Latest News

யுத்தங்களுக்கிடையில்... (நாவல்)

Friday, July 30, 2010 , Posted by பிறவி at 5:55 AMவெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை 600 017 பக்கங்கள்: 160 விலை: ரூ. 60

கதைகளில் காலம், இடம் ஆகியன அழுத்தமாகப் பதிக்கப்பட்டாலும் அவற்றைக் கடந்த மனித வாழ்க்கைதான் முன்னுக்கு நிற்கிறது - அம்சன் குமார்

நாவல் என்பது வெறும் கதையல்ல. அது கதையையும் சொல்கிற அனேக ஊடகங்களில் ஒன்று. அவ்வூடகத்தின் சிறப்பு நாவலைப் படித்துவிட்டு நாவலைப் போன்றே ஒருவர் கதையைச் சொல்லிவிட முடியாது என்பதில் உள்ளது. அசோகமித்திரனின் நாவல்கள் இத்தகைய சிறப்பியல்பை நமக்கு உடனே ஞாபகப்படுத்துகிற வகையில் அமைந்துள்ளன.

அவரது சமீபத்தியதும் எட்டாம் நாவலுமான யுத்தங்களுக்கிடையில் பின்னிப்பிணைந்த உறவுக்காரர்களின் பார்வைகள், அனுபவங்கள் ஆகியனவற்றை முன்வைத்து நகர்கிறது. உள்ளடக்கம் உருவத்தைத் தீர்மானிக்கிறபடியால் நாவல் ஊடுபாவுகள் மிகுந்த ஹைபர்லிங் உத்தியைக் கொண்டுள்ளது. ஹைபர்லிங் என்பது உண்மையில் உத்தி அல்ல. அதுவும் ஒரு புனைகதை வகை, கதையாடல். ஹைபர்லிங் என்கிற சொல்லாக்கம் கடந்த ஐந்து வருடங்களாகத்தான் எல்லோரது கவனத்தையும் பெற்றுள்ளது. அது ஒரு இணைகோட்டில் சந்தித்து மீண்டும் தன்வழியே பயணித்துச் செல்கிற கதாபாத்திரங்கள், கதைப் போக்குகள் ஆகியவற்றின் கோவையைக் குறிக்கின்றது. சமீபத்திய லத்தின் அமெரிக்கப் படங்கள் பல இக்கதையாடலைக் கொண்டுள்ளன. அமரோஸ் பெர்ரொஸ் (தமிழில் ஆயுத எழுத்து) ஒரு உதாரணம். திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் இக்கதையாடல் புனைகதைகளுக்கு ஒன்றும் புதிதல்ல. ஜுலியா கொர்தசாரின் ஹாப்ஸ்காட்ச், ஜீன் பால் சார்த்தின் ரிப்ரீவ் ஆகியன இத்தகைய கதையாடலைக் கொண்டுள்ள நாவல்கள். 1967இல் தீபம் இதழில் தொடராக வெளிவந்த அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் இதைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது. கரைந்த நிழல்களைவிடவும் முழுமையாகவும் வெற்றிகரமாகவும் யுத்தங்களுக்கிடையில் நாவல் ஹைபர்லிங்கை பயன்படுத்தியுள்ளது. இதன் சில பகுதிகள் வார்த்தை இதழில் வெளிவந்தன.

பாரம்பரியமான கதைசொல்லல் இல்லாது போவதால் இவ்வகை நாவல்கள் வாசகனின் முயற்சியைக் கூடுதலாக வேண்டுகிறது. இவ்வகை நாவல் எழுதுபவர்கள் இந்தச் சிக்கலிலிருந்து வாசகன் வெளிவரவும் சில துப்புகள் தருவார்கள். அசோகமித்திரன் சில வர்ணனைகளைத் திரும்பத் திரும்பத் தருகிறார். ஆனால் கூறியது கூறல் என்றதாக இல்லாத வண்ணம் அவை ஒவ்வொரு முறையும் கதையின் வேறிடத்திற்கு வாசகனை அழைத்துச் செல்கின்றது. ஒரே மூச்சில் நாவலைப் படித்துவிடலாம். 155 பக்கங்கள். அசோகமித்திரனின் படைப்புகளை இருமுறை படிப்பதன் அவசியம் பற்றி ஏற்கனவே பேசப்பட்டிருக்கிறது. ஆனால் இது கட்டாயம் இருமுறை படித்தாக வேண்டிய நாவல். எனவே மறுமூச்சு எடுத்து இரண்டாம் முறையாக நாவலை உடனே படித்தால் புரிதல் எளிதாவதோடு மட்டுமின்றிப் படிப்பதன் சுவாரஸ்யமும் கூடும்.

நாவலின் கதை நிகழ்வுகளை ஒரு நேர்க்கோட்டில் வரிசைப்படுத்தினால் அது இவ்வாறு இருக்கலாம்.
இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தொடங்கி இரண்டாம் உலகப் போர் வரையிலான காலத்தில் நாவல் நிகழ்கிறது. மாயவரம் பள்ளிக்கூடம் ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு நடத்தும் வாத்தியார் தனது நாற்பதாம் வயதில் இறந்துபோகிறார். அவருக்கு மொத்தம் பதினாறு குழந்தைகள். அவர்களில் உயிரோடு இருப்பவர்கள் எட்டு பேர். ஐந்து ஆண்கள். ரங்கமணி, சாம்பசிவன், ராமேசன், பாலு, சங்கரன். மூன்று பெண்கள். முதல் இரண்டு பெண்களின் பெயர்கள் தரப்படவில்லை. கடைசிப் பெண் சீதா. மூத்தவளைத் தவிர மற்ற இருவரும் விதவைகள்.
முதல் உலகப் போர் முடிந்திருக்கிறது. வாத்தியாரின் முதல் மகன் ரங்கமணி சர்க்கரை நோய் வந்து ஒரு காலை இழந்த பிறகு இறந்து போகிறான். பி.ஏ. படித்த அவனது தம்பி சாம்பசிவன் தவிர அக்குடும்பத்தில் யாருமே சரியாகப் படிக்கவில்லை. சாம்பசிவத்திற்குப் போலீஸ் உத்தியோகம். அவன் மீது உத்தியோகத்தில் அவப்பெயர் ஏற்படவே கவரிமான் போல் உயிரைவிட்டு விடுகிறான். ராமேசனுக்கு நிஜாம் சமஸ்தானத்தில் ரயில்வேயில் வேலை கிடைக்கிறது. அவன் தனது தம்பிகளான பாலு, சங்கரன் ஆகியோரை அங்கு அழைத்துவந்து வேலை வாங்கித் தருகிறான். அவர்களது வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம். ராமேசனின் முதல் மகன் ஸ்ரீவத்ஸன் அகால மரணமடைகிறான். ராமேசனுக்கு மேலும் மூன்று பெண்கள். ஒரு பையன் சீனு.
பாலுவுக்கு ட்ராலியில் சென்று கைகாட்டிகளைப் பராமரிக்கும் அலைச்சல் மிகுந்த வேலை. அவனுக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகள். ஆறு ஆண்டுகள் கழித்து அவனுக்குப் பதவி உயர்வு கிடைத்து செகந்திராபாத்திலேயே பணி மாற்றலாகிறது. சங்கரனது குடும்ப வாழ்வில் சறுக்கல்கள். முதல் மனைவி பவானி இறந்துவிட அவன் அவளது அக்கா மகளான சுந்தரியை இரண்டாம் தாரமாக மணந்துகொள்கிறான். ஆனால் மூன்று சகோதரர்களும் கெட்டிக்காரர்கள். வந்த சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்தி அதில் தங்களுக்கேயான வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். சகோதரர்கள் விட்டுப்போன தந்தையின் சிராத்தத்தை ஒன்றுகூடி புது இடத்தில் செய்கிறார்கள். அவர்களுடைய மனைவிமார்களும் மொழி தெரியாவிட்டாலும் சமயோசிதத்துடன் நடந்துகொள்கிறார்கள். ராமேசனின் மனைவி லட்சுமிக்குத் தையல் மிஷனை ஓட்டவும் தெரியும்.

ஆண்கள் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்வதைப் போல் பெண்கள் இரண்டாம் தாரமாகவும் வாழ்க்கைப்படுகிறார்கள். சீதா, சீதாவின் அக்கா இருவரும் ஐம்பது வயதுக்காரர்களுக்கு இரண்டாம் தாரங்கள். சீதாவின் கணவன் ஒரு பணக்கார வக்கீல். முதல் தாரத்துப் பையன் சீதாவை அவன் அப்பா மணந்தது பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறியவன்தான். கடைசிவரை அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

நாவலில் சீதாவிற்குத்தான் அதிக இடம். அவள் தனது கணவனின் சொத்துகளைத் திறமையாக நிர்வகிக்கிறாள். பணக்கார விதவையான அவள் வீட்டுக்குச் சகோதரர்களும் வந்து தங்கிப் போகிறார்கள். தனக்குத் துணையாக இருக்கட்டும் என்று கருதி, தன் அண்ணன் ரங்கமணியின் மகன் ராமசுப்புவை அழைக்கிறாள். அவனுக்குப் போதிய சாமர்த்தியம் இல்லாவிட்டாலும் அவனை அரவணைத்து ஆளாக்குகிறாள். விசாலாட்சி என்கிற பெண்ணை மணமுடித்து வைக்கிறாள். பண்டாபீசில் வேலையும் வாங்கித் தருகிறாள். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில் ராம சுப்புவிற்குச் சீதாவின் சித்தப்பா மகன் வைதுவின் கூடா சகவாசம் ஏற்படுகிறது. அவனைப் பெரிதாக நம்பியிருந்த சீதா மனம் துவண்டு இறந்துபோகிறாள். சீதாவின் பணத்தை எடுத்துக்கொண்டு போய் வைதுவுடன் மெட்ராஸில் சுருட்டு வியாபாரம் செய்கிறேன் என்று எல்லாவற்றையும் இழந்துவிட்டு மீண்டும் பண்டாபீசில் ப்யூனாக வேலை பார்க்கத் தொடங்குகிறான் ராமசுப்பு.

சாம்பசிவனின் மூத்த மகன் ராகவன் தன் தாய் தந்தையரைப் போல் நல்ல சிவப்பு. அவனது தாய்மாமன் கல்யாணச் சந்தையில் விலை போகாத கறுப்பான தன் மகள் பார்வதியை மணமுடித்து வைத்துவிடுகிறார். ராகவன், தன்னுடைய அம்மா, தம்பி, பார்வதி எல்லோரையும் பம்பாய் அழைத்துச் சென்று வாழ்கிறான். மோட்டார் மெக்கானிக்கான அவன் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்குப் பம்பாய் அண்ணாவாகத் தெரியவருகிறான். ரங்கமணி மற்றும் அவனது உடன்பிறப்புகளின் தாய் எவரிடமும் நல்ல பெயர் வாங்கவில்லை. மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டே வாழ்ந்து உடம்புக்கு முடியாமல் ஆனால் கடைசிவரை தன் சொந்த வீட்டிலேயே வாழ்ந்து இறக்கிறாள்.

எஞ்சியுள்ள சகோதர சகோதரிகள் அவர்களுடைய குடும்பங்களுடன் ஒன்றுகூடும் மகிழ்வான வைபவமும் நடக்கிறது. போலகத்தில் வாழ்க்கைப்பட்ட மூத்த சகோதரியின் கணவர் ராஜப்பையரின் சஷ்டியப்த பூர்த்திக்கு எல்லோரும் கூடுகிறார்கள். இதை முன்னின்று நடத்துவது ராமசுப்பு என்று அறியும்போது அவர்களுக்கு வியப்பு கூடுகிறது. எவ்வளவோ இழப்புகளுக்கும் இன்னல்களுக்கும் நடுவே அனைவரின் ஒன்றுகூடல் நிகழ்கிறது. அதன் பின் இரண்டாம் உலகப் போரின் விளைவுகள் தமிழ்நாட்டையும் நிஜாமின் சமஸ்தானத்தையும் உலுக்குகின்றன.

அசோகமித்திரன் முன்னுரையில் கூறுவதைப் போல் இது பிழைத்திருத்தல் பற்றிய நாவல். பிழைப்பும் ஒரு யுத்தம். அதற்கிடையே மனிதர்கள் எத்தன்மை வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பதை நாவல் பரிசீலிக்கிறது. கல்வியை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு கீழ் மத்திய தர பிராமணக் குடும்பம். சிலரால் கல்வியைப் பெற முடியவில்லை. சிலரால் கற்க இயலவில்லை. நூறு ரூபாய்கூட இயலாத நிலையில் ராகவனால் பட்டப்படிப்பு படிக்க முடியாது மெக்கானிக்காக ஆகிவிடுகிறான். சாம்பசிவன் பி.ஏ. படித்து முடிப்பதற்குள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வீட்டில் அவர்கள் இலைபோடும்வரை காத்திருந்து உண்ண வேண்டியிருந்தது. மற்றவர்களை எப்படியாவது கரையேற்றிவிட வேண்டும் என்கிற ஒரு பொறுப்புணர்வு பிழைப்பு தேடுகிறபோதே கூட வருகிறது. ராமேசன் தன் தம்பிகளையெல்லாம் செகந்திராபாத்துக்கு அழைத்து ரயில்வேயில் வேலை வாங்கிக் கொடுத்துவிடுகிறான். மோழை என்று சொல்லப்பட்ட ரங்கமணி தனது தம்பிக்கு வேலையும் கல்யாணமும் நேர்வதற்குக் காரணமாகிறான். ராகவன் தன் தம்பியைப் பம்பாய்க்கு அழைத்துச் செல்லும்போதே அவனை எப்படி உற்சாகத்துடன் வைத்திருப்பது என்றும் யோசிக்கத் தொடங்குகிறான். சீதா ராமசுப்புவுக்கு வேலை ஏற்பாடு செய்து கல்யாணமும் செய்விக்கிறாள். தான் நினைத்தது சரியாக அமையவில்லை என்னும்போது ஜன்னியை வரவழைத்துத் தற்கொலை செய்துகொள்கிறாள். சங்கரன் தனது முதல் தாரத்து குழந்தைகளைத் தன்னோடு வைத்துப் பராமரிக்க முடியாதது கண்டு துயரத்தில் ஆழ்கிறான்.
வாத்தியாரின் மனைவிதான் அனைவராலும் விரும்பப்படாதவள். ஆனாலும் அவள் என்னதான் செய்வாள் என்று அவளுடைய நிலையில் தங்களை வைத்துப் பார்க்க அவளது குழந்தைகள் தவறுவது இல்லை. செகந்திராபாத் பால்காரனின் மனைவி ஜானகிபாயிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் சிற்றுண்டி நிலைய மானேஜர்வரை பல்வேறு மனிதர்கள் மற்றவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவிக்கொண்டே இருக்கிறார்கள். விதவையான சீதா தனது கணவனின் சொத்தை அவனது முதல் மனைவியின் மகனுக்கே திருப்பித் தந்துவிட வேண்டும் என்று நினைத்து வாழ்கிறாள். பிழைப்பைத் தேடும் அனைவரிடமும் ஒரு லட்சிய வேகமும் குடிகொண்டிருக்கிறது. வாடகை வீட்டிலிருக்கும் தேவதாசிகள் வீட்டுக்காரர்களிடம் எத்தனை கண்ணியமாக நடந்துகொள்கிறார்கள்! ராமேசனைப் போல் தனது குழந்தையையும் இழந்துவிட்ட வெள்ளைக்கார மேலதிகாரி அவனைக் கட்டிக்கொண்டு அழுவது பொதுவான மனிதப் பண்பின் அடையாளம்.

அசோகமித்திரனின் கதைகளில் காலம், இடம் ஆகியன அழுத்தமாகப் பதிக்கப்பட்டாலும் அவற்றைக் கடந்த மனித வாழ்க்கைதான் முன்னுக்கு நிற்கும். இதனாலேயே அவரது கதைகள் மூப்படைய மறுக்கின்றன. அவரது நகைச்சுவை தனித்தன்மை பெற்றது.

"ரயில் நிலையம் அருகே ஒரு தர்மச் சத்திரம். பாஷையே புரியவில்லை. ஆனால் ஒன்று புரிந்தது. அந்தச் சத்திரத்தில் ஆறு நாட்களுக்குமேல் தங்க விடமாட்டார்கள்".
"ராமசுப்பு பெண்ணைப் பார்த்தவன் வாய் மூடாதபடி இருந்தான். யாருக்கும் அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை. ஆனால் அவளை மணம் செய்விக்கவில்லை என்றால் பட்டினி கிடந்து சாவேன் என்று சொல்லி ஒருவேளை சாப்பிடாமலும் இருந்தான். இன்னொரு வேளைக்குக் காத்திருக்கலாம். அதற்குள் சம்மதம் என்று சொல்லியனுப்பிவிட்டார்கள்".

இருண்மையான நகைச்சுவைக்கு அவர் தன்னிகரில்லாதவர்.
"சிவனே வந்து கைலாசத்திற்குக் கூப்பிட்டாலும் அவருக்கு நடக்கக் கால் இல்லை".
சிக்கனம் மிகுந்த அவரது சொல்நடை எவ்விதத் தயாரிப்புமின்றி வாசகனுக்கு உடனேயே பதைபதைப்பினையும் தர வல்லது.
"ஆறு வயதுப் பையன் நெருப்புச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சவ ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கினான்".
"பதினேழு வயதில் தலை மொட்டை அடிக்கப்பட்டு உடுத்த நார்மடி. அவள் தலையை மழித்தவருக்குக்கூட அழுகை வந்திருக்கும்".
அவரது சற்றும் குறையாத வண்ணங்களுடன் வெளிவந்துள்ள நாவல் யுத்தங்களுக்கிடையில்.

(யுத்தங்களுக்கிடையில்... (நாவல்), ஆசிரியர்: அசோகமித்திரன், பக்: 160, விலை: ரூ. 60, முதல் பதிப்பு: பிப்ரவரி 2010, வெளியீடு: நர்மதா பதிப்பகம் 10, நானா தெரு, தி.நகர், சென்னை 600 017)

Currently have 0 comments: