Friday, July 30, 2010

சந்தியாவின் முத்தம் (கவிதைகள்)


நேரடியாகப் பார்க்க முடியாததைக் கண்ணாடியில் பிரதிபலித்துக்காட்டும் ஜாலத்தை நிகழ்த்துகிறது கவிதை - ஆனந்த்

காதல், வேதனை, உறவு, தனிமை, பிரிவு, பிரிவாற்றாமை, மௌனம், துயரம், நிராசை, ஸ்பரிசம், கனவுகள், கண்ணீர்த்துளிகள், வண்ணங்கள், இருள், ஒளி, இசை, இரவு, பகல், கடல், நிலவு, மழை, ரகசியங்கள், முத்தங்கள், சாவு, பறவை, பூனை, சொல், பேரன்பு, நித்யகல்யாணிப்பூ, இவையெல்லாம் கவிதாவின் கவிதையுலகில் உலவும், அதைக் கட்டமைக்கும் விஷயங்கள். கருத்துகள் மிகக் குறைவாகவும் உணர்ச்சிகளும் உள்ளுணர்வுகளும் பெருமளவுக்கும் தொடர்ந்து ஊடாடுவது கவிதாவின் கவிதைகளின் பலம்.
இயல்பாகவே பெண்மையின் பார்வைக் கோணமும் அவ்வாறான பார்வை சார்ந்த உணர்ச்சிகளும் உணர்வுகளும் பெருமளவுக்கு இருந்தாலும் இவரது கவிதைகள் பெண் கவிதை - ஆண்கவிதை என்ற பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டவை.
சுகத்துக்கும் சோகத்துக்கும் இடையிலான இடைவெளியைக் காதலின் வேதனை போக்கிவிடும் அதிசயத்தை இவரது கவிதைகள் கொண்டாடுகின்றன. மென்னுணர்வுகள் மனத்தில் புரியும் ஜாலத்தை எளிமையாகவும் நேரடியாகவும் அதேசமயம் அவற்றின் வீரியம் குன்றாமலும் சொல்லும் லாகவம் கவிதாவுக்குக் கைவந்திருக்கிறது. வேதனை மிகுந்த கணங்களில் எங்கிருந்தோ வந்து கசியும் அன்பு, அல்லது அவ்வாறான அன்பின் நினைவு, அந்த வேதனையை ஆற்றிவிடும் அற்புதம் "சந்தியாவின் முத்தம்" கவிதையில் மண்விலக்கி வெளிவரும் துளிர்போல் வெளிப்பட்டிருக்கிறது.

"ஆனால் சந்தியா தந்த முத்தம் அவள் வாழ்க்கையின் மீது மூழ்க வியலாத ஒரு கப்பலைப்போல மிதந்துகொண்டேயிருக்கிறது"
என்னும் வரிகள் மிக முக்கியமானவை. அது மூழ்கிவிடும் கப்பலாக இருந்தால் என்ன ஆகியிருக்கும்? வேறொரு சமயம் வேதனையில் ஆழ்ந்துபோகும் தருணத்தில் அது கிடைக்காமல் மனத்தின் ஆழத்தில் மூழ்கிப்போயிருக்கும். ஆனால் அந்த ஒரு முத்தம் அவளுக்கு எந்நேரமும் கிடைத்துக்கொண்டிருக்கும் ஒரு ஆறுதலாக இருந்துகொண்டே இருக்கிறது. "மிதந்துகொண்டே இருக்கும் கப்பல்" என்னும் பிம்பம் மறதி மறுத்த நினைவாக, மனத்தின் ஆழ் நிலைகளுக்குள் காணாமல்போய் விடாத ஒரு வாக்காக, எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஆறுதலின் சின்னமாக நிலைத்துவிட்டிருக்கிறது.

"அபூர்வமான ஒரு தனிமையில் உட்கார்ந்துகொண்டிருந்தோம்"
என்று தொடங்கும் கவிதை, "நான் அவனுக்கு சாவைப் பரிசளிக்க விரும்புகிறேன் கத்தியின் மீது தலையணை குவளைத் தேநீரில் ஒரு துளி விஷம் மலைமுகட்டின் மீதொரு காதல் தருணம் அல்லது ஒரு முத்தத்தின் மூலமாவது" என்று முடிகிறது.
சந்தியாவின் முத்தம் என்றென்றும் கிட்டும் ஒரு ஆறுதலாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த முத்தம் சாவுக்கு ஒரு சாதனமாக இருக்கிறது. முத்தம் என்பதன் பல பரிமாணங்கள், அதன் முழுப் பிரிகையும் இவரது கவிதைகளில் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன.

கவிதாவின் கவிதைகளில் கனவுகள் இன்னொரு முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன. பச்சைக் கனவுகள், வெள்ளைக் கனவுகள், கறுப்புக் கனவுகள், இளஞ் சிவப்புக் கனவுகள், பாதி உடைந்த கனவுகள், விபரீதக் கனவுகள்.

ஒரு பை நிறையக் கனவுகளை வைத்துக்கொண்டு எதிர்ப்படும் எல்லோருக்கும் பரிசளித்துக்கொண்டிருந்தாள் அவள் என்று தொடங்கி, அபூர்வமாய்த் தோன்றும் கறுப்புக் கனவொன்றை தவறுதலாய் ஒரு குழந்தையிடம் அவள் கொடுத்த போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது கனவுகள் நிறைந்த அவளது பை களவு போனது அவள் காணாமல் போனாள் ஊர் இருண்டது என்று முடிகிறது.

குழந்தையிடம் கறுப்புக் கனவைத் தவறுதலாகக் கொடுத்தால் கனவுகளின் பை ஏன் களவுபோக வேண்டும்? அவள் ஏன் காணாமல்போக வேண்டும்? அதுமட்டுமின்றி ஊர் ஏன் இருண்டுபோக வேண்டும்? கறுப்புக் கனவு குழந்தையை என்ன செய்தது? கனவுகளின் பை இல்லாவிட்டால் அவள் இருக்க முடியாதா? கனவுகளின் வெளிப்பாடா அவள்? ஊரும் கனவுகளின் வெளித்தோற்றம்தானே?? அப்படியானால் ஊரும் அவளும் குழந்தைக்குள்தான் அடக்கமா?

கவிதாவின் கவிதைகளின் உறவும் அது தொடர்பான உசாவலும் அடிநாதமாகத் தொடர்ந்து இழைந்துகொண்டே வருகின்றன. உறவின் மறுபக்கம் இருப்பது யார் என்னும் கேள்வி எழுகிறது. குறிப்பிட்ட ஒரு நபரா அல்லது நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு "நீ"யா? குறிப்பிட்ட ஒரு நபரென்றால் அந்த நபரின் குணாதிசயங்களுக்கேற்ப உறவின் வாசனையும் இயல்பும் மாற்றம் கொள்ளாதா? ஆனால் இந்தக் கவிதைகளில் எந்த ஒரு நானும் எந்த ஒரு நீயும் கொள்ளும் உறவின் அடிப்படை இலக்கணங்களும் உள்ளியக்கங்களும் ஆழமாகப் பரிசீலிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நானுக்கும் மற்ற ஒவ்வொருவரும் ஒரு நீதான். இங்கே பரிசீலிக்கப்படுவது காதல் என்ற பெயரில் பொதுவாக நடந்துவரும் விளையாட்டுகள் அல்ல. அனைத்து மனித உறவுகளும் காதல் என்னும் பின்னணியில் பரிசீலிக்கப்படுவதாகத் தோன்றுகிறது.

இவரது கவிதைகளில் உறவு எவ்வாறு வண்ணம் மாறுகிறது என்று பார்ப்போம். கூடவே இரவின் நிறமும் பகலின் நிறமும்.
"நீ வரும் வரை என் உறவுகளின் நிறம் கறுப்பாய்த்தான் இருந்தது எப்படி நிகழ்ந்ததென்று தெரியவில்லை தனிமையின் அரண்களை மீறிய தேவதூதனையொத்த உனது வருகை
எனது இரவுகளுக்கு வெளிர்நீல நிறத்தைத் தந்தது உனது வருகை
எனது இரவுகளுக்கு நீ தந்தாய் இரண்டு வெண்ணிறச் சிறகுகளை
நான் பறக்க யத்தனித்தபோது நீ விலகிச் சென்றாய்
ஒரு பைத்தியக்காரனின் கனவைப்போல எல்லாம் முடிந்தது
எனது முந்தைய இரவுகளைப் போலவே இப்போது
என் பகல்களும் கறுப்பாய்த் தானிருக்கின்றன"
தனியொரு உயிரின் வாழ்வனுபவத்தில் ஏற்படும் நிகழ்வுகள், உயிரனுபவத்தின் ஆழங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய சாத்தியத்தைத் தம்முள் கொண்டிருக்கின்றன. கவிதை மற்றும் பிற கலைகள் சார்ந்த முறைபாடுகள் இந்தச் சாத்தியத்தை உண்மையான அனுபவமாக ஆக்கக்கூடிய திறன் கொண்டவை. இந்த அனுபவம் இங்கே பல கவிதைகளில் வெளியாகியிருக்கிறது. தனிமை என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டு பார்ப்போம். கவிதாவின் கவிதை உசாவலில் தனிமை முக்கியமானதொரு விஷயம். இந்த வரிகளைப் பாருங்கள்.

ஏதோ ஒன்று எதற்காகவோ என்னை அடையும்போது நான் அதை தனிமை என்னும் சொல்லால் குறிப்பிட்டுச் சொல்லலாம்தான் ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது அது தனிமை அல்ல அது நான்தான்.

பொதுவாகத் தனிமை என்பதைத் தன்னை ஆட்கொள்ளும் ஒரு உணர்வனுபவமாகத்தான் கருதுகிறோம். ஆனால் பிறர் யாருமற்ற நிலையில் தான் மட்டும் இருக்கும்போது தன்னையேதான் தனிமை என்று பெயரிட்டு அழைத்துக்கொள்கிறோம் என்பது உண்மைதானோ "நான்" என்னும் உள்ளுணர்வுதானே புறவயப்பட்டு விரிந்து நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. பெருநகரத்தின் ஆயிரங்கால் மண்டபத்தின்...எனத் தொடங்கும் கவிதை மிகப் பெரியதொரு காலத் திரையின் பின்னணியில் வரையப்பட்டிருக்கும் ஒரு சித்திரமாக விரிகிறது. மனிதப் பிரக்ஞையின் ஆழ்தளப் பிம்பங்கள் தனிமனத்தின் வழியாக வெளிப்பட நேர்ந்தாலும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவை. அங்கே காலம் காலமாக உறைந்து நிற்கும் அந்த பிம்பங்கள் ஒரு பொருளில் உயிருள்ளவை. காலத்துக்கு அப்பாற்பட்டவை. எந்த ஒரு நேரத்திலும் ஒரு பிம்பம் உயிரோட்டம் கொண்டு மேல் மனத்தை - மனிதனை - தீண்ட முடியும். தீண்டிவிட்டுப் போய் மறுபடி உறைந்து நிற்கக்கூடும். அவ்வாறான தீண்டுதல் நிகழும்போது மேல்மனம் மிகவும் வலிமையான பாதிப்புக்கு உள்ளாக முடியும். நிரந்தரமான மாற்றங்களோ அல்லது நீண்ட கால பாதிப்புகளோ நேர முடியும். இவ்வாறான ஒரு முறைபாடு பற்றி இந்தக் கவிதை பேசுகிறது.

இந்தத் தொகுப்பில் சில நீண்ட கவிதைகள் இருக்கின்றன. அவை கவிதாவின் அகவுலகம் எந்த அளவுக்குச் செறிவு நிறைந்ததாக இருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக இருக்கின்றன.
கவிதாவின் உலகம் எத்தன்மையது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டும் கவிதை இதோ:
எல்லாத் திசைகளிலும் பறந்து பார்க்கிறது இந்த சிறு பறவை வானத்தின் விரிவு பார்த்து வதைபடும் அதன் சிறகுகள்
ஜன்னல் வழி துண்டு வானம் கொடுத்து அதனிடம் கேட்கிறாய் போதுமா என்று
கடல் கொள்ளும் பெருந்தாகம் தவிர சில மழைத்துளிகள் எப்படிப் போதும்?

நேரடியாகப் பார்க்க முடியாததைக் கண்ணாடியில் பிரதிபலித்துக்காட்டும் ஜாலத்தை நிகழ்த்துகிறது கவிதை. இவர் கவிதைகள் இம்மாதிரியான கண்ணாடியாகத் திகழ்கின்றன. உயிரோட்டமுள்ள பல சித்திரங்களைக் காட்டுகின்றன. இந்தக் கவிதைகளின் பின்னால் தெரியும் அகன்றதொரு சித்திரத்தைப் பார்க்கும்போது, கவிதாவிடமிருந்து மேலும் நல்ல கவிதைகள் தொடர்ந்து வருவது நிச்சயமான ஒன்றாகத் தோன்றுகிறது.

(சந்தியாவின் முத்தம் (கவிதைகள்), ஆசிரியர்: கவிதா, பக்: 64, விலை: ரூ. 45, முதற்பதிப்பு: ஏப்ரல் 2008. வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001)

No comments:

சாமான்யரின் வெறி - பணி மலையாளபடம்

ஜோஜு ஜார்ஜ், பணி(வேலை) திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமாகிறார், சரியான வேகத்தில் நிகழ்வுகள் வெளிப்படும் ...