Latest News

பெண்ணியம் 4

Thursday, July 23, 2009 , Posted by பிறவி at 7:16 AM


18. நீங்கள் ஒரு புறத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால் மறுபுறத்தில் பெண்தீவிரவாதிகள் கருச்சிதைவு செய்வதனை இந் நாட்டில் சட்டபூர்வமானதாக்க முயல்கிறார்கள். நாம் இதனைத் தடுக்க முயலவேண்டும். ஒவ்வொரு முதிர் கருவிற்கும் வாழ உரிமையுண்டு நாம் குழந்தைகளின் கொலையைச் சட்டபூர்வமானதாக்கக் கூடாது.

1833 ஆண்டின் பீனல் சட்டக்கோர்வையின் 30 ஆம் பிரிவின்படி இன்று வரையும் கருச்சிதைவு இலங்கையில் சட்டபூர்வமற்றதாகவே உள்ளது. சனத்தொகை அளவுக்கு மீறி அதிகரிப்பது, பிறப்பு வீதத்தினைக் குறைப்பதற்கு பெரும் முயற்சி எடுக்கப்படுவது ஆகியன காணப்படினும் கூட கருச்சிதைவானது சட்டபூர்வமற்றதாகவே அமைகிறது. ஏனெனில் கருக்கொண்ட நேரத்தில் இருந்து கருவிற்கு உயிரும், வாழ்வும் உண்டு எனவும் பெண்ணினது உடல் அதன் பிறப்பிற்கான ஒரு சாதனம் எனவும் கருதப்படுவதால் ஆகும். வேறு வகையிற் கூறுவதனால் கருக்கொள்ளும் கணத்திலிருந்து பெண்ணின் கருப்பையானது சமுதாய உற்பத்தியாக மாறுகிறது. அவள் தன்னுடைய உடலில் தனக்கிருக்கும் உரிமையை இழந்து விடுகிறாள். அரசு பெண்ணினது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் உரிமையைப் பெறுகிறது.

இக்கருத்தானது விஞ்ஞான நோக்கிலும் நடைமுறை நோக்கிலும் எதிர்த்துரைக்கக் கூடியதொன்றாகும். அமெரிக்க உயர்நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள், உதாரணங்கள் மூலம் கருவானது மூன்றாம் மாதம் வரை உயிரற்றது என்பதனை எடுத்;துக் காட்டியுள்ளார்கள். இக் காரணத்தால் அமெரிக்க உயர்நீதிமன்றம் மூன்றாம் மாதம் வரை கருவானது பெண்ணின் கருப்பையின் ஒரு பகுதியாக அமைகிறதாகையால் பெண் தனது உடல் மீதான உரிமையைப் பேணலாம் என்று கூறி மூன்றாம் மாதம் வரை கருச்சிதைவு செய்து கொள்வதனை அனுமதிக்கிறது. நடைமுறை நோக்கில் கூட இலங்கையில் கருச்சிதைவானது அதிகரிக்கிறது என்;பதைச் சமீபகாலப் பத்திரிகைக் கட்டுரைகள் மூலமாக அறிய முடிகிறது. பணக்காரப் பெண்கள் வைத்தியர்களின் சேவையைப் பெறுவதன் மூலமாகவோ கருச்சிதைவு சட்டபூர்வமாக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்வதன் மூலமாகவோ கருச்சிதைவு செய்கிறார்கள். மறுபுறத்;;;தில் ஏழைப்பெண்கள் தேர்ச்சியற்ற வைத்தியரிடம் செல்கின்றனர் அல்லது தமக்கத்தாமே கருச்சிதைவு செய்ய முனைகின்றனர். இவ்வாறு செய்யும் போது பல பெண்கள் இறக்கிறார்கள். அல்லது தமது உறுப்பைச் சிதைத்துக்கொள்கிறார்கள்.

நடைமுறை ரீதியில் நோக்குகையில் சமுதாயத்தை உண்மையில் இரு தெரிவுகள் எதிர்நோக்குகின்றன. ஒன்று பெண்ணினது உயிரையும் உறுப்பையும் பாதுகாத்தல், மற்றது, பிறவாத, பெண்ணின் கருப்பையுடன் இணைக்கப்பட்ட, தேவையற்ற கருவை - சிதைவினால் அல்;லது ஆயுள்வேத முறைகளினால் அல்லது பெண்ணால் ஏற்படுத்தப்பட்ட காயங்களால் இறக்கக்கூடிய கருவைக் காப்பாற்றுதல் ஆகும். இப்படிப்பட்ட பழமையான நடைமுறையில் இருந்து தப்பிக்கொள்ள நாம் கருச்சிதைவை சட்டபூர்வமானதாக மாற்றுவதுடன் அதனை மருத்துவ சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

19. எனினும் வன்முறை பற்றிய பிரச்சனை வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்;துவது என்றே நான் கருதுகிறேன். நீங்கள் உண்மையாகப் பேசுவது எதைப்பற்றி?

பெண்கள் மீதான சமூகக்கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு தந்தை வழிச் சமூக அமைப்பு வன்முறைகளை ஒரு சாதனமாக அனுமதிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை பலவகைகளில் நிகழ்கிறது. மூன்றாம் உலகநாடுகளில் பாலுறுப்புச் சிதைத்தல், பெண்களை அடித்தல், பாலாத்காரம் ஆகியவை பொதுவான வன்முறை வடிவங்களாகும். இளம் பெண்பிள்ளைகளின் பாலுறுப்புக்களைச் சிதைத்தல் சில மத்தியகிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் மிகப் பொதுவான அம்சமாக உள்ளது. பெண்களது பாலியலைக் கட்டுப்படுத்துவதும், ஒடுக்குவதும் ஒரு ஆணின் சொத்துக்கு உரிமையைப் பெறக்கூடிய சந்ததி அவனுடையதே என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுதலுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது. இவ்வாறு ஒரு ஆணின் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்கு ஒரு பெண்ணின் உடல் சிதைக்கப்படுகிறது.

வடஇந்தியாவில் இன்று அதிகளவில் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் சீதனச்சாவுகள்; மூலம் பெண்களது வாழ்வின் இரங்கத்தக்க நிலையை அறிந்து கொள்ளலாம். திருமணமான இளம் பெண்கள் தற்கொலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். திருமணத்தின் போது பெண் கொண்டு வந்த சீதனம் குறைவானது அல்லது தரமற்றது என்பதற்காக அதிருப்தியடைந்த கணவன், மாமன்-மாமி ஆகியோர் அவளைக் கொலை செய்கின்றனர். ஒரு மட்டத்தில் திருமண நிறுவனத்துக்கு அவள் கொண்டு வரும் சீதனப் பொருட்களின் அந்தஸ்தை அவளும் பங்கிட்டுக்; கொள்கிறாள். இன்னோர் மட்டத்தில்; இப்பொருட்களைப் பாதுகாத்து புதிய தலைமுறைக்குக் கையளிக்கும் கருவியாகவும் பயன்படுகிறாள்.

20. ஆனால் இது உலகின் மற்;றைய பாகங்களில் அல்லவா? இலங்கையின் நிலைமை எவ்வாறானது?

இலங்கையின் முஸ்லிம் பலர் விருத்த சேதனம் செய்யப்பட்டு பாலுறுப்புச் சிதைவினால் துன்புறுகின்றனர். பெண்களை அடிப்பதும் பரவலாகக் காணப்படுகிறது. பெண்களை அடிப்பது சமுதாயத்தில் அனுமதிக்கப்படுவதோடு அல்லாமல் ஏற்றுக் கொள்ளவும்படுகிறது. பெண்களுக்கெதிராகக் காட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளின் வகைகளிலே இதனைப்பற்றி எவரும் சர்ச்சை செய்யாதிருப்பதற்குக் காரணம் அது தந்தைவழிச் சமூகத்தின் அதிகார அமைப்புக்குள் அடங்கிய புனிதத்தன்மை வாய்ந்த குடும்ப எல்லைக்குள் நடைபெறுவதாலாகும். ஒரு ‘தவறிய’ பெண்ணை,-அவள் எவ்வித காரணங்கள் வைத்திருந்தாலும்,-அவளது கணவன் அல்லது காதலன் அல்லது பாதுகாவலன் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் நன்கு அடிக்கலாம். சமுதாய யதார்த்தம் அவளுக்கெதிராக இருப்பதாலும் தப்பமுடியாத ஒரு பொறியில் அகப்பட்டிருப்பதாக அவள் உணர்வதாலும் அவள் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாதவளாக்கப்பட்டுள்ளாள். தான் அடி வாங்குவது அடிப்பவனின் கையாலாகாத்தனத்தாலும் அவனது பயங்களாலும் அல்;லாது தான் செய்;த குற்றத்திற்காக என்றும் நம்புகிறாள். பெண்களை அடிப்பதை, வர்க்க, சாதி, இன எல்லைகளைக் கடந்து மூன்றாவது உலக நாட்டுப் பெண்கள் குழுக்கள் எடுத்துக் கூறி வருகின்றன. சில கலாசாரங்களிலும் சமூக அமைப்புக்களிலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒழுக்கங்களான திருமணத்திற்கு முன் பால் உறவு கொள்ளுவதும். கணவனல்லாதவனோடு உறவு கொள்ளலும் அவளைக் கொலைத்தண்டனைக்கு உட்படுத்தும்.

21. வேறு எந்தவகை வன்முறைக்குப் பெண்கள் பயப்படுகின்றனர்?

அநேகமாக வன்முறைகளின் இயல்பே பாலியல் சம்பந்தமானது. ஆண் பாதுகாவலன், அவளைத் தாக்குபவன் என்ற பரஸ்பரம், மாறக் கூடிய பாத்திரங்களை ஏற்பது பெண்களின் பாலியலுடன் நேரடித் தொடர்புள்ளது. மூத்தவர்களிடமிருந்து ஒருவன் பெறும் புகழும், கௌரவமும் அவன் தனது பெண்களை மற்றைய ஆண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு விடாமல் எவ்வாறு பாதுகாக்கிறான் என்பதில் தங்கியுள்ளது.

கடந்தகாலத்தில் ஆண்கள் வரலாற்றாசிரியர்கள் சமூக வரலாற்றில் பெண்களைப் பாலாத்காரம் செய்வது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டதில்லை. பெருமளவில் பெண்களைப் பலாத்காரம் செய்தல் எதிர்ப்புணர்ச்சியுடைய பெண்களை மட்டுமன்றி அவர்கள் மூலம் ஆண்களையும் பயமுறுத்தப் பயன்பட்டது. பங்களாதேஷில் பாகிஸ்தானிய படையெடுப்பு, வியட்நாமில் அமெரிக்கப் படையெடுப்பு, லெபனானின் உள்;நாட்டுயுத்தம், இப்பொழுது இங்கு இடம் பெறும் இனப்பிரச்சினை என்பன உள்நாட்டிலும் உலக அரங்கிலும் தெளிவான உதாரணங்கள் ஆகும்;. சாதி, வர்க்கப் பிரச்சினைகளிலும் பாலியல் வன்முறைகள் பெண்களுக்கெதிராகப் பயன்படுகின்றன. உதாரணமாக விவசாயிகள் காணியற்ற கூலியாட்களிடமிருந்து நிலங்களை அபகரிக்கும் பொழுது காணிச் சொந்தக்காரர்கள் கூலிக்கமர்த்தப்பட்ட குண்டர்களை உபயோகித்து தீவிர எதிர்ப்புத் தெரிவிக்கும் பெண்களையும், பார்வையாளர்களையும் பெருந்தொகையாக பாலாத்காரம் செய்வர். இச் செயல்கள் பெண்களைப் பயப்படுத்துவதுடன் ஆண்களுக்கு அவர்களது பெண்களைக் காப்பாற்ற முடியாமையையும் உணர்த்துகிறது. தாழ்ந்த வர்க்க, சாதியைச் சேர்ந்த பெண்களுக்கெதிரான வலுவுள்ள ஆயுதமாகப் பலாத்காரம் செய்தலை அதிகாரத்தில் உள்ளோர் பயன்படுத்துகின்றனர். தந்தைவழிச் சமூகமானது ஆண்கள் மற்றவர்களில் அதிகாரம் செலுத்துவதையும், அவர்களைக் கட்டுப்படுத்துவதையும் எதிர்பார்க்கிறது. ஆனால் ஒரு ஏழை மனிதனுக்கோ தனது பெண்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு மட்டுமே சமூக அங்கீகாரம் உள்ளது. அதனால் அத்தகைய ஆண்கள் தமது பெண்கள் மீது மற்றவர்கள் பாலியல் வன்செயல்களைக் கட்டவிழ்த்து விடும் பொழுது தம்மை முற்றிலும் ஆண்மையற்றவராக உணர்கின்றனர்.

Currently have 0 comments: