிக் கூறும்போது, "அவன் அடங்கியிருக்கும்போது சிந்தையற்றிருக்கின்றான். செயலில் ஈடுபடும்போது கவலையின்றிக் கருமம் புரிவான். அவனுக்கு நல்லது தீயது, சரி பிழை என்பதொன்றும் கிடையாது. கடல் சூழ்ந்த வையகத்திலே எல்லாரும் இன்பமடைந்தால் அதுவே அவனுக்கு மகிழ்ச்சி தரும். எல்லாரும் பங்கு கொண்டால் அவன் பங்கில்லாதிருப்பான். தாயை இழந்த குழந்தையைப் போல மக்கள் அவனை நாடுவர்; வழியைத் தவறவிட்ட பிராணிகளைப்போல அவனைச் சூழ்ந்துகொள்வர். அவனே போதிசத்துவன்” என்று கூறுகின்றார். "நிருவான பதம் அடைந்ததும் கருமங்களெல்லாம் தாமாகவே தொழிற்பட்டு நிறைவேறுகின்றன” என்கிறார் அசுவகோசர். தமது நடத்தையின் ஒழுக்கத் தராதரங்களைப்பற்றிப் போதிசத்துவர் கருத்துக் கொள்வதில்லை. அவர்கள் தம்மியல்பாகவே கருமங்கள் செயற்படும் நிலையை அடைந்தமைக்குக் காரணம், "அவர்களுடைய செயல்களெல்லாம் ததாகதர் களுடைய (புத்தர்கள்) செயல், ஞானம் என்பவற்றோடு ஒன்றிக் கலந்திருத்தலே”. இயேசுநாதர் செய்கையெல்லாம் மேலான அறமாயின. ஏனெனில், அவர் உள்ளுணர்ச்சியினாலும், மனத்திலெழும் அகத்தூண்டலினாலும் செயல் புரிந்தாரே யன்றி விதிகளுக்கமையச் செயல் புரிந்தாரில்லை”. உலகுக்கு உட்பொருளாய் விளங்குவோர் அதீத மனிதரே என்கிறார் நீட்சே. அவர் குறிப்பிடுவது இந்தச் சீவன்முத்தர்களையே; போதிசத்துவர்களையே. அகங்கார புத்தியுடையவர் உறுதிப் பொருள்களின் பயனாகவும், மனிதகுலத்தின் இலட்சியமாகவு முள்ள இத்தகைய பெருமக்களின் நிலையை அறிந்து கொள்வது அரிது. இவர்கள் நன்மைதீமையைக் கடந்தவர்கள்; தாமே தமக்குப் பிரமாணமானவர்கள். சாதாரண மனிதரானால், "என்ன கொடுமை ! நான்கூட ஒழுக்கத்தை மேற்கொள்வது எனது கடமையெனவும் என்னுடைய இச்சைகளை அடக்குவது அறமெனவும் கருதுகிறேன்”, என்று கூச்சலிடுவான்.

எனவே, நீட்சேயும் ஏனைய அனுபூதிமான்களும் புகழ்ந்து போற்றும் "தன்னலத்தை”, கருமங்கள் எல்லாம் உலகம் பழியாத கருமங்களாயிருக்க வேண்டுமென்று நினைப்போருடைய கருத்துப்படி ஆராய்ந்தால் விளங்கிக்கொள்ள மாட்டோம். மனிதனுடைய ஒழுக்க நெறிகளை எந்த அறநூல்களிலும் காண முடியாது; தன்னுடைய சுபாவத்தை இடைவிடாது வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் விசுவத்தின் தத்துவங் களிலேயே அதைக் காணலாம். மலர்களைப் பாருங்கள்.


இங்கே ஒருவகையான சிற்றின்பப் போக்குண்டுதான்; ஆனால், அது போலி. இங்கே ஒரு அதிகார வேட்கை உண்டுதான்; ஆனால், அது அகங்காரத்தால் பிறந்ததன்று. இங்கே ஒரு தன்னலமுண்டு. ஆனால் அது பிறர் நலம் போற்றும் தன்மையைப் பெரிதுமுடையது. இந்த விகற்பங்களை நீட்சேகூட எடுத்துக்காட்டியுள்ளார். ஆனால், நித்திரை போலப் பாசாங்கு செய்வோரை எவ்வாறு எழுப்புவது? உயர்நிலையை யடையும் ஒருவரின் தோல்வியைப்பற்றியே நீட்சே பின்வருமாறு கூறுகிறார்: "ஒருகாலத்தில் அவர்கள் பெருவீரராக வரலாம் என எண்ணினர். அவர்கள் இன்று சிற்றின்ப லோலராய்விட்டனர்”.

"புலன்களை வென்றவன் நீதானா? தன்னடக்கம் பெற்றவன் நீதானா? விருப்புவெறுப்புகளைக் கடந்தவன் நீதானா? குணமென்னும் குன்றேறி நின்றவன் நீதானா? இவ்வாறு நானுன்னைக் கேட்கிறேன். உனது இச்சை, தேவை, ஒழுக்கம், பிணக்கு என்பவற்றில் மிருகந்தான் பேசுகிறதா? ஒழுக்கக்கேடு, இச்சைப்படி ஒழுகல் என்பன உயிரின் சுவாதந்திரியமென்று கூறுவோர்க்கு நான் எச்சரிக்கை செய்கிறேன், இதற்கும் அதற்கும் வெகுதூரம்”.

தன்னைத்தானே காதலிக்கப் பழகுதல் என்பது இன்றைக்கும் நாளைக்கும் ஏற்புடைய விதியன்று. எல்லாக் கலைகளிலும் இதுவே சிறந்தது; நுண்மையானது; பொறுமையோடு பயிலப்பட வேண்டியது; கடைசியான கலை. "உண்மை யானதும் இலட்சியபூர்வமானதுமான தன்னலமென்பது ஆன்மாவைச் சதா கவனித்து அதை நெறிப்படுத்தல்; இதன் பயனாக நமது விளைவு பயனுடையதாகும்”.

இது சிற்றின்பலோலனாய் இருக்க வேண்டுமென்ற வகையான கோட்பாடன்று. இöது ஒருவகையான துறவுநிலை; தவம்; இயலுமானால் இத்தவத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். அந்தணனுக்கு கடினமான தருமமும், சூத்திரனுக்கு இலேசான தருமமும் மனுவினால் வகுக்கப்பட்டமைக்கு இதுவே காரணம். மனுவின் கோட்பாடும் நீட்சேயுடைய கோட்பாடு போன்றதே. இந்த நியதியை உணர்ந்த நீட்சே வருணாசிரமத்தைப் புகழ்ந்தார். மலையிலே உயர்ந்து செல்லச்செல்ல உச்சியை அணுகஅணுகக் குளிர்மையுண்டாவது இயல்பே. "அந்தணன் என்போன் தன்னுடைய இன்ப நுகர்ச்சிக்காக எதையுஞ் செய்யக்கூடாதுஃ என மாரக்கண்டேய புராணம் கூறுகிறது.

மேலைநாட்டு நாகரிகம் தேய்ந்து அழிந்துபோன தன்மையை அறிந்தவர்கள் ஐரோப்பாவின் மனசாட்சி நீட்சேயில் விழித்துக்கொள்வதை உணர்வார்.
Thanks:keetru.com

Monday, March 02, 2009

தெரசா என்று கத்திய மனிதன்


தெரசா என்று கத்திய மனிதன்
இடாலோ கால்வினோ

நான் நடைபாதையை விட்டிறங்கி, பின் பக்கமாக நடந்து சில தப்படிகள் முன்னோக்கி, தெருவின் மையத்தில் இருந்து, என் கைகளை ஒரு மெகாஃபோன் மாதிரி குவித்து, அங்கிருந்த கட்டிடத்தின் மேல் மாடிகளை நோக்கி உரக்கக் கத்தினேன் : 'தெரசா!'

நிலவைப் பார்த்து பயமுற்ற என் நிழல் என் இரண்டு கால்களுக்கிடையில் பயந்து ஒடுங்கிக் கொண்டது.

யாரோ ஒருவர் இந்தப் பக்கமாக நடந்து வந்தார். மீண்டும் நான் உரக்கக் கத்தினேன்: 'தெரசா!' அந்த மனிதன் என்னருகில் வந்து இவ்வாறு கூறினான்: நீங்கள் இன்னும் உரக்கக் கத்தவில்லை என்றால் அவளுக்கு உங்கள் குரல் கேட்காது. நாம் இருவரும் சேர்ந்து முயல்வோம். ஆக மூன்று வரை எண்ணி விட்டு நாம் இருவரும் சேர்ந்து கத்துவோம். 'ஒன்று இரண்டு மூன்று'. நாங்கள் இருவரும் கூவினோம்: 'தெ--ரெ--சா'

சினிமாக் கொட்டகைகளிலிருந்தோ காப்பி விடுதியிலிருந்தோ திரும்பிக் கொண்டிருந்த நண்பர்களின் சிறு குழு ஒன்று நாங்கள் கத்துவதை கவனித்தது. அவர்கள் சொன்னார்கள் : 'சரி நாங்கள் கூட உங்களுக்காக ஒரு முறை சப்தம் கொடுப்போம்'. அவர்கள் தெருவின் நடுவில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். முதல் மனிதன் ஒன்று இரண்டு மூன்று என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து கத்தினோம் : 'தெ--ரெ--சா'.

வேறு யாரோ அந்தப் பக்கம் வந்தவர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். கால்மணி நேரத்திற்கு பிறகு நாங்கள் ஒரு கூட்டமாக ஏறத்தாழ இருபது பேர்கள் இருந்தோம். அவ்வப்போது யாராவது புதிதாக அந்தப் பக்கமாக வந்தார்கள்.

ஒரே சமயத்தில் ஒரு நல்ல சத்தம் கொடுப்பதற்கு ஒருங்கிணைத்துக் கொள்வது எளிமையாக இருக்கவில்லை. எப்பொழுதுமே யாராவது ஒருவர் மூன்று எண்ணுவதற்கு முன்பே தொடங்கி அல்லது அதற்கு பிறகு நீண்த நேரம் கத்தி விடுகிறார். ஆனால் இறுதியில் ஓரளவு திறமையான ஒன்றை நாங்கள் செய்து கொண்டிருந்தோம்.'தெ' என்பது நீச்சமாகவும், நீளமாகவும், 'சா' என்பது அமுங்கியும் குறுகியும், இருக்கவேண்டும் என்ற ஒப்புதலுக்கு வந்தோம். அது சிறப்பாகத் தோன்றியது. அப்போதைக்கப்போது யாரோ ஒருவர் வெளியேறும்போது கூச்சலும் குழப்பமுமான சச்சரவு உண்டாயிற்று.

எங்களுக்கு அது சரியாக வந்து கொண்டிருக்கும்போது, அந்தக் குரலை வைத்துச் சொல்வதாயிருந்தால், புள்ளிகள் கொண்ட முகத்தை உடையவர் என்று குஉறமுதியும் ஒருவர் கேட்டார்: 'ஆனால் உறுதியாக அவள் வீத்தில் இருக்கிறாளா என்பது தெரியுமா?'

'இல்லை'- நான் சொன்னேன்.


'இது சுத்த மோசம்', மற்றொருவர் சொன்னார். உங்கள் சாவியை மறந்து விட்டீர்களா? அப்படியா?
என் சாவி என்னிடம் உள்ளது'- நான் கூறினேன்.
'அப்படியானால் ஏன் நீங்கள் மேலே போகக் கூடாது?'
'நான் இங்கே வசிப்பவன் அல்ல. நான் நகரின் அந்தப் பக்கத்தில் வசிக்கிறேன்'
'சரி, அப்படியானால் பிறர் காரியங்களில் ஆர்வமுள்ள என் துடிப்பை மன்னியுங்கள்' புள்ளிகள் கொண்ட குரல்காரன் கவனமாகக் கேட்டான் 'யார்தான் இங்கு வசிக்கிறார்கள்?'
'எனக்கு நிஜமாகத் தெரியாது'

இவ்வாறு கூறியவுடன் அங்கிருந்தவர்கள் தொந்தரவான உணர்வடைந்தார்கள்

'எனவே தயவு செய்து நீங்கள் விளக்கம் தருவதற்கு முடியுமா? மிகவும் பல் சார்ந்த குரல் கொண்ட யாரோ ஒருவர் கேட்டார், 'ஏன் இங்கு நின்று கொண்டு தெரசாவைக் கத்தி அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?'

நான் சொன்னேன், : என்னைப் பொறுத்தவரையில், நாம் வேறு ஒரு பெயரைக் கூட கூப்பிடலாம் அல்லது வேறு எங்காவது முயற்சி செய்து பார்க்கலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

மற்றவர்கள் சிறிது தொந்தரவாக உணர்ந்தார்கள்

'நீங்கள் எங்களை ஏமாற்றவில்லை என்று நான் நம்புகிறேன்' புள்ளிகள் நிறைந்த முகத்துக்காரன் சந்தேகமாகக் கேட்டான்.

என்னது? நான் கேட்டேன் கோபமாக. மற்றவர்களிதம் திரும்பினேன் எனது நம்பிக்கையை உறுதி படுத்தும் பொருட்டு. மற்றவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. புள்ளிகள் உதைய முகத்துக்காரனின் தூண்டி விடும் முயற்சி தோல்வியடைந்தது.

ஒரு தர்ம சங்கடமான கணம் நிலவியது,.

'கவனியுங்கள்' யாரோ ஒருவர் நல்ல தன்மையுடன் கூறினார், ' ஏன் நாம் அனைவரும் ஒரு முறை தெரசாவை கூப்பிட்டு விட்டு வீட்டுக்கு செல்லக்கூடாது?

எனவே நாங்கள் மீண்டும் தொடங்கினோம், ஒன்று இரண்டு மூன்று 'தெரசா' ஆனால் இந்த முறை அது சரியாக வரவில்லை. பிறகு அங்கிருந்தவர்கள் வீட்டை நோக்கிச் சென்றார்கள். சிலர் ஒரே வழியிலும், பலர் வேறு வழியிலும்.

சதுக்கத்திற்குள் ஏற்கனவே நான் திரும்பி விட்டேன். அப்போது ஒரு குரல் தொடர்ந்து 'தெ--ரீ-சா!' என்று கூப்பிடுவதாக தோன்றியது.

யாரோ ஒருவர் கத்துவதற்காக நின்றிருக்க வேண்டும். மிகப்பிடிவாதமான ஒருவர்.

Sunday, March 01, 2009

‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண்ட்டோ


இந்திய காலனிய எதிர்ப்பில் ஒரு சாரார் 'பாரத மாதா' என்ற உருவகத்தை உருவாக்கியது போலவே, அமெரிக்காவுக்கு 'அங்கிள் சாம்' என்ற உருவகமும், பிரிட்டிஷாருக்கு 'ஜான் புல்' என்ற உருவகமும் உருவாக்கப்பட்டது. இந்த உருவகங்கள் எந்தத் தனிநபரையும் குறிப்பதில்லை. உலகில் பல நாடுகளுக்கு இத்தகைய உருவகங்கள் உண்டு. இந்த உருவகங்கள் தோற்றம் கொண்ட கதைகளும், அதன் அரசியலும் மிக மிக சுவாரசியமானவை.

அங்கிள் சாமுக்கு மண்ட்டோ எழுதிய ஒன்பது கடிதங்கள் சிறு வெளியீடாக 2001ல் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. முதல் கடிதம் 1951-ல் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது கடிதம் எந்த ஆண்டு என்று தெரியவில்லை. மூன்றாவது கடிதத்திலிருந்து 1954 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதங்களில் மண்ட்டோவின் கதைகள், கட்டுரைகளில் காண முடியாத வேறுபட்ட பல தன்மைகளை இதில் காண முடிகிறது. இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. இந்த விளையாட்டை மண்ட்டோ மிகத் திறம்பட விளையாடி உள்ளார். இந்தக் கடிதங்கள் அவர் உயிரோடு இருக்கும் போது பிரசுரம் செய்யப்பட்டதா என்று தீர்மானமாகத் தெரியவில்லை. இந்த இதழில் முதல் மூன்று கடிதங்கள் மட்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. - தமிழாக்கக் குறிப்பு)

31 லஷ்மி மேன்ஷன், 16, டிசம்பர் 1951
ஹால்ரோடு,
லாகூர்.

அன்புள்ள அங்கிள்,

வணக்கம்.

நீங்களோ அல்லது ஏழு சுதந்திரங்களும் பெற்று இருக்கும் உங்கள் நாட்டில் எவருமே அறிந்திராத உங்களுடைய பாகிஸ்தான் சகோதரனின் மகனிடமிருந்து உங்களுக்கு இந்தக் கடிதம் வருகிறது.

என்னுடைய நாடு, இந்தியாவிலிருந்து ஏன் துண்டிக்கப்பட்டது என்றும், ஏன் உயிர்பெற்றது என்றும், ஏன் சுதந்திரம் அடைந்தது என்றும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே உங்களுக்கு எழுதும் உரிமையை நான் எடுத்துக் கொள்கிறேன். என் நாட்டைப் போலவே நானும் சுதந்திரம் பெற்றுவிட்டேன் - மிகச் சரியாக அதே பாணியில், அங்கிள், இறகுகள் துண்டிக்கப்பட்ட பறவை எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை. எல்லாம் அறிந்த உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். உங்களுக்கு நான் இதை விளக்கத் தேவை இல்லை.

என் பெயர் சாதத் ஹசன் மண்ட்டோ. இப்போது இந்தியாவிலிருக்கும் ஓர் இடத்தில்தான் நான் பிறந்தேன். என் தாய் அங்குதான் புதைக்கப்பட்டு இருக்கிறாள். என் தந்தை அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறார். எனக்குப் பிறந்த முதல் குழந்தையும் அந்தத் துண்டு நிலத்தில்தான் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறான். இருந்தாலும் அந்த நிலம் இனியும் என்னுடைய நாடு அல்ல. இப்போது என்னுடைய நாடு பாகிஸ்தான். இதை நான் பிரிட்டிஷ் பிரஜையாக இருந்தபோது ஐந்தாறு தடவைகள் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

நான் அகில இந்தியாவிற்கும் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருந்தேன். இப்போது பாகிஸ்தானின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருக்கிறேன். என்னுடைய கதைகள் பல தொகுப்புகளாக வெளியாகி உள்ளது. மக்கள் என்னை மதிக்கிறார்கள். ஒன்றுபட்ட இந்தியாவில் நான் மூன்றுமுறை விசாரிக்கப்பட்டேன். பாகிஸ்தானில் இதுவரை ஒரே ஒரு முறைதான். என்ன இருந்தாலும் பாகிஸ்தான் சிறு குழந்தைதானே!

பிரிட்டிஷ் அரசாங்கம் என்னுடைய எழுத்துகள் ஆபாசமானது என்று கருதியது. என் சொந்த அரசாங்கமும் அதே எண்ணத்தில்தான் இருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை விட்டுவிட்டது. ஆனால் என்னுடைய அரசாங்கம் அப்படிச் செய்யுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. கீழ் நீதிமன்றம் எனக்கு, மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. மேல் நீதிமன்றத்தில் நான் முறையிட்டதால் விடுவிக்கப்பட்டேன். ஆனாலும் என்னுடைய அரசாங்கம் நீதி நிலை நாட்டப்படவில்லை என்று நம்புவதால் என்னை விடுவித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், நான் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் என்ன தீர்மானிக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

என்னுடைய நாடு உங்களுடைய நாடாக இல்லாததைக் கண்டு நான் வருந்துகிறேன். உயர்நீதிமன்றம் என்னைத் தண்டிக்குமானால், என் நாட்டில் எந்த செய்தித்தாளும் என் புகைப்படத்தையோ, வழக்கு பற்றிய குறிப்புகளையோ வெளியிடாது.

என் நாடு ஏழ்மையானது. இங்கு பளபளக்கும் காகிதங்களோ, சிறந்த அச்சு இயந்திரங்களோ கிடையாது. இந்த ஏழ்மைக்கு உயிருடன் இருக்கும் நானே சாட்சி. அங்கிள், நீங்கள் நம்ப மாட்டீர்கள். இருபத்திரண்டு புத்தகங்களுக்கு ஆசிரியனாக இருந்தும் எனக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட கிடையாது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போகக்கூட என்னிடம் வசதிகள் ஏதும் கிடையாது என்று தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். என்னிடம் பேக்கார்ட்டே, டாஜோ கிடையாது. ஏன், ஏற்னெவே உபயோகப்படுத்தப்பட்ட கார்கூட என்னிடம் கிடையாது.

நான் எங்காவது போக வேண்டும் என்றால் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறேன். ஒரு பத்திக்கு ஏழு ரூபாய் வீதம் செய்தித்தாளில் என்னுடைய எழுத்து வெளிவந்து, இருபது முதல் இருபத்தைந்து ரூபாய் கிடைத்தால் டோங்காவை எடுத்துக் கொண்டு உள்ளூர் விஸ்கியை வாங்கக் கிளம்பி விடுவேன். இந்த விஸ்கி மட்டும் உங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்டு இருக்குமானால், அந்த சாராயத் தொழிற்சாலையை அணுகுண்டு போட்டு அழித்திருப்பீர்கள். அதனுடைய தரம் அப்படிப்பட்டது. அதைக் குடிப்பவன் ஓராண்டுக்குள் சொர்க்கத்திற்கு அனுப்பப்படும் உத்தரவாதம் கண்டிப்பாக உண்டு. நான் தடம் புரண்டு போகிறேன். நான் செய்ய விரும்புவது, என்னுடைய சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெலுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கத்தான். அவருடைய God’s Little acre' என்ற நாவலுக்காக வழக்குப் போட்டதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியும். அதாவது நான் இங்கு சந்தித்த அதே குற்றச்சாட்டு: ஆபாச இலக்கியம்.

அங்கிள், என்னை நம்புங்கள். ஏழு சுதந்திரங்களையும் உடைய உங்களுடைய நாட்டில் அவருடைய நாவல் ஆபாசமானது என்று வழக்கு தொடரப்பட்டதைக் கேள்விப்பட்ட போது, நான் அதிர்ச்சியுற்றுப் போனேன். உங்களுடைய நாட்டில் அனைத்துமே அதனுடைய மறைப்புகள் அகற்றப்பட்டு, காட்சிப் பொருளாக வைக்கப்படுவதுதானே சகஜமானது. அது பழமாகட்டும். பெண்ணாகட்டும், இயந்திரமாகட்டும், மிருகங்களாகட்டும், புத்தகங்களாகட்டும், நாட்குறிப்புகளாகட்டும், நிர்வாணப் பொருட்களின் பேரரசர் நீங்கள் என்பதால் ஏன் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல் மீது வழக்குப் போட்டீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் மட்டும் நீதிமன்றத் தீர்ப்பை ஒரு ஓட்டு ஓட்டவில்லை என்றால் கால்டுவெல் வழக்குப் பற்றி கேள்விப்பட்ட அந்த கணத்திலே நான் அடைந்த அதிர்ச்சியில் எங்களுடைய உள்நாட்டு மதுவை மிக அதிக அளவில் குடித்துத் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். ஒரு வழியில், என் போன்றவர்களை ஒழித்துக்கட்டும் சந்தர்ப்பத்தை இந்த நாடு இழந்தது துரதிர்ஷ்டவசமானது. அங்கிள், நான் அடித்தொண்டையிலிருந்து கத்தியிருந்தால் உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதிக் கொண்டிருக்க முடியாது. இயற்கையாகவே நான் மிகவும் கடமை உணர்வு கொண்டவன். என்னுடைய நாட்டை நான் நேசிக்கிறேன். கடவுளின் அருளால் இன்னும் சில நாட்களில் நான் இறந்துவிடுவேன். நான் என்னையே கொலை செய்து கொள்ளாவிட்டாலும், இன்று கோதுமை மாவு விற்கும் விலையில் வெக்கங்கெட்டவன் மட்டுமே அவனுக்கு இந்தப் பூமியில் விதிக்கப்பட்ட நாட்களை முழுமையாக வாழ முடியும்.

ஆக நான் கால்டுவெல் தீர்ப்பைப் படித்துவிட்டு, பெருமளவு உள்ளூர் சாராயத்தைக் குடித்து என் உயிரை மாய்த்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்தேன். அங்கிள், உங்களுடைய நாட்டில் எல்லாவற்றிலும் ஒருவித செயற்கை அலங்காரத்தன்மை உண்டு. ஆனால் என்னுடைய சகோதரன் கால்டுவெல்லை விடுவித்த நீதிபதியிடம் நிச்சயமாக எவ்வித செயற்கை அலங்காரத்தையும் காண முடியவில்லை. ஒரு வேளை அந்த நீதிபதி - என்னை மன்னிக்கணும், எனக்கு அவருடைய பெயர் தெரியாது; உயிரோடு இருந்தால் என் மதிப்பிற்குரிய வணக்கங்களை அவருக்குத் தெரியப்படுத்தவும்.

தீர்ப்பில் அவருடைய கடைசி வரிகள், அவருடைய அறிவார்ந்த தளத்தின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. அவர் எழுதுகிறார்: "இது போன்ற புத்தகங்களை ஒடுக்குவதின் மூலம் அந்தப் புத்தகத்தின் நோக்கம் அதுவல்ல என்றாலும், அது மக்கள் மத்தியில் அவசியமில்லாமல் ஆவலை உருவாக்கி, தேவையில்லாமல் காம உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பதையே என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நினைக்கிறேன். அமெரிக்க சமூகத்தில் ஒரு சாரார் பற்றிய உண்மையையே அவர் வெளிப்படுத்துகிறார் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். உண்மை என்பது எப்போதும் இலக்கியங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்பதே என் கருத்து."

என்னை தண்டித்த நீதிமன்றத்திலும் நான் இதையேதான் சொன்னேன் என்றாலும் அது எனக்கு மூன்று மாத கால கடுங்காவல் சிறை தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. என்னுடைய நீதிபதி உண்மையும் இலக்கியமும் பிரித்து வைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார். பெரும்பாலானோரும் இதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். நான் மூன்று மாத கால கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தயாராக உள்ளேன். ஆனால், நான் முந்நூறு ரூபாய் அபராதத்தைக் கட்டக்கூடிய நிலையில் இல்லை. அங்கிள், உங்களுக்குத் தெரியாது. நான் வறுமையில் இருப்பவன். கடின உழைப்பிற்கு பழக்கப்பட்டவன். பணத்திற்குப் பழக்கப்பட்டவன் இல்லை. எனக்கு முப்பத்தொன்பது வயசுதான் ஆகிறது. என் வாழ்க்கை முழுக்க நான் கடினமாக உழைத்துள்ளேன். இதை மட்டும் நினைத்துப் பாருங்கள். பிரபலமான எழுத்தாளனாக இருந்தும் என்னிடம் பேக்கார்ட் கார் கிடையாது.

என் நாடு ஏழ்மையில் இருப்பதால் நான் ஏழையாக இருக்கிறேன். எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு என்று எப்படியோ சமாளிக்க முடிகிறது. ஆனால் என்னுடைய பல சகோதரர்கள் இவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் கிடையாது.

என் நாடு ஏழ்மையான நாடாக இருக்கட்டும். ஆனால் அது ஏன் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறது? அங்கிள், நான் நிச்சயமாகச் சொல்கிறேன் இதற்குக் காரணம் நீங்களும் உங்களுடைய சகோதரன் ஜான்புல்-ம் தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. காரணம் அது உங்களுடைய காதுகளுக்கு இனிமையான இசையாக இருக்காது. நான் உங்களை மதிக்கும் இளையவனாக இருப்பதால் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அப்படி இருக்கவே விரும்புகிறேன். என் நாடு இத்தனை பேக்கார்ட், பைக் மற்றும் மாக்ஸ் ஃபேக்டர் ஒப்பனையைக் கொண்டிருந்தாலும் ஏன் ஏழ்மையில் உள்ளது என்று நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்பட்டுக் கேட்கலாம். அங்கிள், இது உண்மைதான். ஆனால் ஏன் என்ற காரணத்தை நான் சொல்லப் போவதில்லை. நீங்கள் உங்களுடைய இதயத்தைத் திறந்து பார்த்தால் உங்களுக்கே தெரியும். (உங்களுடைய அதி புத்திசாலி மருத்துவர்களால் உங்களுடைய இதயம் வெளியே எடுக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்)

பேக்கார்ட் மற்றும் பைக்கில் பயணிக்கும் என்னுடைய நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் உண்மையில் என்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்களில்லை. எங்கு என்னைப் போன்ற ஏழைகளும், என்னை விட ஏழைகளும் வாழ்கிறார்களோ அதுவே என்னுடைய நாடு. இவையெல்லாம் கசப்பான விஷயங்கள். ஆனால் இங்கு சர்க்கரைத் தட்டுப்பாடு உள்ளது. இல்லையென்றால் என்னுடைய வார்த்தைகள் மீது தேவைப்படும் அளவிற்குப் பூசியிருப்பேன். அதனால் என்ன? சமீபத்தில் நான் ஈவ்லின் வாக்கின் புத்தகம் ‘த லவ்ட் ஒன்ஸ்’ படித்தேன். அவர் உங்கள் நண்பரின் நாட்டைச் சேர்ந்தவர்தான். என்னை நம்புங்கள், உடனடியாக இந்தக் கடிதத்தை எழுத உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அந்தப் புத்தகத்தால் பாதிக்கப்பட்டேன்.

உலகத்தில் உங்களுடைய பகுதியில் பல மேதாவிகளைக் காண முடியும் என்று எப்போதும் பூரண நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்த பின் வாழ்க்கை முழுதும் அவருடைய விசிறியாகவே மாறிவிட்டேன் என்று சொல்லலாம். எத்தகைய செயல்! நான் சொல்கிறேன் உண்மையிலேயே அங்கு மிகவும் துடிப்புள்ள மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.

உங்களுடைய கலிபோர்னியாவில் இறந்தவர்களை அழகுபடுத்த முடியும் என்றும், அந்தக் காரியத்தைச் செய்வதற்குப் பல பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன என்றும் ஈவ்லின் வாக் தெரியப்படுத்துகிறார். நமது அன்புக்குரியவர் உயிரோடு இருக்கும்போது எவ்வளவு கோரமாக இருந்தாலும் இறந்த பின் அவர் ஆசைப்பட்ட அழகை அவருக்குக் கொடுக்க முடியும். சில படிவங்களில் உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம். முடிக்கப்பட்ட பொருளின் தரம், சிறப்பானதாக இருக்கும் என்பது மட்டும் உத்தரவாதம்; தேவைப்படும் பணத்தை நீங்கள் கொடுக்கத் தயாராக இருக்கும்வரை. இறந்து போனவரை எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் அழகுபடுத்த முடியும். இந்த நளினமான காரியத்தைச் செய்வதற்குப் பல நிபுணர்கள் உண்டு.

நம் அன்புக்குரியவரின் மோவாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய முகத்தில் அழகான புன்னகையை நட்டு வைக்க முடியும். அவருடைய கண் இமைகளைத் திறந்து வைப்பதோடு, நெற்றியைப் பார்ப்பதற்குப் பளபளவென்றும் மாற்றி அமைக்க முடியும். அதாவது இறந்தவர் கல்லறைக்குள் வைக்கப்பட்ட பின், அவருடைய கணக்கைத் தீர்ப்பதற்கு வரும் இரண்டு தேவ தூதர்கள் குழம்பிப் போகும் அளவிற்கு இவையெல்லாம் அவ்வளவு அற்புதமாக செய்து முடிக்கப்படும்.

அங்கிள், கடவுள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். உங்களுடைய மக்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. உயிரோடு இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதும், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகு படுத்தப்படுவதையும் ஒருவர் கேள்விப்பட்டிருக்கலாம். இங்கு அது பற்றி நிறைய பேச்சுகள் உண்டு. ஆனால் அது போலவே இறந்தவரையும் அழகு படுத்த முடியும் என்பதை இங்கு ஒருத்தரும் கேள்விப்பட்டதே கிடையாது. சமீபத்தில் உங்கள் நாட்டுப் பிரஜை ஒருவர் இங்கு வந்தார். சில நண்பர்கள் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அப்போது நான் சகோதரன் ஈவ்லின் வாக்கின் புத்தகத்தைப் படித்திருந்தேன்.

உங்கள் நாட்டைச் சேர்ந்தவருக்கு, அவர் புரிந்து கொள்ள முடியாத இரு வரி உருதுக் கவிதையைப் படித்துக் காண்பித்தேன். எப்படி இருந்தாலும் உண்மை என்னவென்றால், அங்கிள் நம்முடைய முகம் நமக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு அதைச் சிதைத்து விட்டோம். ஆனால் உயிரோடு இருந்ததைக் காட்டிலும் இறந்தபின் அழகுபடுத்துவதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். உண்மை என்னவென்றால் இந்தப் பூமியில் வாழ்வதற்கு உங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. மற்ற நாங்கள் எல்லோரும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களுடைய ஆகப் பெரிய உருதுக் கவிஞன் காலிப் நூறு வருடங்களுக்கு முன் எழுதினான்:

மரணத்திற்குப் பின் அவமானப்படுவது என் விதியாக இருந்தால்
என் முடிவைத் தண்ணீரில் மூழ்கி எதிர்கொண்டிருப்பேன்
அது என் சவ அடக்கத்தைத் தவிர்த்திருப்பதோடு
என் இறுதி ஓய்விடத்தில் தலை மீது கல்லேதும் விழுந்திருக்காது.

உயிரோடு இருக்கும்போது அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு காலிப் அச்சம் கொண்டது கிடையாது. தொடக்கத்திலிருந்து இறுதிவரை எப்போதும் அவன் அப்படிதான் இருந்தான். ஆனால் மரணத்திற்குப் பின் அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு அச்சம் கொண்டான். அவன் மிகவும் பண்பட்டவன். தன்னுடைய மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்று மட்டும் அவன் அச்சம் கொண்டிருக்கவில்லை, அவன் சென்ற பிறகு என்ன நடக்கும் என்று மிகத் தெளிவாகவும் உணர்ந்திருந்தான். அதனாலேயே அவன் தன்னுடைய மரணம் தண்ணீரில் மூழ்கி ஏற்பட்டால் சவ அடக்கமோ கல்லறையோ அவசியமில்லாமல் போகும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.

அவன் உங்களுடைய நாட்டில் பிறந்திருக்க வேண்டும் என்று எவ்வளவு அவா கொள்கிறேன். அவனது கல்லறைக்கு அவனை மிகப் பிரமாண்டமான ஊர்வலத்தில் எடுத்துச் சென்று, அவன் ஓய்வெடுக்கும் இடத்தில் வான் உயர கட்டிடத்தைக் கட்டியிருப்பீர்கள் அல்லது அவன் விருப்பம் சாத்தியப்பட்டிருந்தால் கண்ணாடிப் பெட்டிக்குள் அவனது உடல் வைக்கப்பட்டு மிருகக்காட்சி சாலைக்கு மக்கள் சென்று வருவது போல, அவனைப் பார்க்கப் போயிருப்பார்கள்.

உங்களுடைய நாட்டில் இறந்த மனிதர்களை அழகுபடுத்தும் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் இறந்த மிருகங்களுக்கும் அது சாத்தியமாகும் என்று சகோதரர் ஈவ்லின் வாக் எழுதுகிறார். ஒரு நாய் ஒரு விபத்தில் தன்னுடைய வாலை இழந்துவிட்டால் அதற்குப் புதியதாக ஒரு வாலைப் பொருத்திவிடலாம்.

உயிரோடு இருக்கும்போது அதுக்கு எத்தகைய உடல்ரீதியான குறை இருந்தாலும், மரணத்திற்குப் பின் அதையெல்லாம் சரி செய்து விடலாம். பிறகு அது சடங்குகளோடு புதைக்கப்பட்டு மலர்வளையங்கள் அதன் கல்லறை மீது வைக்கப்படும். ஒவ்வொரு வருடமும் நம் அன்பிற்குரியது இறந்த தினத்தன்று அதனுடைய எஜமானனுக்கு இதுபோல் பொறிக்கப்பட்ட அட்டை ஒன்று அனுப்பப்படும்: “சொர்க்கத்தில் உங்களுடைய டாமி (அல்லது ஜெஃபி) அதனுடைய வாலை (அல்லது காதை) ஆட்டிக்கொண்டே உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறது’’

இவையெல்லாம் எதை உணர்த்துகிறது என்றால் எங்களைக்காட்டிலும் உங்களுடைய நாட்டில் நாய்கள் எவ்வளவோ நல்ல நிலையில் உள்ளது. இங்கு இன்று நீங்கள் இறந்தால் நாளை மறக்கப்பட்டு விடுவீர்கள். குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்து போனால், உயிரோடு இருப்பவர்களுக்கு அது ஏற்படுத்திய பேரிழப்பால் இப்படித்தான் கதறுவார்கள்: “இந்தப் பாவப்பட்டவன் ஏன் இறந்தான்? அவனுக்குப் பதிலாக நானல்லவா இறந்திருக்க வேண்டும்’’. அங்கிள் உண்மை என்னவென்றால், எங்களுக்கு வாழவும் தெரியாது. சாகவும் தெரியாது. நான் இதையும் கேள்விப்பட்டேன்.

உங்களுடைய நாட்டுப் பிரஜை ஒருவர் அவர் இறந்த பின் எத்தகைய சவஅடக்கம் அவருக்குக் கொடுக்கப்படும் என்று தீர்மானமாகத் தெரியாததால், அவர் உயிரோடு இருக்கும்போது அவருக்கு சவ அடக்கம் எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்று நிகழ்த்திக் கொண்டாடினாராம். அவர் விருப்பப்பட்டால் ஒழிய எதுவுமே நடக்காத, செல்வம் கொழித்த, பகட்டான அவருடைய வாழ்க்கைக்கு இது தகுதியுடையதுதான். அவருடைய சவ அடக்கத்தில், காரியங்கள் சரியாகச் செய்யப்படாமல் போகும் சாத்தியங்களை அவர் ஒழித்துக் கட்ட விரும்பினார். உயிரோடு இருக்கும்போதே தன்னுடைய இறுதிச் சடங்குகளை அவரே நேராக நின்று பார்த்தது அவரளவில் நியாயமானதுதான். ஏனெனில் மரணத்திற்குப் பின் நடப்பவை எல்லாம் இங்கும் இல்லாதது; அங்கும் இல்லாதது.

நான் சற்று முன்தான் ‘Life’ (நவம்பர்-5 1951 சர்வதேச வெளியீடு) இதழைப் பார்த்தேன். அமெரிக்க வாழ்க்கை பற்றிய மிக முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். இரண்டு பக்கங்கள் விரிந்திருந்த அந்த விவரணை உங்கள் நாட்டின் ஆகச்சிறந்த கொள்ளைக்காரனின் இறுதிச் சடங்கை விவரித்திருந்தது. நான் வில்லிமொரீட்டியின் (அவனின் ஆன்மா சாந்தி அடையட்டும்) படத்தைப் பார்த்தேன்.

சமீபத்தில் $55,000க்கு விற்கப்பட்ட அவருடைய மிகப் பிரம்மாண்டமான வீட்டையும் பார்த்தேன். இந்த உலகத்தின் கவனச் சிதறல்களிலிருந்து தப்பிக்க அவன் வைத்திருந்த ஐந்து ஏக்கர் நிலத்தையும் பார்த்தேன். கண்கள் மூடியிருக்க இறந்து போனதுபோல் அவன் படுக்கையில் கிடந்த படத்தையும் பார்த்தேன். $5000 விலை நகைப்பெட்டியும், அவருடைய சவ அடக்கத்திற்கு எழுபத்தைந்து கார்கள் ஊர்வலமாக வந்த படங்களும் அதில் இருந்தது. கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன், அது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. என் வாயில் மண் விழட்டும். ஒருவேளை நீங்கள் இறக்க நேர்ந்தால், வில்லி மோரீட்டியை விட பிரம்மாண்டமான இறுதி ஊர்வலம் உங்களுக்கும் நடத்தப்பட வேண்டும்.

பயணம் செய்வதற்கு ஒரு மிதி வண்டி கூட இல்லாத ஏழ்மையில் இருக்கும் பாகிஸ்தான் எழுத்தாளனின் உண்மையான வேண்டுதல் இதுதான். உங்களுடைய நாட்டில் உள்ள தொலைநோக்குப் பார்வை கொண்டுள்ளவர்கள் போல், நீங்களும் உயிரோடு இருக்கும்போதே உங்களுடைய இறுதிப் பயணத்தைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். இதை நீங்கள் மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. எதையுமே தவறாகவே செய்யும் பழக்கமுடையவர்கள் இதிலும் தவறு செய்யக்கூடும். நீங்கள் இறந்தபின் உங்களுடைய உடல் தகுதியான அளவிற்கு அழகுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படாமல் போகலாம்.

இந்தக் கடிதம் உங்களிடம் வந்து சேர்வதற்கு முன்னதாகவே கூட உங்களுடைய இறுதி ஊர்வலத்திற்கு நீங்களே சாட்சியாக இருந்திருக்கக் கூடும். நீங்கள் எல்லாம் தெரிந்தவர் என்பதால் மட்டுமல்ல, நீங்கள் என்னுடைய தந்தையின் சகோதரர் என்பதாலும் தான் நான் இதையெல்லாம் சொல்கிறேன்.

என் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல்லுக்கும், அவரை ஆபாச வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரியப்படுத்தவும். நான் என்னை அறியாமல் ஏதாவது தவறு இழைத்திருந்தால் என்னை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களின் ஏழைச் சகோதரனின் மகன்
சாதத் ஹசன் மண்ட்டோ
பாகிஸ்தானில் குடியிருப்பவன்
(இந்தக் கடிதத்திற்குப் போதுமான அளவு தபால்தலை இல்லாததால் தபாலில் சேர்க்க முடியவில்லை.)

2

31 லஷ்மி மேன்ஷன்,
ஹால்ரோடு,
லாகூர்.

என் மதிப்பிற்குரிய அங்கிள்,

வணக்கம்.

நான் சமீபமாக உங்களுக்கு ஏதும் எழுதவில்லை. உங்களிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை என்றாலும் உங்கள் தூதரகத்திலிருந்து ஒரு நாகரிகமான மனிதர் - அவருடைய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, சில நாட்களுக்கு முன் உள்ளூர்க்காரர் ஒருவரோடு என்னைப் பார்க்க வந்தார். அந்த நாகரிகமான மனிதரோடு நடந்த உரையாடலின் சுருக்கத்தை இங்கு எழுதுகிறேன்.

நாங்கள் ஆங்கிலத்தில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் ஆங்கிலம் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கை முழுக்க என்னால் புரிந்து கொள்ள முடியாத, அமெரிக்க மொழி அல்ல அது.

நாங்கள் முக்கால் மணிநேரம் பேசினோம். ஒவ்வொரு அமெரிக்கனும், ஒரு பாகிஸ்தானியையோ, ஒரு இந்தியனையோ சந்திக்கும்போது சந்தோஷப்படுவது போலவே என்னைச் சந்தித்ததிலும் சந்தோஷப்பட்டார். அவரைச் சந்தித்ததில், எனக்குப் பெரும் மகிழ்ச்சி என்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தேன். உண்மை என்னவென்றால், வெள்ளைக்கார அமெரிக்கர்களைச் சந்திப்பதில் நான் எப்போதுமே மகிழ்ச்சி அடைந்தது கிடையாது.

தயவு தாட்சண்யம் அற்ற என்னுடைய வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். போன யுத்த சமயத்தில், நான் பம்பாயில் இருந்தபோது ரயில் நிலையமான பம்பாய் சென்ட்ரலில் நான் என்னையே கண்டேன். அந்த நாட்களில் நகரம் முழுக்க எங்கு பார்த்தாலும் அமெரிக்கர்கள்தான். பாவப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களை எவரும் சீண்டவில்லை. பம்பாயைச் சேர்ந்த ஆங்கில-இந்தியப் பெண்மணிகள், யூதப் பெண்கள், பார்ஸி பெண்கள் நாகரிகம் என்பதால் கண்ட இடத்தில் படுத்தவர்கள் இப்போது ஒரு அமெரிக்கனோடு கைகோர்த்து நடப்பதைப் பார்க்க முடிந்தது.

அங்கிள், நான் சொல்வதை நம்புங்கள். உங்களுடைய படைவீரர்களில் ஒருவர் ஒரு ஆங்கில-இந்தியப் பெண்ணுடனோ, யூதப் பெண்ணுடனோ, பார்ஸி பெண்ணுடனோ, கைகோர்த்து பிரிட்டிஷ் சிப்பாய்களைக் கடந்து செல்ல நேர்ந்தால், அவர்கள் பொறாமையால் வெந்து எரிவதைப் பார்க்க முடிந்தது.

இந்த உலகத்தில் உண்மையிலேயே நீங்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான மனிதர்கள்தான். எங்களுடைய படை வீரர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவில் பாதி அளவைக்கூட பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய அலுவலக உதவியாளனுக்குக் கூட மூச்சு முட்டும்வரை ஒரு வயிற்றை அல்ல, இரண்டு வயிறுகளை நிரப்பிக் கொள்ள முடிகிறது.

அங்கிள், நான் தவறாகப் பேசுவதற்கு மன்னித்துவிடுங்கள். ஆனால் உண்மையிலேயே இது மாபெரும் ஏமாற்றும் வேலை இல்லையா? இதற்கெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது? இதையெல்லாம் சொல்வதற்கு ஏற்ற இடம் இது இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், உங்கள் நடத்தைகள் எல்லாம் வேறு எதற்காகவும் அல்லாமல் ஒரே ஒரு குறிக்கோளை மட்டுமே கொண்டது: பகட்டாய் வெளிப்படுத்துவது. ஒருவேளை நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் தவறு செய்வது மனித இயல்புதானே! நீங்களும் மனிதர்தான் என்று நினைக்கிறேன். அப்படி இல்லையென்றால் அதற்காக என்னால் எதுவும் செய்ய முடியாது.

நான் தடம் புரண்டு போகிறேன். பம்பாய் சென்ட்ரலில் உங்களுடைய படை வீரர்கள் பலரைப் பார்த்தது பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் என்றாலும் சில கருப்பர்களையும் எதிர்கொண்டேன். உண்மையைச் சொல்லத்தான் வேண்டும் என்றால், அந்தக் கருப்புப் படை வீரர்கள் வெள்ளைக்காரர்களைக் காட்டிலும் திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்.

உங்களுடைய மக்கள் பெரும்பாலானோர் ஏன் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வெள்ளையர்கள் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் நீக்ரோ என்றழைக்கப்படும் கருப்பர்கள் கூட அதை அணிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குக் கண்ணாடி ஏன் தேவைப்படுகிறது? எனக்கு எந்தக் காரணமும் தெரியவில்லை. இப்படியும் இருக்கலாம். இவையெல்லாம் உங்களுடைய பெரிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். நீங்கள் ஐந்து சுதந்திரங்களைப் பெற்றுள்ளதால் உங்களால் சுலபமான நிரந்தரமான தூக்கத்திற்கு ஆளாகப்படுகிறவர்கள் - நீங்கள் அப்படி செய்வது உண்டுதானே, உங்களை உங்களுடைய கண்ணாடிகள் மூலம் மட்டுமே பார்க்கப்படுவதை நீங்கள் விரும்பியிருக்கலாம்.

பம்பாய் சென்ட்ரலில் நான் ஒரு நீக்ரோ படை வீரரைப் பார்த்தேன். அவருடைய புஜங்களின் உறுதியைப் பார்த்த அந்த கணத்திலேயே என் உயரத்தில் பாதியாக நான் சுருங்கிப்போனேன். எப்படியோ என் தைரியத்தை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவரை நோக்கி நடந்தேன். அவர் முதுகைச் சுவரில் சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மூட்டை முடிச்சுகள் அவருக்கு அருகில் இருந்தது. கண்கள் பாதி மூடியிருந்தன.

என்னுடைய காலணிகளைத் தரையில் தேய்த்து நான் சத்தம் எழுப்ப, அவர் கண்களைத் திறந்து பார்த்தார். நான் அவரிடம் ஆங்கிலத்தில், ‘நான் இவ்வழியே போய்க் கொண்டிருக்க, உங்கள் ஆளுமையில் மெய் மறந்து நின்றுவிட்டேன்’ என்றேன். பிறகு அவரை நோக்கி நட்புக்கரம் நீட்டினேன்.

கண்ணாடி அணிந்து கொண்டிருந்த அந்தப் படை வீரர், தன்னுடைய திடகாத்திரமான கையால் என் கையைப் பிடிக்க, என் கை எலும்புகள் சுக்குநூறாவதற்கு முன்பே என் கையை விடுவிக்குமாறு கெஞ்சினேன். அவருடைய கருத்த உதடுகளில் பெரிய புன்னகை தோன்றியது, அவர் என்னிடம், ‘நீங்கள் யார்?’ என்று சுத்தமான அமெரிக்க உச்சரிப்பில் கேட்டார்.

என் கையைத் தடவிக் கொடுத்தபடியே, ‘நான் இங்குதான் வாழ்கிறேன்’ என்றேன். மேலும், ‘நான் உங்களை இந்த நிலையத்தில் பார்த்தவுடன் ஓரிரு வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது’ என்றேன்.

‘இங்கு நிறைய படை வீரர்கள் இருக்கிறார்கள். ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கேட்டார்.

இது சிக்கலான கேள்வி என்றாலும் நான் சிரமப்படாமல் அதற்கு பதில் தந்தேன். ‘நான் கருப்பு நீங்களும் அப்படியே. நான் கருப்பின மக்களை நேசிக்கிறேன்’ என்றேன். மிகப்பெரிய சிரிப்பை வெளிப்படச் செய்தார். அவருடைய கருத்த உதடுகள் அவ்வளவு அழகாக இருந்தது. அதில் முத்தமிடவேண்டும் என்று தோன்றியது. கதை முற்றும்.

அங்கிள், உங்களுடைய பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். ‘பாத்திங் பியூட்டி’ என்ற உங்களுடைய திரைப்படம் ஒன்றை முன்பு ஒரு முறை பார்த்தேன். ‘இத்தனை அழகான கால்களை எங்கிருந்து எப்படி அங்கிள் ஒன்று திரட்டினார்' என்று என் நண்பர்களிடம் பின்னர் கேட்டேன். ஏறக்குறைய இருநூற்றி ஐம்பது கால்கள் அதிலிருந்தது என்று நினைக்கிறேன். அங்கிள் உங்கள் நாட்டில் பெண்கள் கால்கள் அப்படித்தான் இருக்குமா? அப்படி இருந்தால் கடவுள் புண்ணியத்தில் (அதாவது உங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருந்தால்) குறைந்தபட்சம் அதை பாகிஸ்தானில் கண்காட்சியாக்குவதைத் தடுத்து நிறுத்துங்கள்.

இங்கு பெண்களின் கால்கள் உங்கள் நாட்டுப் பெண்களின் கால்களைவிட அழகாக இருப்பதுகூட சாத்தியம். ஆனால் அதை இங்கு யாரும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. இதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நாங்கள் எங்களுடைய மனைவிமார்கள் கால்களை மட்டுமே பார்த்திருக்கிறோம். மற்ற கால்கள் எல்லாம் எங்கள் பார்வைக்குத் தடை செய்யப்பட்டதாகும். உங்களுக்குத் தெரியும்தானே, நாங்கள் மரபைப் போற்றுபவர்கள்.

நான் மீண்டும் தடம் புரண்டு போகிறேன் என்றாலும் இம்முறை மன்னிப்புக் கோரப்போவதில்லை. ஏனெனில் இத்தகைய எழுத்துகள்தான் உங்களுக்குப் பிடித்திருக்கும். என்னைப் பார்க்க வந்த அந்த நாகரிகமான மனிதர், உங்களுடைய தூதரகத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லி விட வேண்டும் என்று தோன்றுகிறது. அவளுக்காக ஒரு கதை எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். எனக்கு ஆங்கிலத்தில் எழுதத் தெரியாததால், எனக்கு அதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் நான் அவரிடம், ‘சார் நான் உருது எழுத்தாளன். ஆங்கிலத்தில் எப்படி எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியாது’ என்றேன்.

“நான் உருது மொழியில் ஒரு பத்திரிகை கொண்டு வருவதால், எனக்கு உருதுக் கதைதான் வேண்டும்” என்று பதில் தந்தார். இதற்கு மேலும் விசாரிக்க விரும்பாததால், ‘நான் சம்மதிக்கிறேன்’ என்றேன்.

கடவுள்தான் என்னுடைய சாட்சி. உங்கள் உத்தரவின் பேரில்தான் அவர் என்னைப் பார்க்க வந்துள்ளார் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை உங்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தை, இவருக்கு நீங்கள் படிக்க கொடுத்திருக்கலாம்.

இதையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். எத்தனை காலத்திற்குப் பாகிஸ்தானுக்கு உங்களுடைய கோதுமை தேவைப்படுகிறதோ, அதுவரை நான் உங்களிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்ள முடியாது. ஒரு பாகிஸ்தானி என்ற முறையில் (என்னுடைய அரசாங்கம் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்ட குடிமகனாக என்னைப் பார்க்கவில்லை என்றாலும்) நான் கடவுளிடம் இதைத்தான் வேண்டிக் கொள்கிறேன்.

உங்களுக்கு உண்ணத் தகுந்த கீரை வகைகளும் வரகு தானியமும் தேவைப்படும் காலம் ஒன்று வரும். அன்று நான் உயிரோடு இருந்தால் நிச்சயமாக அதையெல்லாம் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.

என்னிடம் கதை கேட்ட அந்த நாகரிகமான மனிதர், அதற்கு நான் எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறேன் என்று தெரிந்து கொள்ள விரும்பினார்.

அங்கிள், பொய் சொல்வது உங்களுக்கு சாத்தியமானது - நிஜமாகவே அப்படிச் சொல்வதோடு, அதை ஒரு கலையாகவே அதை மாற்றிவிட்டீர்கள். ஆனால் எனக்கு அப்படி செய்யத் தெரியாது.

இருந்தாலும் அன்றைய தினம் நான் பொய் சொன்னேன்.

‘என் கதைக்கு ரூபாய் இருநூறு கேட்கிறேன்’ என்றேன்.

உண்மை என்னவென்றால் இங்கு பெரும்பாலான வெளியீட்டாளர்கள் ஒரு கதைக்கு நாற்பது முதல் ஐம்பது ரூபாய் வரை தான் கொடுப்பார்கள். அதனால் என் கதைக்கு 200 ரூபாய் வேண்டுமென்று சொன்னபோது மிகவும் அசிங்கமாகவும், அவமானமாகவும் உணர்ந்தேன். ஆனால் எல்லாம் கடந்துவிட்டது.

அங்கிள், நான் அதிர்ச்சியடைந்த அதே அளவிற்கு நீங்கள் அனுப்பி வைத்த அந்த நாகரிகமான மனிதரும் அதிர்ச்சியடைந்தார். (இது உண்மையா அல்லது நடிப்பா என்று எனக்குத் தெரியாது) ‘வெறும் இருநூறு ரூபாய் தானா... நீங்கள் குறைந்தபட்சம் ஐநூறு ரூபாயாவது கேட்க வேண்டும்’ என்று சொன்னார்.

ஒரு கதைக்கு ஐநூறு ரூபாய் கேட்கலாம் என்று அதிகபட்ச கற்பனையில்கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்பதால், அவர் பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. இருந்தாலும் நான் சொன்னதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்பதால், ‘இங்க பாருங்க சார்., இருநூறு ரூபாய்தான் இது சம்பந்தமாக இதற்கு மேலும் எந்தப் பேச்சு வார்த்தைக்கும் நான் தயாரில்லை’ என்று பதில் தந்தேன்.

நான் குடித்திருப்பதாக நினைத்து அவர் திரும்பச் சென்று விட்டார். நான் குடிக்கிறவன் தான். எதைக் குடிக்கிறேன் என்று என்னுடைய முதல் கடிதத்தில் விவரித்துள்ளேன். அங்கிள், இங்கு தயாரிக்கப்படும் அந்த விஷத்தைத் தொடர்ந்து ஐந்து வருடங்களாகக் குடித்துக் கொண்டிருந்தும், நான் உயிரோடு இருக்கிறேன் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் எப்போதாவது இங்கு வர நேர்ந்தால் இந்தக் கேடுகெட்டதை உங்களுக்கும் குடிக்கக் கொடுக்கிறேன். நீங்களும் அதைக் குடித்துவிட்டு உங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு என்னைப்போல் உயிரோடு இருக்கலாம்.

எப்படியிருந்தாலும் அடுத்தநாள் காலை நான் வராண்டாவில் சவரம் செய்து கொண்டிருந்தபோது உங்களுடைய இந்த நாகரிகமான மனிதர் மீண்டும் தோன்றி, "இங்கே பாருங்கள். இருநூறு ரூபாய்தான் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். முந்நூறு ரூபாயாவது வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்.

நான் நல்லது என்று சொல்லி அவர் கொடுத்த முந்நூறு ரூபாயை வாங்கிக் கொண்டேன். அந்தப் பணத்தை என் சட்டைப்பையில் வைத்தபின் அவரிடம், ‘நான் உங்களிடம் நூறு ரூபாய் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எழுதுவது உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. அதில் மாற்றங்கள் செய்யும் உரிமையும் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்' என்றேன்.

இதற்குப் பிறகு அவர் என்னைப் பார்க்க வந்ததே கிடையாது. நீங்கள் அவரைச் சந்திக்க நேர்ந்தாலோ அல்லது உங்களிடம் அவருடைய அறிக்கையை சமர்ப்பிக்கும்போதோ உங்கள் பாகிஸ்தான் சகோதரரின் மகனுக்கு அதைத் தெரியப்படுத்துங்கள்.

அந்த முந்நூறு ரூபாயை நான் ஏற்கனவே செலவு செய்துவிட்டேன். உங்களுக்கு அந்தப் பணம் திரும்ப வேண்டும் என்றால், மாதத்திற்கு ஒரு ரூபாய் என்ற வீதத்தில் திரும்பக் கொடுத்து விடுகிறேன்.

உங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

உங்களுக்குக் கீழ்ப்படிந்த
உங்கள் சகோதரனின் மகன்.
சாதத் ஹசன் மண்ட்டோ

3

31, லஷ்மி மேன்ஷன், 15, மார்ச் 1954
ஹால் வீதி, லாகூர்.

அன்புள்ள அங்கிள்,

வணக்கம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இதை எழுதுகிறேன். விஷயம் என்னவென்றால் நான் நோயுற்று இருந்தேன். எங்களுடைய கவித்துவ மரபில் நோய்க்கான மருந்து என்பது நீண்ட கழுத்துள்ள குவளையிலிருந்து, உமர்கயாமின் கவிதைகளிலிருந்து நேரடியாகத் தோன்றும் ஒயிலான கவர்ச்சி மங்கைகள், அருமருந்தை ஊற்றிக் கொடுப்பதில்தான் உள்ளது. இருந்தாலும் நான் இதையெல்லாம் வெறும் கவிதை என்றே நினைக்கிறேன். குவளையை ஏந்தி வரும் அழகு மங்கைகள் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. இங்கு தாடி முளைத்த கோரமான வேலையாட்கள் கூட குவளை ஏந்தி வருவது கிடையாது.

இந்த மண்ணிலிருந்து அழகெல்லாம் ஓடோடி விட்டது. பெண்கள் முகத்திரைக்கு வெளியே வந்துவிட்டார்கள் என்றாலும், அவர்களுடைய முகத்தை ஒரே ஒருமுறை பார்த்தால் போதும், முகத்திரைக்குப் பின்னாலேயே அந்த முகங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்களுடைய மாக்ஸ் ஃபேக்டர் அவர்களுடைய முகங்களை மேலும் கோரமாக்கிவிட்டது. இலவச கோதுமை, இலவச இலக்கியம், இலவச ஆயுதங்கள் என்று நீங்கள் அனுப்பி வைக்கிறீர்கள். மிகத் தூய்மையான இருநூறு அமெரிக்கப் பெண்மணிகளை நீங்கள் ஏன் இங்கு அனுப்பி வைக்கக்கூடாது? குறைந்தபட்சம் குடிப்பதற்கு எப்படி ஊற்றிக் கொடுக்க வேண்டுமோ அப்படியாவது அவர்கள் ஊற்றிக் கொடுக்கட்டும்.

நான் நோயுற்றுப் போக, அசாத்திய வேகம் கொண்ட அந்த மதுதான் காரணம் நான் கடவுளைச் சபிக்கிறேன். கலப்படம் ஏதும் இல்லாமல் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சொல்வதென்றால் - அது விஷம். எனக்கு ஏனென்று தெரியாததும் இல்லை. புரிந்து கொள்ள முடியாததும் இல்லை. ஆனால் கவிஞன் மீர் எழுதிய வரிகள் என் நிலைப்பாட்டிற்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.

எவ்வளவு சாதாரணமானவன் இந்த மீர். மருந்து விற்பவனின் மகன்தான் அவனை நோயுறச் செய்தான்மருந்து விற்பவனின் மகன்தான் அவனுக்கு மருந்துகளை வாங்கி வர ஓடினான். எந்த மருந்து விற்பவனின் மகனால் அவன் நோயுற்றிருக்கிறான் என்று மீர் அறிந்திருந்தும், ஏன் அதே மருந்து விற்பவனின் மகனிடம் மருந்தை எதிர்பார்க்கிறான் என்று யாருக்குத் தெரியும். நான் எவனிடமிருந்து என் விஷத்தை வாங்குகிறேனோ அவன் என்னைக் காட்டிலும் மோசமாக நோயுற்றுக் கிடக்கிறான். நான் உயிரோடு இருப்பதற்குக் காரணம் கடின உழைப்புக்குப் பழக்கப்பட்டுப் போனதுதான். அவன் நிலையில் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.

மூன்று மாதங்கள் மருத்துவமனையின் பொது வார்டில் இருந்தபோது அமெரிக்காவிலிருந்து எந்த உதவியும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் நோயுற்று இருந்ததையே நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருந்தால் நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று டெராமைசின் புட்டிகளை எனக்கு அனுப்பி வைத்து, அதற்காக இந்த உலகத்திலும் அடுத்த உலகத்திலும் நற்பெயரைப் பெற்றிருப்பீர்கள்.

அயல்நாடுகளில், எங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் செய்ய நிறைய இருக்கிறது என்றாலும் எங்களுடைய அரசாங்கம் எந்த நிலையிலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஓவியர்கள் மீது கொஞ்சமும் ஈடுபாடு காட்டப் போவதில்லை.

என்னால் நினைவில் கொண்டு வர முடிகிறது. புலம்பிக் கொண்டிருந்த எங்களுடைய முந்தைய அரசாங்கம் ஃபிர்தௌஸி -இ- இஸ்லாம் ஜூலந்தரியை மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று பாடல்களைப் பிரபலப்படுத்தும் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு அவருக்குக் கொடுக்கப்பட்டது எல்லாம் ஒரு வீடும் ஒரு அச்சு இயந்திரமும்தான். இன்று நீங்கள் செய்தித்தாள்களை விரித்துப் பார்த்தால் என்ன பார்க்க முடிகிறது?

பாகிஸ்தானுக்கு தேசியகீதம் உருவாக்க அமைக்கப்பட்ட குழுவிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டதால், ஹஸிப் ஜூலந்தரி புலம்பிக் கொண்டிருக்கிறார். உலகிலேயே பெரிய இஸ்லாமிய நாட்டிற்குத் தேசியகீதம் எழுதுவதற்கும், ஏன் அதை இசை வடிவில் கொடுப்பதற்கும் உள்ள ஒரே கவிஞர் அவர்தான். பிரிட்டிஷார் போய் விட்டதால் அவர் தன்னுடைய பிரிட்டிஷ் மனைவியை விவகாரத்து செய்துவிட்டார். இப்போது அவர் ஒரு அமெரிக்க மனைவியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கிள், கடவுளுக்குப் புண்ணியமாகட்டும். அவருக்கு இந்த விஷயத்தில் ஏதாவது உதவி செய்து, மிக மோசமான முடிவிலிருந்து அவரைக் காப்பாற்றுங்கள்.

உங்களுடைய சகோதரன் மகன்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும், இந்த சகோதரன் மகன் போன்ற உண்மையானவனை நீங்கள் அணுகுண்டு வெளிச்சத்தில் கூட காண முடியாது. அதனால் நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். நான் வேண்டுவது எல்லாம் இதுபோல் ஒரு அறிக்கையை நீங்கள் வெளியிட வேண்டும்: ‘அதாவது உங்கள் நாடு (காலம் முடியும் வரை கடவுள் அதைக் காப்பாற்ற வேண்டும்) ஆயுதங்கள் கொடுத்து எங்கள் நாட்டிற்கு (இந்த நாட்டில் உள்ள மதுபான தயாரிப்பாளர்களை அந்தக் கடவுள் ஒழித்துக் கட்டட்டும்) உதவ வேண்டுமானால் சாதத் ஹசன் மண்ட்டோவை உங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்’.


ஒரே இரவில் என்னுடைய மதிப்பு எங்கோ போய்விடும். இந்த அறிவிப்புக்குப் பிறகு, நான் ‘ஷாமா’ மற்றும் ‘டைரக்டரி’யில் வரும் குறுக்கெழுத்துப் போட்டியை விளையாடுவதை நிறுத்திவிடுவேன். மிக முக்கியமானவர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவார்கள். உங்களுடைய வழக்கமான பல்லிளிப்பை ‘ஏர் மெயிலி’ல் எனக்கு அனுப்பி வைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதை என் முகத்தில் ஒட்ட வைத்துக்கொண்டு வருகிறவர்களை ஒழுங்காக அப்போதுதான் வரவேற்க முடியும்.

இது போன்ற பல் இளிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. உதாரணத்திற்கு, ''நீ கழுதை', ' நீ வழக்கத்திற்கு மாறாக அதி புத்திசாலி', 'எனக்கு மன அமைதியைத் தவிர வேறு எதுவும் இந்தச் சந்திப்பில் கிடைக்கவில்லை', 'நீ அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டி-சர்ட்', 'நீ பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டி', நீ உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்து', 'நீ கோக்கோ-கோலா' இத்யாதி.. இத்யாதி...

பாகிஸ்தானில் நான் வாழ விரும்ப காரணம், பூமியில் இந்தத் துண்டுப் பகுதியை நான் நேசிக்கிறேன். இதிலிருந்து புறப்படும் தூசியெல்லாம் நிரந்தரமாக என் இதயத்தில் படிந்து விட்டது. இருந்தாலும் என் ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்கு உங்கள் நாட்டிற்கு வருவேன். என் இதயத்தைத் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் உங்கள் நாட்டு நிபுணர்களிடம் கொடுத்து அதையெல்லாம் அமெரிக்காவாக மாற்றிக் கொள்வேன். எனக்கு அமெரிக்க வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறது.

உங்கள் டி-சர்ட் வடிவமைப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது. அது மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதோடு விளம்பரங்களுக்கும் ரொம்பவும் உபயோகமானது. ஒவ்வொரு நாளும் அன்றைய பிரச்சார வரிகளை அதில் அச்சடித்து ஷ¨ஸானிலிருந்து காபி ஹவுஸ் முதல் சீன உணவகம் வரை போனால் அதில் உள்ள வரிகளை எல்லோரும் படிக்கலாம். டீ-சர்ட் போட்டுக் கொண்டு, நீங்கள் அன்பளிப்பாகக் கொடுத்த பைப்பை என் பற்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு, மாலுக்குப் போக எனக்கு பேக்கார்ட்டு வண்டியும் தேவை. என்னைப் பார்த்தவுடன் எல்லா முற்போக்கு மற்றும் முற்போக்கு அல்லாத எழுத்தாளர்கள் அனைவரும் அவர்களுடைய நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

ஆனால் பாருங்கள் அங்கிள், காருக்கு பெட்ரோலை நீங்கள்தான் வாங்கித் தர வேண்டும். இருந்தாலும் எனக்கு பேக்கார்ட்டு கிடைத்த அந்த நொடியிலேயே 'ஈரானின் ஒன்பது மணங்கு எண்ணெயும் ராதையும்' என்று கதை எழுதுவதாக உறுதிமொழி தருகிறேன். என்னை நம்புங்கள். அந்தக் கதை பிரசுரமாகும் அந்தக் கணத்திலேயே ஈரான் எண்ணெயோடு உள்ள எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும். பிறகு உயிரோடு இருக்கிற மௌலானா ஜபார் அலிகான் 'லாய்ட் ஜார்ஜும் எண்ணெயும்' என்ற கவிதையை மாற்றி எழுத வேண்டி வரும்.

நான் உங்களிடம் எதிர்பார்க்கும் இன்னொரு விஷயம் குட்டிக் குட்டியான அணுகுண்டுகளை நீங்கள் எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிக நீண்ட நாட்களாக ஒரு நற்காரியம் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளேன். அது என்னவென்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்படுவது இயற்கையானதுதான்.

நீங்கள் எத்தனையோ நற்காரியங்கள் செய்திருக்கிறீர்கள். தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். ஹிரோஷிமாவை நிர்முலமாக்கினீர்கள். நாகசாகியை தும்பும் தூசுமாக்கினீர்கள். ஒவ்வொன்றும் அதனதன் வடிவில் என்று பல ஆயிரம் குழந்தைகள் ஜப்பானில் பிறப்பதற்குக் காரணமானீர்கள். எனக்கு வேண்டியதெல்லாம், எனக்குச் சில சலவை இயந்திரங்களை அனுப்பி வையுங்கள். இது அப்படித்தான்: இங்கு பல முல்லா வகையறாக்கள் சிறுநீர் கழித்த பிறகு ஒரு கல்லை எடுத்து, ஒரு கையை நாடா அவிழ்க்கப்பட்ட சல்வாருக்குள் விட்டு சிறுநீர் கழித்த பிறகு சொட்டக்கூடிய துளிகளைக் கல்லில் பிடித்து, அவர்கள் நடையைத் தொடருகிறார்கள். இதைப் பொதுவில் எல்லோரும் பார்ப்பது போல் செய்கிறார்கள். நான் விருப்பப்படுவது எல்லாம் அப்படி ஒருவன் தோன்றும் அந்த சமயத்தில் நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த அணுகுண்டை எடுத்து அவன் மீது வீச அந்த முல்லாவும் அவன் பிடித்துக் கொண்டிருக்கும் கல்லும் புகையாக மாற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

எங்களோடு நீங்கள் போட்டுள்ள இராணுவ ஒப்பந்தம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதை நீங்கள் அப்படியே தொடர வேண்டும். இந்தியாவோடும் இதற்குச் சமமான ஒன்றை நீங்கள் கையெழுத்திட வேண்டும். போன யுத்தத்தில் நீங்கள் உபயோகித்து இப்போது பயனற்று இருக்கும் ஆயுதங்களை எல்லாம் எங்கள் இருவருக்கும் விற்பனை செய்யுங்கள். இந்தக் குப்பைகள் எல்லாம் உங்களிடமிருந்து அகற்றப்படுவதோடு, உங்களுடைய ஆயுதத் தொழிற்சாலைகளும் இனிமேல் வேலையற்று இருக்காது.

பண்டிட் ஜவகர்லால் நேரு காஷ்மீரைச் சேர்ந்தவர். அதனால் அவருக்கு சூரிய ஒளியில் வைத்தவுடன் வெடிக்கும் துப்பாக்கி ஒன்றை நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். நானும் காஷ்மீரைச் சேர்ந்தவன்தான். ஆனால் முசல்மான். அதனால்தான் எனக்கென்று சிறிய அணுகுண்டுகளைக் கேட்கிறேன்.

இன்னும் ஒரு விஷயம். எங்களால் அரசியல் சாசனத்தை உருவாக்க முடியவில்லை. அதனால் தயவுபண்ணி சில நிபுணர்களை அனுப்பி வையுங்கள். ஒரு தேசம், தேசியகீதம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனம் இல்லாமல் இருக்க முடியாது - உங்களுடைய விருப்பமும் அதுவாக இருந்தால் மட்டும்.

இன்னும் ஒரு விஷயம். இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்தவுடன் ஒரு கப்பல் முழுக்கத் தீப்பெட்டிகளை எனக்கு அனுப்பி வைக்கவும். இங்கு தயாரிக்கப்படும் தீக்குச்சிகள் ஈரானில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளோடு உரசினால்தான் பற்ற வைக்க முடிகிறது. பாதிபெட்டி வரை உபயோகித்த பின், மிச்சத்தை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டிகள் உதவியில்லாமல் உபயோகிக்க முடியாமல் வீணாகிறது. ஆனால் அது தீக்குச்சி போல் அல்லாமல் பட்டாசுபோல் நடந்து கொள்கிறது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மேலங்கி அற்புதமானது. அவை இல்லாமல் எங்கள் லண்டா பஜார் வெறிச்சோடிக் கிடக்கும். அங்கிள், நீங்கள் ஏன் எங்களுக்கு டிரவுசர்களையும் அனுப்புவதில்லை. நீங்கள் உங்கள் டிரவுசர்களைக் கழற்றுவதே கிடையாதா? அப்படி ஒருவேளை செய்தால், அதை இந்தியாவிற்கு அனுப்பி வையுங்கள். இதிலும் ஒரு செயல்திட்டம் இருக்க வேண்டும். எங்களுக்கு டிரவுசர் இல்லாமல் மேலங்கியை மட்டும் அனுப்பி வையுங்கள். டிரவுசரை எல்லாம் இந்தியாவுக்கு அனுப்பி வையுங்கள். யுத்தம் என்று வந்தால் உங்களுடைய டிரவுசரும் மேலங்கியும் நீங்கள் கொடுத்த ஆயுதங்களைக் கொண்டு போரிட்டுக் கொள்ளும்.

சார்லி சாப்ளின் தன்னுடைய அமெரிக்கப் பிரஜா உரிமையைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கேள்விப்பட்ட விஷயம் என்ன? அந்தக் கோமாளி என்ன செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறான்? நிச்சயமாக அவன் கம்யூனிஸத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுக்க உங்கள் நாட்டில் வாழ்ந்தவன், பேரும் புகழும் பெற்றவன், பணமும் சம்பாதித்தவன், அவன் செய்தது போல் செய்திருப்பானா? எவராலும் கவனிக்கப்படாமல் லண்டன் தெருக்களில் பிச்சை எடுத்துத் திரிந்ததை அவன் மறந்துவிட்டான் போலும்!

அவன் ஏன் ருஷ்யாவிற்குப் போகவில்லை? ஆனால் அங்குதான் கோமாளிகளுக்குப் பஞ்சமே இல்லையே. அவன் இங்கிலாந்துக்குத்தான் போக வேண்டும். அப்போதாவது அங்குள்ளவர்கள் அமெரிக்கர் போல் வாழ்க்கையில் வாய்விட்டுச் சிரிக்கக் கற்றுக் கொள்ளட்டும். தற்போதைய நிலையில் அவர்கள் எப்போதும் துயரம் நிறைந்தவர்களாகவும், தற்பெருமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய போலித்தன்மைகளில் சிலவற்றைக் கிழித்து எறிவதற்கு, இதுதான் சரியான சந்தர்ப்பம்.

ஹெட்டி லாமருக்கு காற்றில் ஒரு சுதந்திரமான முத்தம் கொடுத்து நான் இந்தக் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.

உங்கள் சகோதரனின் மகன்
சாதத் ஹசன் மண்ட்டோ.

குறிப்புகள்:

1. ஹஸிப் ஜுலந்தரி - சுதந்திரத்திற்கு முன் மிக முக்கியமான உருதுக் கவிஞர். ஷாநாமா -இ-இஸ்லாம் என்ற இஸ்லாமிய வரலாறு பற்றிய காவியப் படைப்பின் மூலம் பிரபலமானவர். ஷாநாமா என்ற காவியத்தைப் படைத்த பாரசீகக் கவிஞன் ஃபிர்தௌசிக்கு சமமாக ஒப்பிடக்கூடியவர். ஹசீஃப் பிரபலமாக ஃபிர்தௌசி -இ- இஸ்லாம் என்று அழைக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் தேசியகீதம் எழுதும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட அவரும் அதைச் செய்து முடித்தார். இருப்பினும் தன்னுடைய திறமைக்கேற்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற மனவருத்தம் அவருக்கு இருந்தது. அவரை மனிதனாகவோ, கவிஞனாகவோ மண்ட்டோ ஏற்றுக் கொள்ளவில்லை.

2. டெல்லியிலிருந்து வெளிவந்த 'ஷாமா', லாகூரில் இருந்து வெளிவந்த 'டைரக்டர்' இரண்டும் பிரபலமான உருதுப் பத்திரிகைகள். அச்சமயத்தில் இப்பத்திரிகைகள் குறுக்கெழுத்துப் போட்டிகளை நடத்தி நிறைய பணத்தைப் பரிசாகக் கொடுத்தது.

3. ஸெலின் காப்பி ஹவுஸ், பாக் டீ ஹவுஸ், செனே உணவகம் எல்லாம் லாகூரில் உள்ள மாலில் உள்ள பிரபலமான உணவகங்கள். எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் அங்கு ஒன்று கூடுவது வழக்கம். பாக் டீ ஹவுஸ் மட்டுமே பெரும் நஷ்டத்தில் இருந்தாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

4. மௌலானா ஜாஃபர் அலிகான்: கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். 'ஜமீன்தார்' என்ற செய்தித்தாளை நிறுவியவர். 1950களில் இறந்து போனார்.





சாமான்யரின் வெறி - பணி மலையாளபடம்

ஜோஜு ஜார்ஜ், பணி(வேலை) திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமாகிறார், சரியான வேகத்தில் நிகழ்வுகள் வெளிப்படும் ...