Thursday, July 23, 2009

மார்க்சியமும் இலக்கியமும் 1


தனது நினைவுகளை எழுத்தில் வடித்த ஜெர்மனிய சோசலிசவாதி கிளாரா செட்கின் லெனினைப் பற்றிக் குறிப்பிடுகையில் புதிய பரிசோதனைக் கலைஞர்கள் மீது அவர் அதிக உணர்வீடுபாடு கொண்டிருக்கவில்லை யென்றும், மார்க்ஸ், எங்கெல்ஸ், பிளேக்கனொவ், ரொட்ஸ்கி ஆகியோரைப் போன்று அவரும் கலையிலும், இலக்கியத்திலும் யதார்த்தத்தையே விரும்பினார் என்றும் கூறினார். லெனினைப் பொறுத்தவரை அவருக்கு இலக்கிய கோபுரக் கொடுமுடிகளாகத் திகழ்ந்தவை டான்ரே, சேக்ஸ்பியர், புஷ்கின், பால்சாக், டிக்கன்ஸ், டொல்ஸ்டோய் ஆகியோரின் படைப்புக்களே. புதிய பரிசோதனைக் கைலையைப் பொறுத்தவரை தான் ஒரு ‘காட்டுமிராண்டி’ என லெனின் கூறினார்: எக்ஸ்பிரஷனிசம், பியூச்சரிசம், கியூபிசம் ஆகியவற்றினதும் வேறு ‘இசம்’களினதும் ஆக்கங்களைக் கலை மேதாவிலாசத்தின் உச்ச வெளிப்பாடுகளாக என்னால் கருதமுடியவில்லை. அவை எனக்குப் புரியவில்லை. அவை எனக்கு மகிழ்வூட்டவே யில்லை.

1918-இல் நடைபெற்ற புரட்சி விழாக்களின் போது மாஸ்கோவை அலங்கரிப்பதற்கு பியூச்சரிச, கியூபிச கலைஞர்களை லூனாசார்ஸ்கி - முதலாவது பொல்செவிக் கல்விக் கமிசார் அனுமதித்திருந்தார். அப்பொழுது இக் கலைஞர்களின் முயற்சிகளை லெனின் கடும் குத்தலான ஏளனத்தோடு “வெளிப்படையான அவமதிப்பு, சிதைவு” என வர்ணித்தார். மாயோ கொவ்ஸ்கியின் கவிதையைப் பற்றி (150,000,000) குறிப்பிடுகையில் ‘இது கவர்ச்சிமிக்க இலக்கியம், பாருங்கோ. ஒரு சிறப்புவகை கம்யூனிசம், கடைப்புளி கம்யூனிசம்’ என்றார் லெனின். லெனினைப் போலன்றி, ரொட்ஸ்கியின் சுவைப்புணர்வு ‘நாகரிக’ மெருகு உற்றிருந்ததால், பியூச்சரிசம், போர்மலிசம், கொன்ஸ்ரக்டிவிசம் ஆகியவை அத்துணை எளிதாகத் தட்டிக்கழிக்கப்படவில்லை; ஆனால் அவருடைய இலக்கிய விமர்சனம் முழுவதிலும் அவர்கூட ‘மொடனிசம்’ குறித்து இரட்டை நிலையைக் கடைப்பிடித்தார். அவருடைய சார்புகள் ‘விமர்சன யதார்த்தத்தைத்’ தழுவியிருந்தன. லூகாக்ஸ்சைப் பொறுத்தவரை, எல்லாவகையான ‘மொடனிச’மும் சீர்குலைவாகவும், மனநோயாகவும், கோளாறு நிரம்பிய விசித்திரப் போக்காகவும், குழம்பிய கலையாகவும் கருதப்பட்டன. உண்மை வாழ்க்கையில் மனிதர் தமக்கிடையேயும், சமூகத்தோடும், இயற்கையோடும் கொண்டிருக்கும் தொடர்புகளின் இன்றியமையாத அமைப்பை கவித்துவ ரீதியாக யதார்த்த நாவல் பிரதி பிம்பம் செய்கின்றதென லூகாக்ஸ் கடும் வைதிக பிடிவாதப் பாங்கிலே எழுதுகையில் வாதிடுகின்றார். மேலெழுந்தவாரியான தோற்றப்பாடுகளையும் ‘அன்றாட’ உலகையும் அது நிராகரிக்கின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவர் கருத்துப்படி, ‘சராசரியானது’ சிறப்பற்றது, கலப்பானது, உயிர்ப்பற்றது, கவித்துவமற்றது; இலக்கியத்தின் உருவத்தையும், உள்ளடக்கத்தையும் வரையறுக்கும் பரிமாணம் அதற்கில்லை. இப்பரிமாணந்தான் கதைப் பின்னலின் இழைகளை ஒன்றிணைப்பதால் மேலோட்டமானதிற்கும், முக்கியமானதிற்கும், மையத்திற்கும், ஓரத்திற்கும் இடையே தேர்ந்தெடுப்பதற்கு கலைஞனுக்கு அது உதவுகின்றது. லூகாக்சுடைய நோக்கில் ‘மொடனிச’த்தின் கோட்பாடு இயற்பண்புப் பாங்கானது; அதற்கு படிநிலை அமைப்புத் தன்மை இல்லை; ‘புறநிலை யதார்த்தத்தைத் துண்டாடி சிதறவைக்கும்’ பியூச்சரிசமும், கொன்ஸ்ரக் டிவிசமும் முதலாளித்துவ பண்பாட்டின் நெருக்கடியை பிரதி விம்பம் செய்கின்றன; சோசலிச கண்ணோட்டத்தையுடைய எழுத்தாளர்கள் தான் அல்லது ஆகக் குறைந்தது அவர்கள் சமதர்மம் மீது பகைமை பாராட்டாதவர்களாக இருத்தல் வேண்டும் - நிலைத்து நிற்கக்கூடிய யதார்த்த இலக்கியத்தைப் படைக்க முடியும். எனவே மொத்தத்தில், பூர்சுவா வர்க்கத்தின் கலைவடிவமான 19-ம் நூற்றாண்டு யதார்த்தத்தைப் பேணிப் பாதுகாக்கும் பொருட்டு, நவீன எழுத்தாளர்கள் அரசியல் ரீதியாக பக்கஞ் சாரவேண்டியதன் அவசியத்தை லூகாக்ஸ் வலியுறுத்தினார் எனலாம். இவ்வாறு ‘மொடனிசத்’தை அவர் நிராகரித்தமை உண்மையான புரட்சிகர யதார்த்தவாதத்தை வளர்ச்சியுறச் செய்வதற்குப் பதில் மிகப் பழமைபேண் அழகியலை அவர் வரித்துக்கொண்டதையே குறிக்கின்றது.

No comments:

தீப்தி நேவலின் குழந்தைப் பருவம்

தீப்தி நேவலின் குழந்தைப் பருவம்  தீப்தி நேவல். அவரது முகநூல் பக்கத்தின் புகைப்பட உபயம் செப்டம்பர் 6, 2022 தீப்தி நேவாலின் குடும்ப வாழ்க்கையி...