கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Saturday, February 28, 2009
இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு
[ இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் சண்டைகளால் வீடிழந்து, நாடிழந்து, உயிரிழந்து, உற்றார்-உறவை இழந்து நிற்கும் மக்களில், பிறந்தது முதல் சண்டையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறையும் உருவாகிவிட்ட சூழலில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிறந்த துன்பங்களுக்கு காரணமான இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த நமது விருப்பு வெறுப்பற்ற ஆய்வின் முதல் பகுதி இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. இதில் தமிழர் பிரச்னையை முன் வைத்து எல்.டி.டி.ஈ அமைப்பினை ஆதரித்துக் கொண்டிருக்கும் அமைப்புகளின் கருத்துக்கள் என நாம் முன் வைத்துள்ளவை 'ஈழ விடுதலை - நமது கடமை என்ன?' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்]
இலங்கைத் தமிழர் பிரச்னை இப்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கைத் தமிழ் போராளிகள் குழுவான எல்.டி.டி.ஈ. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முக்கியப் பகுதிகள் பலவற்றை இழந்துள்ளது. கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றுடன் வடக்குப் பகுதியையும் இலங்கையின் பிற பகுதியையும் இணைக்கும் கண்டி - யாழ்ப்பாணம் சாலை முல்லைத்தீவு நகர் ஆகியவை எல்.டி.டி.ஈ. கட்டுப்பாட்டில் இருந்து சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளன.
அதற்கு ஆயுதம் மற்றும் நிதி வந்து கொண்டிருந்த வழிகள் அடைபட்டுப் போயுள்ளன. உலகில் எந்தவொரு நாடும் எல்.டி.டி.ஈ. அமைப்பு அறிவித்த தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காததோடு இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் அந்த அமைப்பின் மீது தடையும் விதித்துள்ளன. இந்நிலையில் மூச்சுவிடும் இடைவெளி கூட அதற்கு கிடைக்காவண்ணம் இராணுவத்தின் இடைவிடாத தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. போர்ச்சூழலில் சிக்கிக் கொண்டுள்ள இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வழக்கம்போல் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இதனை ஒட்டி பல அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதாவது நாடாளுமன்றவாத அரசியலில் தாங்கள் ஆதாயம் பெறவும் அல்லது தங்களுக்கு எதிராக உள்ள கட்சிகள் இவ்விசயத்தை கையில் எடுத்து அரசியல் ஆதாயம் பெற்று விடக்கூடாது என்பதற்காகவும் பெரிய அரசியல் அமைப்புகள் இதனைக் கையில் எடுத்துள்ளன. எத்தனை உக்கிரமாகவும் உரத்தகுரலிலும் அவை தங்களது கருத்துக்களை முன் வைத்தாலும் அவற்றின் நோக்கம் வெளிப்படையானது. அதாவது அரசியல் ஆதாயமடைய அவர்களின் கைகளில் உள்ள பல பிரச்னைகளில் இலங்கைத் தமிழர் பிரச்னையும் ஒன்று என்பதே அது.
அப்பாவி இலங்கைத் தமிழர்கள் இச்சண்டையினால் உயிரிழக்கும் போக்கிற்கு எதிரான மனநிலையும் இதனால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள இலங்கைத் தமிழ்மக்கள் மீதான அனுதாபமும் தமிழக மக்கள் மத்தியில் இயல்பாகவே அதிகம் உள்ளது. மேலே கூறிய பெரிய அரசியல் கட்சிகளின் பெரும்பான்மையான செயல்பாடுகள் இவற்றைக் கருத்தில் கொண்டதாகவே உள்ளது.
அக்கட்சிகளைத் தவிர வேறுபல அதிதீவிர இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படும் கட்சிகளும் இப்பிரச்னையை கையில் எடுத்துள்ளன. இவற்றின் போக்கு பெரிய அரசியல் கட்சிகள் செய்வது போல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வது அல்ல. இவை உயிரிழக்கும், பாதிப்பிற்கு ஆளாகும் சாதாரண இலங்கை தமிழ் மக்கள் மீது மட்டுமின்றி அவர்களின் நலன் காக்கும் ஒரே அமைப்பு எல்.டி.டி.ஈ.யே என்ற கருத்துடனும் செயல்படுகின்றன.
ஆனால் இராஜீவ்காந்தியின் கொலைக்குப் பின் சாதாரண தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எல்.டி.டி.ஈ. அமைப்பின் மீது இருந்த அபிமானம் பெருமளவு குறைந்து விட்டது. இந்நிலையில் இந்த இடதுசாரி அமைப்புகளின் கருத்து மக்களிடையே வெளிப்படையான பெரிய ஆதரவு எதையும் பெறவில்லை என்பதே உண்மை. அதனால் இப்பிரச்னையை ஒட்டி இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பெரிய அரசியல் கட்சிகள் எழுப்பும் பெரிய பெரிய முழக்கங்களுக்கு ஒத்து ஊதுவது போன்றே உள்ளது. தனிப்பட்ட முறையில் பெரிய அளவிலான முன்முயற்சிகள் எதுவும் இவர்களால் எடுக்கப்படவில்லை.
இக்கட்சிகள் உண்மையிலேயே இலங்கைத் தமிழர் பிரச்னையின்பால் பெரும் அக்கறை கொண்டவையாக இருந்தால், அவற்றின் மிதமிஞ்சிய தமிழ் உணர்வும் எல்.டி.டி.ஈ. அமைப்பின் மீதான ஆதரவை வெளிப்படுத்துவதும் மட்டுமே போதாது. இந்த அமைப்புகள் இன்று கண்களை உறுத்தும் பல நிகழ்வுகளை ஊன்றிப்பார்த்து அவற்றிற்கு விடை காண முயல வேண்டும். அதாவது 1983ம் ஆண்டை ஒட்டிய காலங்களில் தமிழகத்தில் மாபெரும் மக்கள் ஆதரவினை பெற்றிருந்த எல்.டி.டி.ஈ. அமைப்பு தற்போது அதனைப் பெருமளவு இழந்து நிற்கக் காரணம் என்ன?
தமிழகத்தில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்திலும் கூட இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான பெரிய மக்கள் இயக்கங்களோ எழுச்சியோ ஏற்படவில்லையே, அதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு விடை காண முயலவேண்டும். அத்துடன் உலகமே பிரமிக்கும் வண்ணம் ஒரு அரசின் நிலையான இராணுவத்தை எதிர்த்து கடுமையான போரினை நடத்தி வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றுவந்த எல்.டி.டி.ஈ. அமைப்பு இன்று அடைந்துள்ள பின்னடைவுகளுக்கு காரணம் என்ன? ஏராளமான உயிர்த்தியாகம், சாகசம் ஆகியவற்றைப் புரிந்த அவ்வமைப்பு இன்று உலக அரங்கிலும் உள்நாட்டிலும் தனிமைப்பட்டு நிற்பது ஏன்? என்ற கேள்விகளுக்கும் விடை காண முயலவேண்டும்.
ஆனால் இந்திய இடதுசாரி அரசியல் கட்சிகளைப் பீடித்துள்ள ஒரு நோய் இவர்களையும் பீடித்துள்ளது. அதனால்தான் இக்கேள்விகளுக்கு விடைகாணும் விதத்திலான கருத்து எதையும் கொண்டவர்களாக இவர்கள் இல்லை.
சாதனையை காட்டி அரசியல் நடத்துவது - சோதனை வருகையில் காணாமல் போய்விடுவது
அதாவது இந்திய இடதுசாரிக் கட்சிகளிடையே ஒரு போக்கு காலம்காலமாக இருந்து வருகிறது. இங்கு கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்ட கட்சிகள் கம்யூனிசம், சோசலிசம் இவற்றின் மேன்மை குறித்தும் சோசலிச அமைப்பு வந்தே தீரும் என்ற வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி குறித்தும் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளாது சோசலிச நாடுகளான சோவியத்யூனியன், மக்கள் சீனம் இவற்றின் பிரமிக்கத்தகுந்த சாதனைகளை மட்டும் வெளிச்சம்போட்டுக் காட்டித் தங்களது செல்வாக்கை ஒரு எளிதான, மலிவான விதத்தில் மக்களிடையே பல காலம் வளர்த்து வந்தன.
அதனால் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அமைப்புகள் தகர்ந்து போன சூழ்நிலையில் இவர்களும் அதிர்ந்துபோய் ஏன் அந்த அமைப்புகள் தகர்ந்து போயின என்பதற்கான உரிய விளக்கத்தைகூட முன் வைக்காது அயர்ந்துபோய் நின்றன. அத்தகைய கையாலாகாத நிலை எடுத்ததன் மூலம் சோசலிசக் கண்ணோட்டம் காலாவதியாகிவிட்டது என்ற முதலாளித்துவ பொய்பிரச்சாரத்திற்கும் இவர்களை அறியாமலேயே இவர்கள் வலு சேர்த்தனர்.
அதைப்போல் கடந்த 10-ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்பு விடுதலைப் புலிகள் அடைந்த வெற்றிகளை முன் வைத்தே இங்கு செயல்பட்டு வந்த விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள், தற்போது விடுதலைப்புலிகளுக்கு பின்னடைவு நேர்ந்துள்ள நிலையில் மக்களிடையே பின்னடைவின் தன்மை எத்தகையது? அது எதனால் ஏற்பட்டுள்ளது? என்பது போன்ற விளக்கங்களை முன் வைக்க முடியாமல், உணர்ச்சியூட்டும் விசயங்களையே மீண்டும் மீண்டும் முன் வைக்கின்றன. அவ்வாறு அவர்கள் முன் வைக்கும் சில கருத்துக்களும் விஞ்ஞானப்பூர்வ அடிப்படை எதையும் கொண்டிராமல் முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானவையாகவும் பாதி உண்மைகளாகவும் உள்ளன.
ஒரு உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கத்தின் இதழ் என்ற ரீதியில் நாம் அவ்வாறு இருக்க முடியாது. எனவே இந்த பிரச்னை குறித்த நமது பகுப்பாய்வை நாம் மக்களின் முன் வைக்க பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
தேசிய இனப் பிரச்னையாகவே இருந்ததா? அல்லது ஆக்கப்பட்டதா?
அந்த வகையில் இலங்கையில் நிலவிவரும் பிரச்னை உண்மையிலேயே முழுக்கமுழுக்க ஒரு தேசிய இன பிரச்னையா? என்பதையும் அல்லது வேறு காரணங்களுக்காக அந்நாட்டின் ஆளும் வர்க்கமும் அதன் ஆட்சியாளர்களும் கடைபிடித்த பாரபட்சக் கொள்கைகளின் விளைவாகவும் அவற்றிற்கு எதிராக எதிர்வினையாற்றிய இலங்கைத் தமிழ் அமைப்புகளின் நடவடிக்கைகளாலும் தேசிய இனப்பிரச்னையாக ஆக்கப்பட்டதா? என்பதில் தொடங்கி இத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரச்னைகளையும் ஆய்வு செய்ய உள்ளோம். இந்த இதழில் முதற்கண் இலங்கைத் தமிழர் பிரச்னை ஆரம்பம் முதற்கொண்டே ஒரு தேசிய இனப் பிரச்னையா? இல்லையா என்பதையும் அடுத்து வரும் இதழ்களில் இதோடு தொடர்புடைய வேறு பிரச்னைகளையும் பார்போம்.
இங்கு தமிழர் பிரச்னை என்ற பதாகையை முன் வைத்து விடுதலை புலிகளை ஆதரித்துக் கொண்டிருக்கும் அமைப்புகள் எந்த வகையான உரிய பகுப்பாய்வும் இன்றி இப்பிரச்னை சிங்கள பேரினவாதத்திற்கும் தமிழ் சிறுபான்மை இனத்திற்குமான பிரச்னை என்ற கருத்தினை தங்களுக்கே உரித்தான காரணங்களுக்காக முன் வைத்து முழுக்க முழுக்க ஒரு இனப்பிரச்னையாக இதனை காட்டுவதற்கு முயற்சி செய்கின்றன.
சிங்கள இனம், தமிழ் இனம் முழுவதையும் அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டதா?
அதாவது அவை இது எத்தனை கொடுமையான இனப்பிரச்னை என காட்ட முயல்கின்றன என்றால் சிங்களர்கள் தமிழ் இனம் முழுவதையும் அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்று கூறும் அளவிற்கு சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒருவருக்கொருவர் நேர் விரோதத் தன்மை கொண்டவர்கள்: இவர்களில் ஒரு பகுதியினரின் அழிவில் தான் மற்றொரு பகுதியினரின் வாழ்க்கை உள்ளது என்று மக்களை நம்ப வைக்கும் அளவிற்கு முயல்கின்றன. ஆனால் இது இப்படித்தானா? என்று பல வரலாற்று நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்ப்பது நமக்கு மிகவும் அவசியமாகும்.
பிரிட்ஷாரை எதிர்த்த போராட்டத்தில் ஒன்றிணைந்தது எவ்வாறு?
இவர்களின் இத்தகைய இலங்கையின் இனப்பிரச்னை குறித்த பார்வை, இந்தியாவின் தேசிய இனப்பிரச்னைகள் குறித்தும் இவர்கள் கொண்டுள்ள தவறான பார்வையினைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அதாவது முதலில் இப்படி ஓரினத்துடன் மற்றொரு இனம் ஒத்து வாழவே முடியாத இனப்பிரச்னை ஒன்று இலங்கையின் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே இருந்திருக்குமானால் அவ்விரு இனங்களும் ஒன்றுசேர்ந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நாட்டைவிட்டு வெளியேற்ற போராடியிருக்க முடியுமா? இது நமக்கு எழும் முதல் கேள்வியாகும்.
இதற்குப் பதில் கூறும் வகையில் எவ்வாறு தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே பழக்க வழக்கங்கள், மதம் பண்பாடு இவை சார்ந்த வேறுபாடுகளும் ஒருவரை ஒருவர் பரிகசித்துக் கொள்ளும் போக்கும் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது என்பது போன்ற சான்றுகளை முன் வைப்பது முறையாகாது. ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற முரண்பாடுகள் நிலவவே செய்யும்.
நேர் விரோத முரண்பாடா, இல்லையா?
நாம் பார்க்க வேண்டியது அத்தேசிய இனங்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகள் ஒன்றின் அழிவில்தான் மற்றொன்றின் வாழ்க்கை இருக்கிறது என்ற அடிப்படையிலான நேர்விரோத முரண்பாடுகளா? அல்லது நேர்விரோதமற்ற சமரச முறையிலேயே தீர்வைக் கொண்டு வர முடியும் என்று கூறத்தக்க முரண்பாடுகளா? என்பவையே.
நாம் முதலில் கூறிய நேர் விரோத முரண்பாடு தமிழ் - சிங்கள தேசிய இனங்களுக்கிடையே நிலவியிருக்குமானால் நிச்சயமாக இவ்விரண்டு இனங்களும் ஒன்றிணைந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியிருப்பது சாத்தியமல்ல.
குதிரைக்குப் பதிலாக சிங்களத் தலைவர்கள் இழுத்த தேர்
விடுதலைப் போராட்டக் காலத்தில் நிலவிய இன ஒற்றுமைக்கு சான்றாக அக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும். அதாவது விடுதலைப் போராட்டத்தை ஒட்டி 1915-ல் தடைக்காவலில் வைக்கப்பட்டிருந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த தலைவர் டி.எஸ். சேனநாயகாவை விடுவிப்பதற்காக பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு கடல்வழியாக இங்கிலாந்து சென்று திறமையாக வாதிட்டு நாடு திரும்பிய தமிழர் தலைவரும் வழக்கறிஞருமான திரு.பொன்னம்பலம் ராமநாதனை ஊர்வலமாக சிறப்புடன் அழைத்துச் செல்ல ரதம் ஒன்றை சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்தனராம்.
ஆனால் அவர் வந்தவுடன் ரதத்தின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு விட்டு அவருக்கு தாங்கள் பட்டிருந்த நன்றிக்கடனை வெளிப்படுத்தும் முகமாக திரு.எ.ஈ. குணசிங்கா உள்பட வந்திருந்த சிங்கள தலைவர்கள் அந்த ரதத்தை தாங்களே இழுத்து வந்தனராம். இப்படிப்பட்ட வகுப்பு ஒற்றுமையும் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையில் விடுதலைப் போராட்ட காலத்தில் நிலவியுள்ளது. இந்நிகழ்வு இவ்விரு இனங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாழ முடியாதவாறு நேர் விரோத முரண்பாடுகளுடன் எப்போதுமே இருந்து வந்துள்ளவை என்பதையா காட்டுகிறது?
நிர்வாக வசதிக்காக ஏகாதிபத்தியம் கட்டாயப்படுத்தி இணைத்ததா?
இது ஆரம்ப முதற்கொண்டே தேசிய இனப்பிரச்னையே என்ற கருத்தை முன் வைக்கக் கூடியவர்கள் மற்றுமொரு வாதத்தையும் வலியுறுத்திக் கூறுகிறார்கள். அதாவது ஏகாதிபத்திய ஆட்சி பல இடங்களில் தனது நிர்வாக வசதிக்காக பல தேசிய இனங்கள் வாழ்ந்த பகுதிகளை கட்டாயப்படுத்தி இராணுவ வலிமையின் மூலம் ஒருங்கிணைத்து வைத்திருந்தனர்; அவ்வாறு ஒருங்கிணைத்து வைக்கப்பட்டதே இலங்கையின் தமிழ்-சிங்கள தேசிய இனங்கள் வாழ்ந்த பகுதிகளாகும் என்பது அந்த வாதம்.
அதாவது வற்புறுத்தல் தவிர வேறு எந்த அம்சமும் அவைகளின் ஒருங்கிணைப்பை கொண்டு வரவில்லை என்பது அவர்கள் முன் வைக்கும் கருத்து. நிர்வாக வசதிக்காக இலங்கையின் தமிழர் வாழும் பகுதியையும் சிங்களர் பகுதியையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இணைத்திருந்தாலும், அதனால் மட்டுமே சிங்கள, தமிழ் இனமக்கள் கட்டாயத்தால் ஒன்று சேர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பது உண்மையல்ல.
எதிரியின் பலம் இணைந்து போராட வைத்தது
இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சியின் கீழ் இருந்த போதும் அந்நாடுகளில் இருந்த பல்வேறு தேசிய இனங்களும் தங்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தனித்தனியே போராடி தனித்தனி தேசிய அரசுகளாக உருவாக ஏற்ற சூழ்நிலை இல்லை. ஏனெனில் அத்தேசிய இனங்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்த ஏகாதிபத்தியம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்ததால் அதனைத் தங்கள் தங்களது தனித்த போராட்டங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை அத்தேசிய இனங்களுக்கு ஏற்படவில்லை.
விடுதலைப் போராட்டம் விளைவித்த ஒற்றுமை
எனவே அவை ஒன்று திரண்டு, ஒருங்கிணைந்து பொது எதிரியை எதிர்த்துப் போராடின. அப்போராட்டத்தின் விளைவாக பல தேசிய இன மக்களிடையே நல்லுறவும் ஏற்பட்டது. இலங்கையைப் பொருத்தவரை தமிழர் வாழும் பகுதிகளிலிருந்து தங்கள் படிப்பிற்கேற்ற அரசு வேலைகள் கிடைக்கும் போது சிங்களர் பகுதி என இவர்கள் கூறும் கொழும்பு போன்ற நகரங்களிலும் தமிழ் மக்கள் சென்று வாழ்ந்தனர். இதன் விளைவாக தேசிய இனங்களின் ஒன்று கலத்தலும் நிகழ்ந்தது. இது ஏகாதிபத்திய நிர்வாக வசதிக்காக அது கட்டாயப்படுத்தி ஒருங்கிணைத்ததனால் மட்டும் ஏற்பட்டதல்ல.
இந்திய அனுபவம்
இலங்கையைப் போன்றே இந்தியாவும் பல தேசிய இனங்களை கொண்ட நாடு. ஏறக்குறைய மிகப் பெரும்பாலான அம்சங்களில் இரண்டு நாடுகளின் சூழ்நிலையும் ஒன்றே. அப்படியிருக்கையில் இங்கும் இலங்கையைப் போன்றே ஏகாதிபத்திய ஆட்சியை நிலைநிறுத்த பிரிட்டிஷ் அரசு அதன் மிகவும் மேலான இராணுவ வலிமையைப் பயன்படுத்தியது. இருந்தாலும் பல சமஸ்தானங்களை தன்னுடைய நேரடி ஆட்சி அதிகாரத்திற்குள் அது கொண்டுவரவில்லை.
எடுத்துக்காட்டாக திருவாங்கூர் சமஸ்தானம், ஹைதராபாத் நிஜாமின் சமஸ்தானம் போன்றவை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேயில்லை. நிர்வாக வசதிக்காக ஏகாதிபத்தியங்கள் ஒரு பூகோள பகுதிக்குள் இருக்கும் அனைத்து பிரிவினரையும் கட்டாயப்படுத்தி ஒன்று சேர்ப்பார்கள் என்றால் இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதை ஏன் செய்யவில்லை?
சமஸ்தான மக்களின் விடுதலை வேட்கை
அத்துடன் விடுதலை போராட்ட காலத்திலேயே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸின் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை அந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேரடி ஆட்சியில் இல்லாத சமஸ்தானங்களில் இருந்த மக்களும் ஆதரித்தனர். அங்கும் காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஏகாதிபத்தியத்தின் வற்புறுத்தல்தான் தேசிய இனங்களின் இணைப்பிற்கு காரணம் என்றால் சமஸ்தானங்களின் சாதாரண மக்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து மானசீகமாக அதில் ஈடுபட்டது எவ்வாறு?
லாப - நஷ்டக் கணக்கே தீர்மானித்தது
உண்மையில் ஏகாதிபத்தியங்கள் என்பது, வளர்ச்சியடைந்த முதலாளித்துவங்களே. அந்த அடிப்படையில் ஒரு பகுதியை ஒருங்கிணைத்தால் நமக்கு லாபமா அல்லது ஒருங்கிணைக்காவிட்டால் லாபமா என்பது போன்ற கேள்விகளே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எப்பகுதிகளை ஒருங்கிணைப்பது எதனை ஒருங்கிணைக்காமல் விடுவது என்பதைத் தீர்மானித்ததேயன்றி வேறு கட்டாயங்கள் அல்ல. எனவே தான் பல பகுதிகளை இணைத்த அவர்கள் சில பகுதிகளை வற்புறுத்தி இணைக்கவுமில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு இனவாதமே காரணம் என்போர் தங்களின் சித்தாந்த வலிமையை காட்டுவதற்காக தேசம் குறித்த ஸ்டாலினின் மிகச்சரியான கண்ணோட்டமான ஒரு தேசத்தின் நான்கு முக்கிய கூறுகளான, பொதுவான மொழி, பொதுவான பண்பாடு, ஒற்றைப் பொருளாதார அமைப்பு, ஒரு வரலாற்று ரீதியான எல்லைப்பரப்பு ஆகியவற்றை முன்வைக்கின்றன.
தேசிய வாதத்தின் ஊற்றுக்கண் தேசியச் சந்தையே
ஆனால் அவர்கள் இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தேசம் என்ற கண்ணோட்டம் தோன்றுவதற்கே ஊற்றுக்கண்ணாக இருக்கக்கூடிய வேறொரு விசயத்தை முன்வைக்கவில்லை.
அதாவது ஆங்காங்கே வட்டார அளவுகளில் நிலவிய பகுதி அளவிலான சந்தை, ஒரு மொழி பேசும் பகுதி முழுவதுடனோ அல்லது அதையும் தாண்டியோ பரவுவதும் தேசிய இனக்கண்ணோட்டம் உருவாவதற்கு மிகமுக்கியக் காரணம் என்பதை முன்வைக்கவில்லை அல்லது மூடிமறைக்கிறார்கள். உண்மையில் தேசிய வாதம் என்ற பாடத்தை முதலாளித்துவத்திற்கு கற்றுக்கொடுத்த பள்ளியே ஒன்றிணைந்த தேசிய சந்தைதான். இதை இலாவகமாக இவர்கள் கூறத் தவறுகிறார்கள் அல்லது மூடிமறைக்கிறார்கள்.
இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி இப்பகுதிகளைக் கைப்பற்றி ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒரு முன்னேறிய பொருள் உற்பத்தி முறையை அதாவது முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையை அறிமுகம் செய்தது. அதன் விளைவாக தமிழ்ப் பகுதியும், சிங்களப் பகுதியும் ஒரு ஒன்றுபட்ட சந்தையாகப் படிப்படியாக மாறியது. இதன் விளைவாக சிங்களப் பகுதிகளில் தமிழ் வியாபாரிகளும், தமிழர் பகுதிகளில் சிங்கள வியாபாரிகளும் வியாபாரங்களில் ஈடுபட முடிந்தது.
பிரிட்டிஷ் அரசின் நிர்வாகமும் இதுபோல் தமிழர் பகுதி சிங்களர் பகுதி என்ற பாரபட்சமில்லாது ஒன்றிணைந்த இலங்கை முழுவதிலும் தமிழ், சிங்கள ஊழியர்களைப் பணியமர்த்தியது. பெரிய அளவில் இலங்கையைப் பொருத்தவரை பெரும் தொழிற்சாலைகள் இந்தியாவைப் போல் வளர வாய்ப்பிருக்கவில்லை என்றாலும் தொழிற்சாலைகள் வளர்ந்த அளவிற்கு அவற்றிலும் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஓரளவு ஒருங்கிணைந்து வேலை செய்யும் சூழல் உருவானது. இதன் விளைவாக முதலீடுகள், வேலைத் திறன் இவற்றிற்கான சந்தை இலங்கை முழுவதும் ஒன்றாக மாறியது.
அச்சந்தை வாய்ப்பும் மக்களுக்கிடையே நாம் அனைவரும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை உணர்வு பூர்வமாகவும் ஏற்படுத்தியிருந்தது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்னை ஆரம்பம் முதற்கொண்டு தேசிய இனப்பிரச்னையே என்ற கருத்தை இங்கு முன்வைப்பவர்கள் கூற வருவது போல் சிங்கள, தமிழ் இனமக்கள் எப்போதுமே எண்ணெய்யும், தண்ணீருமாகவே இருந்தார்கள் என்பது உண்மையல்ல.
சாதாரண சிங்கள மக்கள் தமிழரை எதிரிகளாக பார்க்கிறார்களா?
சிங்கள பேரினவாதம்தான் இன்று இலங்கையில் நிலவும் தமிழர்கள் பிரச்னைக்கு மிகமுக்கியக் காரணம் என்று கூறும் வெறியில் இவர்கள் சாதாரண சிங்கள மக்களையே அப்பட்டமாக குறைகூறி யதார்த்த நிலையைத் தவறாக சித்தரிக்கிறார்கள். "சிங்கள மக்கள் தங்களின் உண்மையான எதிரிகளை மறந்துவிட்டு தமிழர்கள் மீது வெறுப்புகொள்ளத் துவங்கினர்" என்ற உண்மைக்குப் புறம்பான கருத்தை முன்வைக்கிறார்கள்.
1983 கலவரத்திலும் சரி அதற்கு முன்பும் சரி கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பலருக்கு பல சிங்கள மக்கள் பாதுகாப்பும் ஆதரவும் தந்தனர் என்பதே அனைவரும் அறிந்த உண்மை. யதார்த்தத்தில் பெரும்பாலும் இதுபோன்ற இனக் கலவரங்களில் சாதாரண மக்கள் ஈடுபடுவது இல்லை. தங்களுக்கு அண்டை அயலாராக இருக்கும் வேறொரு இனத்தையோ மதத்தையோ சேர்ந்த மக்களை கலவரம் ஏற்பட்டவுடன் உடனடியாக இன அடிப்படையில் தங்களை மாற்றிக் கொண்டு வெறியுடன் தாக்குவது என்பது யதார்த்தத்தில் நடக்க இயலாத ஒன்றாகும்.
காலிகளும் கேடிகளுமே கலவரம் செய்பவர்கள்
எல்லாக் கலவரங்களிலுமே அவற்றில் ஈடுபடுபவர்கள் ஈடுபடும் இனங்களைச் சேர்ந்த கிரிமினல்களாகவும், கேடிகளாகவுமே பெரும்பாலும் இருப்பர். அவர்களின் நோக்கமும் கலவரத்தில் ஈடுபட்டு முடிந்த அளவு அகப்பட்டதை சுருட்டுவது என்பதாகவே இருக்கும். இத்தகைய கேடிகளும், கிரிமினல்களும் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான பல கலவரங்களில் பல சாதாரண சிங்களர்களை அவர்கள் தமிழர்களுக்கு பாதுகாப்பு தந்தனர் என்ற ஒரே காரணத்திற்காக தாக்கிய, கொலை செய்த சம்பவங்களும் உண்டு.
சிங்கள இனவெறிவாதம் ஒரு வெறித்தனத்தை சாதாரண சிங்கள மக்களிடையே ஏற்படுத்த பல யுக்திகளை கையாளுகின்றது என்பது உண்மையே. ஆனால் அவற்றைப் போலவே சாதாரண சிங்கள மக்கள் மீது அவர்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று பழிபோடும் போக்கும் இந்த தமிழ் அமைப்புகளிடையே உள்ளது என்பதும் உண்மையே.
தேசிய முதலாளிகளை உத்தமர் ஆக்கும் வேலை
சிங்கள பேரினவாதம்தான் பிரச்னைக்கு காரணம் என்று கூறும் வகையில் இந்த அமைப்புகள் முன் வைக்கும் அடுத்த அபத்தமான வாதம் இலங்கையின் சுதந்திரம் தமிழ் மற்றும் சிங்கள தரகு முதலாளிகளின் கைக்கு வந்தது என்பதாகும். அதாவது தேசிய முதலாளிகள் கைக்கு விடுதலைக்குப் பின் ஆட்சி அதிகாரம் வந்திருந்தால் அது இன வெறிவாதத்தைக் கடைப் பிடித்திருக்காது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் தரகு முதலாளிகளாக இருந்ததால் தான் சிங்களப் பேரினவாதப் போக்கு ஆட்சிக்கு வந்தவுடன் மேலோங்கியது என்பதே இவர்களது கூற்றின் உட்பொருள்.
தங்களது அபத்தமான அரசியல் நிலையை, நிலை நாட்டுவதற்காக இலங்கைப் பிரச்னையில் மட்டுமல்ல, இந்தியா குறித்த ஆய்வுகளிலும்கூட தேசிய முதலாளித்துவத்தை உன்னதப்படுத்தும் வேலையை பல சமயங்களில் சிரமேற்கொண்டு இவ்வமைப்புகள் செய்கின்றன.
யாருக்குத் தரகன்?
ஆனால் தரகு முதலாளிகள் என்றால் விடுதலை பெறுவதற்கு முன்பு இலங்கையை ஆட்சி செய்த பிரிட்டிஷ் முதலாளிகளுக்கே இம்முதலாளிகள் தரகர்களாக இருந்திருக்கமுடியும். அத்தரகு முதலாளிகளின் கைகளுக்கே ஒரு ஆட்சியதிகாரம் வந்தது என்றால் சுதந்திரத்திற்குப் பின்பு இலங்கையில் ஏற்பட்டது பிரிட்டிஷ்காரர்களின் பொம்மை அரசு என்பதே அதன் பொருளாக ஆகும்.
ஆனால் அந்தோ இலங்கையின் விடுதலைக்கு பின்பு அங்கு தோன்றிய எந்தத் தங்களது பொம்மை அரசின் முக்கிய பிரச்னையிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தலையிடவே இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்ற சிறுபிள்ளை தான் விளையாட உருவாக்கிய பொம்மையை உருவாக்கியவுடனேயே தூக்கி எறிந்துவிட்டது. விடுதலைக்குப் பின் இலங்கையின் வரலாற்று நிகழ்வுகளை கூர்ந்து நோக்குவோர் இவர்களின் கூற்றை வைத்து இப்படி ஒரு முடிவுக்கே வரமுடியும்.
இங்கிலாந்தின் தரகனா? இந்தியாவின் தரகனா?
இதற்கு மாறாக இலங்கையைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவின் நேரடி மறைமுக தலையீடுகளும் செல்வாக்கு செலுத்துதலும் அநேக சமயங்களில் விடுதலைக்குப் பின் இலங்கையில் இருந்துள்ளது. தரகு முதலாளிகள் கைகளுக்கு இலங்கையின் விடுதலை வந்தது என்ற இவர்களின் இந்த வாதம் இந்த அடிப்படையில் அபத்தமானது என்று நாம் கூறும் போது இவர்கள் கூறலாம்: அதாவது விடுதலைக்கு முன்பு இலங்கை முதலாளி பிரிட்டிஷ் முதலாளியின் தரகனாக இருந்தான்; அதன் பின் அவன் இந்தியா உட்பட அனைத்து சிறிய, பெரிய ஏகாதிபத்திய நாடுகளின் தரகனாக ஆகிவிட்டான் என்று-அதுவும் வேறு வழியின்றி இந்த பிரச்னையில் இந்தியா வளர்ந்து வரும் ஒரு ஏகாதிபத்தியம் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்டால்.
தரகு முதலாளி கேவலமானவனே; ஆனால் தேசிய முதலாளி உத்தமனல்ல
தன்னகத்தே மூலதன திரட்சி கொண்டவனாக ஒரு முதலாளி இருக்கும் போது அவன் இது நமது நாடு; இதில் முதலீடு செய்து சம்பாதிக்க நமக்கு மட்டுமே உரிமையுண்டு. எங்கிருந்தோ வந்தவனுக்கு முதலீடு செய்ய என்ன உரிமை என்று எண்ணுவான். அப்போது அவன் தேசிய முதலாளி. அத்தகைய மூலதன திரட்சி இல்லாத நிலையில் அதனை திரட்டுவதற்காக அவன் தரகனாக, எடுபிடியாக எப்படி வேண்டுமானாலும் இருப்பான். அப்போது அவன் தரகு முதலாளி. ஆனால் எப்போதுமே எந்த முதலாளியும் உழைப்பைச் சுரண்டி பொருள் சேர்ப்பவனே.
பொருளாதாரத்தை முந்திச் செயல்படும் அரசியல்
இந்தியா இலங்கை போன்ற நாடுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அன்னிய சுரண்டலில் ஆட்பட்டு இருந்ததால் இங்குள்ள முதலாளிகளிடம் மூலதன திரட்சி ஆரம்பத்தில் குறைவாகவே இருந்தது. இப்போதும் கூட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியாவில் ஜப்பான் போன்ற நாடுகளின் முதலாளிகளுடன் ஒப்பிடுகையில் இவர்களின் மூலதன திரட்சி குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் முதலில் தரகனாக இருந்த முதலாளி எப்போதும் தரகனாகவே இருக்க வேண்டுமென்பதில்லை.
விடுதலை பெற்று தன் சொந்த தேசிய அரசை நிறுவிய பின்னர் அவன் தேசிய முதலாளி ஆகிவிடுகிறான். ஏனெனில் அரசியல் விடுதலை பெற்றவுடன் அவன் ஸ்தாபிக்கும் அரசு முதலாளித்துவத்தின் மிக வேகமான வளர்ச்சிக்காக எதை எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்கிறது. இலங்கையின் இத்தகைய நடவடிக்கை குறிப்பாக 1956-ல் பிரதமராக வந்த திரு.பண்டாரநாயகா அவர்களால் முழு வீச்சுடன் செய்யப்பட்டது. இதைத்தான் மாமேதை லெனின் தனது ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூலில் அரசியல் பொருளாதாரத்தை முந்திச் செயல்படுகிறது என்று கூறினார்.
தரகு முதலாளி தரகு முதலாளியாகவே இருந்தால் ஏகபோக முதலாளியாக ஆகியிருக்க முடியாது
இந்நிலையில் ஒரு காலத்தில் தரகு முதலாளிகளாக இருந்தவர்கள் விடுதலைக்குப் பின் தேசிய முதலாளிகளாக மாறியுள்ளதோடு அவர்கள் இந்தியா போன்ற நாடுகளில் ஏகபோக முதலாளிகளாகவும் ஆகிவிட்டனர். இவ்விடத்தில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும் தரகு முதலாளியாக இருக்கும் எவனும் ஏகபோக முதலாளியாக ஆக முடியாது. அவனை தரகனாக வைத்திருக்கும் முதலாளி அவ்வாறு அவன் ஆக அனுமதிக்க மாட்டான். உண்மையில் இந்தியாவில் பல முதலாளிகள் ஏகபோக முதலாளிகளாக மாறியுள்ளனர்.
இந்நிலையில் ஒப்புநோக்குமிடத்து இலங்கை முதலாளிகளைக் காட்டிலும் பெரிதாக வளர்ச்சியடைந்து ஏகபோகங்களை உருவாக்கி தன்னிடம் உள்ள உபரி மூலதனத்தை முதலீடு செய்ய இடம் தேடி அலைவதாக இருப்பது இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள இந்தியாவே; இங்கிலாந்து அல்ல. எனவேதான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் உள்பட இந்தியாவின் மேலாதிக்கத்தை நாசூக்காக நிலைநாட்டும் பல சரத்துக்களை கொண்ட பல ராஜிய ரீதியிலானதும் வர்த்தக ரீதியிலானதுமான ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையயாப்பமிடப்படுகின்றன.
மேலும் இயக்கவியல் அடிப்படையில் எந்தவொரு நிகழ்வினையும் சூழலையும் அதன் வளர்ச்சிப் போக்கிலும் அசைவிலும் நகர்விலும் ஆய்வு செய்யவேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் ஒருவன் அல்லது ஒரு நிறுவனம் ஒரு காலத்தில் தன்னை ஆட்சி செய்த அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு தரகு வேலை பார்த்து அதற்கான கமிசனைப் பெற்று பொருள் சேர்த்தாலும் அந்தப் பொருள் மூலதனத் திரட்சி பெற்றதும்; அதனைத் தானே முதலீடு செய்து லாபம் ஈட்டவேண்டும் என்றே எண்ணுவான். அப்போது கிட்டும் வாய்ப்புகளைப் பொறுத்து தன்நாடு, தன்மக்கள் இவர்களைக் கொண்டு தொழில் நடத்த தங்களுக்கே முழு உரிமை உண்டு என்ற வாதத்தையும் அவன் முன்வைப்பான்.
அபத்தத்திலும் அபத்தம்
மேற்கூறிய வாதத்தை முதலாளித்துவம் எப்போது எடுக்கத் தொடங்குகின்றதோ அப்போதே அதற்கு தேசிய முதலாளித்துவத்தின் கூறுகள் வந்துவிடுகின்றன. எனவே தரகு முதலாளித்துவ நிறுவனமாகத் தோன்றிய ஒன்று அது இறுதிவரை தரகு முதலாளித்துவமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.
தரகு முதலாளித்துவம் என்பது முதலாளித்துவத்தின் ஒரு பகுதிக்கு அது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் ஆற்றும் வரலாற்றுப் பங்கினை அடிப்படையாகக் கொண்டு சூட்டப்பட்ட காரணப்பெயரே தவிர இடு குறிப்பெயர் அல்ல. எனவே அதன் மண்டை மண்ணுக்குள் போகும் வரை தரகு முதலாளி என்ற பெயரை அத்துடன் பொருத்திக் கூறுவது அபத்தத்திலும் அபத்தமாகும்.
இந்தப் பின்னணியில் இலங்கையின் இனப்பிரச்னையை ஆய்வு செய்தால் நாம் இத்தகையதொரு முடிவுக்கே வரமுடியும்: அதாவது இலங்கையில் தற்போது நிலவும் பிரச்னை அடிப்படையில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் அளவிற்கான இன வேறுபாடுகளின் அடிப்படையில் தோன்றியதல்ல.
இலங்கையில் ஆட்சிசெய்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி கொள்கைகளாலும் தேச விடுதலையைச் சாதித்த பின் அங்கு ஆட்சிக்கு வந்த தேசிய முதலாளி வர்க்கம் அது சந்திக்க நேர்ந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகவும் வளர்த்து விடப்பட்டதே இந்த இனப்பிரச்னை என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.
தனிநாடல்ல - தனிமாநிலம் கூட கோரப்படவில்லை
தமிழர்கள் சிங்களப் பகுதிகள் பலவற்றில் வேலைகளிலும், தொழில்களிலும் இருந்ததால் விடுதலை பெற்ற வேளையில் தமிழர்களின் தலைவர்கள் தனி நாடல்ல, தனி மாநிலம் கூட கோரவில்லை.
மத்தியத்துவப் படுத்தப்பட்டதாக இருந்த இலங்கையின் ஆட்சியமைப்பில் குடிமக்கள் அனைவருக்குமான வாக்குரிமை இருக்கக்கூடாது; ஏனெனில் அது காடையர்கள் ஆட்சி அமைவதிலேயே சென்று முடியும்; படித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை இருக்கவேண்டும் என்பதே தமிழர்களின் தலைவர் பொன்னம்பலம் ராமநாதன் போன்றவர்கள் விடுதலை பெற்ற காலத்தில் முன் வைத்த வாதமாக இருந்தது.
படித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை என்றால் தமிழர்களில் மிகப் பெரும்பாலோர் வாக்குரிமை பெற்றவர்களாக ஆகி சிங்கள மக்களுடன் வாக்குரிமை விகிதத்திலும் ஏறக்குறைய சம நிலைக்கு வந்துவிடுவர் என்பதே அவரது எண்ணம். எனவே அனைவருக்கும் வாக்குரிமை என்பதை எதிர்த்த அவர் மத்தியத்துவப் படுத்தப்பட்டதாக இருந்த இலங்கை அரசமைப்பை எதிர்க்கவில்லை. தமிழர் வாழும் பகுதிகளை ஒன்றிணைத்து ஒரேமாகாணமாக ஆக்கவோ கூட்டாட்சி முறை வேண்டுமென்றோ அவர்கள் அக்காலத்தில் கோரவில்லை.
அடுத்து இலங்கைக்குக் கிட்டிய அரசியல் விடுதலை பல எதிர்பார்ப்புகளை அந்நாட்டின் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே விடுதலைப் பெற்ற வேளையில் உருவாக்கியிருந்தது. ஆனால் விடுதலைக்குப்பின் கட்டியமைக்கப்பட்ட முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறை வெகு விரைவிலேயே சந்தை நெருக்கடியையும், அதன் விளைவான வேலையின்மைப் பிரச்னையையும் எதிர்நோக்க நேர்ந்தது. அதிலிருந்து தப்பிக்க இருந்த ஒரே வழியான புது வேலைவாய்ப்புகளை உருவாக்க திராணியற்றதாக நெருக்கடி சூழ்ந்த நிலையில் இருந்த இலங்கை முதலாளி வர்க்கம் இருந்தது.
அதன் அரசு இயந்திரத்தை இயக்கிய ஆட்சியாளர்கள் பிரச்னையைத் திசை திருப்புவதற்காக ஏற்கனவே இருபெரும் தேசிய இனங்களைக் கொண்டதாக இருந்த அந்நாட்டில் அவ்வப்போது தோன்றும் இன வேறுபாட்டுப் போக்குகளைப் பயன்படுத்தி இந்த இனப்பிரச்னையை முன்நிறுத்தி அதனை வளர்த்து விட்டனர். அதற்கு எது எதை எல்லாம் பயன்படுத்த முடியுமோ அதை எல்லாம் பயன்படுத்தினர்.
கல்வி வாய்ப்புப் பெற்ற தமிழ் மக்கள்
கல்வியிலும், அரசு அலுவல்களிலும் பொருளாதாரா ரீதியாகவும் தமிழர்கள் ஓரளவு சிங்களர்களைக் காட்டிலும் மேம்பட்டு இருந்தது இவ்விசயத்தில் ஆட்சியாளர்களால் திறமையாகப் பயன்படுத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதி, சிங்களர்கள் வாழும் பகுதியைப் போல அத்தனை இயற்கை வளம்மிக்கதல்ல. அதனாலேயே அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தப் பல வகைகளில் போராட வேண்டியிருந்தது. கல்வி பெற்று எப்படியாவது அரசு அலுவல்களைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இருந்தது.
அமெரிக்க மெத்தாடிஸ்ட் சர்ச் சார்ந்த நிறுவனங்கள் தமிழ் தெரிந்த அமெரிக்கர்களைக் கொண்டு தரமான ஆங்கிலக் கல்வியை தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணப்பகுதியில் வழங்கியதால் அதனை கற்று பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பல அலுவல்களில் 19ம் நூற்றாண்டில் கடைசிப் பகுதி முதற்கொண்டே தமிழர்கள் பணியமர்ந்துவிட்டனர். யாழ்ப்பாணத்தில் கல்வி பயின்ற தமிழர்களுக்கு இந்தியாவிலும் மலேசியாவிலும் கூட தரமான வேலைகள் கிட்டின.
ஆனால் சிங்களர் வாழ்ந்த பகுதிகள் நீர்ப்பாசன வசதி மிக்கவையாய் இருந்ததால் விவசாயத்தைச் சார்ந்தே அவர்களால் வாழமுடியும் என்ற நிலை இருந்தது. 1929-1931களில் உலகையும் இலங்கையையும் குலுக்கிய பொருளாதார நெருக்கடி நேர்ந்த சமயத்தில்தான் அதுவரை தங்களது வளமான பகுதியில் விவசாய வேலைகளில் மட்டும் ஆர்வம் காட்டிவந்த சிங்களர்கள் அரசு வேலைகளை ஏறெடுத்துப் பார்க்கத் தொடங்கினர். ஆனால் அப்போதே அரசுப் பணிகளில் பெரும்பாலும் தமிழர்கள் பணியமர்ந்துவிட்டனர்.
ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகள் பொதுவாகவே தொழில் துறை முதலாளிகளின் நலனையே பெரிதும் பேணுபவை. ஏனெனில் தொழிற்சாலைகளுக்கு இடுபொருட்களாக விவசாய விளைபொருட்கள் இருப்பதால் அவற்றின் விலை ஏற்றத்தை பெரும்பாலும் முதலாளி வர்க்கம் அனுமதிப்பதில்லை. இதனால் தொழிற்சாலை யுகத்தில் விவசாயப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்தே வந்தது. மேலும் அடுத்தடுத்த தலைமுறைகள் வருகையில் நிலப்பகிர்வும் ஏற்படுவதால் விவசாயத்தை நம்பியே இருக்கமுடியாது என்ற சூழ்நிலை நடுத்தர, மேல்மட்ட சிங்கள விவசாய உடைமை வர்க்கங்களுக்கு ஏற்பட்டது.
சிங்கள இனத்தில் தோன்றிய வேலையின்மைப் பிரச்னை
அந்நிலையில் அரசு வேலைகளுக்கும் பிற தொழில் நடவடிக்கைகளுக்கும் அவர்கள் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது அப்போது அவைகளில் தங்களது மக்கட் தொகை விகிதத்தைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் தமிழர்கள் இருந்தது அவர்களுக்கு பெரும் பிரச்னையாகப் பட்டது. இது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி இருந்த 1930-களிலேயே ஆரம்பித்துவிட்டது.
விடுதலைக்குப்பின் ஏற்பட்ட ஆட்சியதிகாரத்தில் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்த சிங்கள ஆட்சியாளர்களும் அவர்களது கட்சிகளும் விடுதலைக்குப் பின் இதையே பெரிதாக காட்டி தமிழ் எதிர்ப்புணர்வை வளர்க்கத் தொடங்கினர். தங்களது வாய்ப்புகளை எல்லாம் தமிழர்கள் தட்டிப்பறித்து விட்டனர் என்ற உணர்வை சாதாரண சிங்கள மக்கள் மனதில் பதிக்கத் தொடங்கினர்.
ஆட்சி மொழி
இவ்வாறு சிங்கள மக்களிடையே வெறிவாதத்தை ஊட்டுவதற்கு அவர்களுக்குப் பயன்பட்ட மற்றொரு விசயம் ஆட்சிமொழியாகும். அரசின் நிர்வாக மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், அல்லது ஆங்கிலம் சிங்களம் ஆகிய இரு மொழிகள் இருந்தாலும், அல்லது ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகள் இருந்தாலும் அல்லது சிங்களமும் தமிழும் மட்டும் இருந்தாலும் கூட தமிழ் மக்களே அதிக அரசு வேலைகளைப் பெற வாய்ப்புடையவர்களாக ஆகிவிடுவர் என்ற அச்சத்தை சிங்கள நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் சிங்கள அரசியல்வாதிகள் உருவாக்கினர். அதாவது சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே அரசு வேலைகளில் சிங்கள மக்கள் அமர முடியும் என்ற எண்ணத்தை அவர்கள் உருவாக்கினர். எனவே சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்ற திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.
இந்திய இட ஒதுக்கீட்டை ஒத்ததே
நமது நாட்டின் சாதிய இடஒதுக்கீட்டு முறையை நியாயப்படுத்த எந்தெந்த வாதங்களை இங்குள்ள நமது ஆட்சியாளர்கள் முன் வைக்கிறார்களோ ஏறக்குறைய அதனை ஒத்த வாதங்களை முன்வைத்து அவர்களது முன்னேறிய நிலையை சாக்காகக்கூறி கல்வி, வேலைவாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கு இருந்த வாய்ப்புகளை குறைக்கத் தொடங்கினர். இந்தியா மற்றும் இலங்கையின் ஆட்சியாளர்கள் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தனர். அதாவது மக்களின் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீடுகளும் சலுகைகளும் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழாது இருப்பதற்கு எது எதை எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தனர்.
வளர்ந்து வந்த வர்க்கப் போராட்டம்
உள்ளபடியே வேலையின்மைப் பிரச்னை முதலாளித்துவச் சுரண்டல் உற்பத்தி முறையினால் தவிர்க்க முடியாமல் ஏற்படுவது ஆகும். எனவே சமூக மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் சிங்களர் தமிழர் என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களிடமும் உருவாவதற்கேற்ற சூழ்நிலை இலங்கையில் பெரிதும் நிலவியது. இந்தியாவைக் காட்டிலும் கல்வி கற்றோர் விகிதம் இலங்கையில் அதிகம். அதுமட்டுமல்ல கல்வியின் தரமும் நன்றாக இருந்தது.
இந்த நிலையில் விசயம் தெரிந்தவர்களாகவும், சமூகம் வர்க்கங்களால் பிளவுபட்டுள்ளதே அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமாக உள்ளது என்பதைச் சிரமமின்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்களாகவும் அம்மக்கள் இருந்தனர். 1947-ல் தோன்றிய போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம், 1953-ல் நடந்த இலங்கை முழுவதையுமே ஸ்தம்பிக்க வைத்த முழு அடைப்புப் போராட்டம் போன்றவை இதை உறுதிசெய்கின்றன.
இதற்கு ஏதுவானதாக அன்று நிலவிய உலகச் சூழ்நிலையும் இருந்தது. சோசலிஸ அமைப்பின் மேன்மை, சோசலிஸ நாடுகளின் சாதனைகள் சாதாரண மக்களையும் ஈர்க்க வல்லவையாக இருந்தன. இதனால் தான் அவசர அவசரமாக மக்கள் ஒற்றுமையை துண்டாடவல்ல இன வெறியைத் தூண்டி, மக்களிடம் வேறொருவகைப் பிரிவினையைப் பூதாகரமாக உருவாக்கி அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமான வர்க்கப் பிரிவினை அவர்களது மனதில் தோன்றாதிருப்பதற்கு முடிந்த அனைத்தையும் ஆட்சியாளர் செய்தனர். அதாவது இனபேதம் கடந்த சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்க ஒற்றுமை ஏற்பட்டுவிடக் கூடாது என்று உறுதியாக எண்ணினர்.
சிங்களரோடு கைகோர்த்து செயல்பட்ட தமிழ் உடைமை வர்க்கம்
விடுதலை பெற்ற ஆரம்ப காலத்தில் உழைக்கும் வர்க்கப் புரட்சி சார்ந்த சிந்தனைகள் சமூகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் சிங்கள முதலாளிவர்க்கப் பிரதிநிதிகளோடு தமிழ் முதலாளிவர்க்கப் பிரதிநிதிகளும் கைகோர்த்துச் செயல்பட்டனர். அதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு மலையகத் தமிழர்களை வெளியேற்ற இந்தியாவுடன் இலங்கை ஆட்சியாளர்கள் செய்து கொண்ட ஒப்பந்தமும் அதற்குத் தமிழ் தேசிய முதலாளிகளின் பிரதிநிதிகள் அளித்த மனமுவந்த ஆதரவுமாகும்.
உழைப்பால் நாட்டிற்கு வளம் குவித்த மலையகத் தமிழர்
மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இலங்கையில் ஒரு ஒட்டுண்ணித்தனமான வாழ்க்கையை நடத்தவில்லை. மாறாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு போதிய ஆட்கள் அங்கு கிடைக்காததால் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து அங்கு வேலை செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டவர்களே அவர்கள். நெற்றிவேர்வை நிலத்தில் விழ அவர்கள் பாடுபட்டதன் பயனாக பெரும் அந்நிய செலாவணி இலங்கைக்குக் கிடைத்தது.
இடதுசாரிகளின் தேர்தல் வெற்றியும் செங்கொடி சங்க வளர்ச்சியும்
விடுதலைக்குப் பின்பு அங்கு நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளை ஒட்டியே அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு கூடுதலாக ஏற்பட்டது. குறிப்பாக 1964ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 7 இடதுசாரி வேட்பாளர்களை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். அதுமட்டுமல்ல தேயிலைத் தோட்டத் தொழிலாளரிடையே செங்கொடி சங்கத்தின் வளர்ச்சியும் பிரமிக்கத்தக்க விதத்தில் இருந்தது.
இன பேதம் கடந்த முதலாளிகளின் வர்க்க ஒற்றுமை
மேலும் அத் தேர்தல் முடிவுகள் எந்த பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்து சோசலிச ரீதியிலான சமூக மாற்றம் அங்கு வந்துவிடுவதை தடுக்க இலங்கையின் ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் விரும்பினார்களோ அந்த இனப் பிரிவினையை உடைத்து நொறுக்கும் விதத்தில் சிங்கள, தமிழ் தொழிலாளரின் உழைக்கும் வர்க்க ஒற்றுமை அங்கு ஏற்பட்டதை கோடிட்டு காட்டியது. இதனைக் கண்டு பீதியடைந்த சிங்கள-தமிழ் தேசிய முதலாளிகளும் அதாவது திருமதி. பண்டார நாயகாவும் செல்வ நாயகமும் கையோடு கைகோர்த்தே சாஸ்திரி-பண்டாரநாயகா ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
அதன் விளைவாகவே இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் தமிழகம் திரும்ப நேர்ந்தது. அதாவது சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு தேசிய இனங்களிலும் இருந்த உடமை வர்க்கங்களின் தலைவர்கள் மலையகத் தமிழர்களிடம் தோன்றிய இனம் மொழி கடந்த தொழிலாளர் ஒற்றுமையும் இடதுசாரி சிந்தனைப்போக்கும் இலங்கை முழுவதும் வியாபித்து வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே அன்று அவ்வாறு கைகோர்த்து செயல்பட்டனர்.
உண்மையிலேயே அப்பழுக்கற்ற இன உணர்வு இலங்கைத் தமிழர்களை வழிநடத்தியிருக்குமானால் மலையகத் தமிழரின் வெளியேற்றத்தின் போதுதான் அவ்வுணர்வு மிகப் பெரிதாக வெளிப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் 15 லட்சம் மலையகத் தமிழர்களும் வெளியேற்றப் படாமல் இருந்திருந்தால் தமிழர் மக்கள் தொகையும் இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். மத்தியத்துவப் படுத்தப்பட்ட ஆட்சியமைப்பில் கூடுதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற அது வழியும் வகுத்திருக்கும்.
இனமா? உடமையா? என்றால் உடமைக்கே முன்னுரிமை
ஆனால் மலையகத் தமிழர் பகுதியில் வளர்ந்த வர்க்க அரசியல் மேலும் வலுப்பெற்றால் அதனால் சொத்துடைமை அமைப்பிற்கே பங்கம் நேர்ந்துவிடும் என்பதால் தமிழ் தேசிய இனத்தின் உடைமை வர்க்கப் பிரதிநிதிகள் உடைமை வர்க்க அரசியலுக்கு தலைமையேற்றிருந்த சிங்கள அரசியல் வாதிகளுக்கு ஒத்துஊதி துயரகரமான மலையகத் தமிழர்களின் வெளியேற்றத்திற்கும் இன்னும்பல மலையகத் தமிழர் நாடற்றவராய் அங்கே இருப்பதற்கும் வழிவகுத்தனர். அதாவது உடைமையா, இனமா என்ற கேள்வி எழுந்த போது தமிழ் தேசிய உடைமை வர்க்கம் உடைமைக்கே முன்னுரிமை தந்தது.
தற்செயல் நிகழ்வல்ல
இன்று இங்கு தமிழ் இன பிரச்னையை முன்னெடுத்து முழுங்குபவர்கள் முன் வைப்பது போல் மலையகத் தமிழரின் வெளியேற்றம் இலங்கைத் தமிழர் அதற்கு தேவைப்பட்ட அளவு முக்கியத்துவம் தராததாலோ அல்லது தற்செயலாகவோ, ஒரு சாதாரண நிகழ்வாகவோ நடந்ததல்ல.
பொதுவாக இயல்பான வேளைகளில் உடமை வர்க்கங்களிடையே சந்தையை கைப்பற்றும் வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்தும் போட்டியே உக்கிரமாக நடைபெறுகிறது. அது எதுவரை என்றால் உடமை வர்க்கங்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டங்கள் கூர்மையடையாத வரை. அப்போட்டியில் வலு சேர்ப்பதற்காக உடமை வர்க்கங்கள் தங்களின் இனம், மொழி, கலாச்சாரம் போன்ற அனைத்தையும் திறம்படப் பயன்படுத்துகின்றன.
ஆனால் எப்போது தனி உடமைக்கே உலைவைக்கும் உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள் தலைதூக்குகின்றனவோ அப்போது இன, மொழி, கலாச்சார பேதங்கள் அனைத்தையும் மறந்து உடைமை வர்க்கங்கள் தங்களது அடிப்படை நலனான தனிச் சொத்துரிமையை பாதுகாக்க ஒன்று கூடி விடுகின்றன. இதனை அப்பட்டமாகவும் தெளிவாகவும் நிரூபித்ததே இலங்கையின் மலையகத் தமிழர் வெளியேற்றப் பிரச்னையாகும்.
நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அப்பாவித் தமிழர்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்க உடனடியான போர் நிறுத்தத்திற்கு இலங்கை அரசும் எல்.டி.டி.ஈ.
அமைப்பும் முன்வரவேண்டும்
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பிரச்னையால் அமைதியான வாழ்வை இழந்து நிற்கும் இலங்கைத் தமிழர்கள் இன்று நெருக்கடியான போர்ச்சூழலில் சிக்கித்தவிக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழீழம் என்று எல்.டி.டி.ஈ-யினால் அறிவிக்கப்பட்டு அங்கு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் பலவற்றை அது ராணுவத்திடம் இழந்துள்ளது. இறுதியில் தனது அரசியல் தலைநகரமான கிளிநொச்சியையும் முக்கிய கடற்படைத்தளமான முல்லைத் தீவு நகரையும் இழந்து எல்.டி.டி.ஈ. அமைப்பினரின் எல்லை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வன்னிக் காடுகளுக்குள் சுருக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை இராணுவத்துக்கும் எல்.டி.டி.ஈ-யினருக்கும் இடையிலான போர்க்களம் 300 சதுர கி.மீ. பரப்பளவிற்குள் முக்கியமாக புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. கிளிநொச்சியில் இருந்தும் முல்லைத் தீவிலிருந்தும் எல்.டி.டி.ஈ-யினர் பின் வாங்கும் போது அந்நகரங்களில் வாழ்ந்த மக்களோடு பின்நகர்ந்ததால் இந்த 300 சதுர.கி.மீ பரப்பளவிற்குள் சுமார் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரையிலான அப்பாவித் தமிழர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இந்த மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வீடின்றி வாசலின்றி காடுகளிலும் மேடுகளிலும் குடியேறி உள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையிலான சண்டையில் ராணுவத்தின் குண்டு வீச்சில் அனுதினமும் நூற்றுக்கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். காயம்பட்டவர்களுக்கு மருத்துவ வசதியும் உணவும் இன்றி அவதிப்பட்டுக் கொண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தி ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி இலங்கை ராணுவம் அப்பாவி மக்கள் மீது குண்டுமழை பொழிகிறது. எல்.டி.டி.ஈ கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளை அமைதிப்பகுதி என அறிவித்து அங்கு வரும் மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதன் மூலம் மக்களிடமிருந்து விடுதலைப்புலிகளின் தாக்குதல் மையங்களை தனிமைப்படுத்த அரசு முயல்கிறது. அதை நம்பி பாதுகாப்பு பகுதிக்கு வந்த மக்கள் மீதும் ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்துகிறது.
விடுதலைப்புலிகள் மக்கள் மத்தியில் இருந்து தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் என்று ராணுவம் சொல்கிறது. இல்லை, நாங்கள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தவில்லை; தமிழ் மக்களை கொல்ல வேண்டுமென்பதற்காகவே இலங்கை ராணுவம் குண்டு வீசுகிறது என்று விடுதலைப்புலிகள் சொல்கின்றனர்.
அங்கே போர்க்களத்தில் சுதந்திரமான பத்திரிக்கையாளர் எவரும் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில் எது உண்மை என்று சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. ஆனால் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இச்சண்டையில் 2 லட்சம் அப்பாவித் தமிழர்களின் உயிர் அபாயத்தில் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
தமிழகத்தின் அரசியல் கட்சிகளோ இப்போது எழுந்துள்ள இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் எப்படி ஆதாயம் அடையலாம் அல்லது எதிர்தரப்பை ஆதாயம் அடையவிடாமல் எப்படித் தடுக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கின்றனர். அதே சமயம் இந்திய அரசு தனது ஏகாதிபத்திய நலனை மனதில் கொண்டு, அமெரிக்கா, ஜப்பான், சீனா, பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்த போரில் இலங்கை அரசிற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறது. ராணுவத் தளவாடங்கள் முதற்கொண்டு ஆலோசனை வரை அனைத்தும் வழங்கி வருகிறது.
சமீபத்தில் இலங்கை சென்று வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி, எல்.டி.டி.ஈ மீது பரிவு காட்ட முடியாது, அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்புப் பிரதேசங்களை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தை ஆளும் தி.மு.க-வின் நிதிஅமைச்சர் அன்பழகன் அடுத்த நாட்டு விவகாரத்தை ஓரளவிற்குத்தான் விவாதிக்க முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
இந்நிலையில் இலங்கை அதிபர் இராஜபக்சே, போர்ச்சூழலில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களுக்கு 48 மணி நேரம் அவகாசம் அளித்து அதற்குள் பாதுகாப்பு பகுதியன அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் வந்துவிட வேண்டுமென்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் மூலம் 48 மணி நேரத்திற்குள் இறுதி கட்டத் தாக்குதலுக்கு இலங்கை ராணுவம் தயாராகி வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்குள் 2 லட்சம் மக்கள் இருப்பதே கடும் நெரிசலாக இருக்கும் நிலையில் அங்கே இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுக்கும் போது அப்பாவித் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் மடிவது நிச்சயம். எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி மக்களின் உயிரிழப்பு நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். அதற்கு உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்யவேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தி வரும் இலங்கை அரசையும், அதற்கு உதவி செய்து வரும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களையும் மாற்றுக்கருத்து! வன்மையாக கண்டிக்கிறது.
* உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி இருதரப்பும் போர்நிறுத்தம் செய்து 2 லட்சம் அப்பாவித் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.
*ஐ.நா. சபை, செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த இடங்களுக்குச் சென்று மீண்டும் குடியேற உதவ வேண்டும்.
*இலங்கை ராணுவத்திற்கு இந்தியா செய்துவரும் ஆயுத உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட வேண்டும்.
*ஆரம்பத்தில் தேசிய இனப் பிரச்னையாகக் கருக்கொள்ளா விட்டாலும் பின்னாளில் தேசிய இனப்பிரச்னையாக உருக் கொண்டுவிட்ட இலங்கைத் தமிழர் பிரச்னை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட - ஜனநாயக வழிமுறையாகிய வாக்கெடுப்பின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
அதாவது ஐ.நா. சபையின் மேற்பார்வையின் கீழ் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் (ஒட்டு மொத்த இலங்கை மக்கள் மத்தியில் அல்ல) வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அம்மக்கள் விருப்பப்படி தனிநாடாக பிரிந்து செல்வதா ஒன்று பட்ட இலங்கையில் சுயாட்சியுடன் இணைந்திருப்பதா என்பது முடிவு செய்யப்பட வேண்டும். அம்முடிவிற்கு இலங்கை அரசு மற்றும் எல்.டி.டி.ஈ உட்பட சர்வதேச சமூகமும் மதிப்பளிக்க வேண்டும்.
மேலே கண்ட ஜனநாயக வழிமுறையில் இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு தமிழகத்தில் உள்ள இடதுசாரி முற்போக்கு சக்திகளும், ஜனநாயக எண்ணம் கொண்டோரும், அறிவுஜீவிகளும் உணர்ச்சிக்கு இடமளிக்காது இலங்கையின் வரலாற்றுச் சூழலோடு இலங்கைத் தமிழர் பிரச்னையை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட நம் பங்கை ஆற்றவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
பின்நவீனத்துவ நிலை தமிழில்
பின்நவீனத்துவ நிலை: அறிவு குறித்த அறிக்கை(The Postmodern Condition: A Report on Knowledge) என்பது தத்துவஞானி ழீன் பிராங்கைஸ் லிய...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
கவிஞர் அனார் : தமிழின் நவீன கவிதைகளுக்கு மிக வலுவான பங்களிப்பை தருகின்றவர். "ஓவியம் வரையாத தூரிகை(2004)", "எனக்குக் கவிதை முக...
No comments:
Post a Comment