Thursday, July 23, 2009

மார்க்ஸியமும் இலக்கியமும் 3


பெப்ரவரி 1917-இல் நடைபெற்ற புரட்சியில் அலெக்சான்டர் கெரன்ஸ்கியின் தலைமையில் பூர்சுவா ஜனநாயக அரசாங்கம் பதவிக்கு வந்தது. சார்மன்னன் முடியைத் துறந்தார். ஆயினும் நேசநாடுகளின் யுத்த நோக்கங்களுக்கு ஆதரவளித்துவந்த கெரன்ஸ்கியின் அரசாங்கம் விரைவிலே மக்கள் ஆதரவையும்தனது அதிகாரத்தையும் இழந்தது. ஒக்டோபரில் கைத்தொழில் துறையைச் சார்ந்த தொழிலாள வர்க்கம் பொல்ஷெவிக்குகளுக்குப் பின் அணிதிரண்டு துரதிர்ஷ்ட சாலியான கெரன்ஸ்கியை ‘வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்’ வீசியது. முற்றிலும் எதிர் பார்க்காதவர் களிடமிருந்து புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு கிடைத்தது. பியூச்சரிச குறியீட்டுவாதக் கவிஞர்களான அலெக்சான்டர் புளொக்கும், ஆன்ரே பெலியும் ஆனந்தப் பரவசத்தோடு புரட்சியை ரஷ்யாவின் ஊழிக் கூத்தாக வரவேற்றனர். புளொக் வருமாறு எழுதினார். ‘பயங்கரச் சூறாவளியையோ பனிப்புயலையோ போன்று ஒரு புரட்சி எப்பொழுதுமே புதியனவற்றை, எதிர் பாராதவற்றைக் கொணர்ந்து பலபேரை இரக்கமற்று ஏமாற்றுகிறது. அதன் சுழிகள் நல்லவர்களை விழுங்கி தகுதியற்றவர்களைக் காப்பாற்றுகின்றன. ஆனால் அதுவே புரட்சிகளின் இயல்பு. அதனால் நீரோட்டத்தின் முழுமொத்த திசை மார்க்கம் மாறுவதுமில்லை. அதனுடன் பிறந்த செவிடுபடுத்தும் பயங்கர ஆராவரமும் ஓய்வதில்லை. அதன் பேரிரைச்சல் அதன் உன்னதத்தின் வெளிப்பாடு”.

ஏனைய ரஷ்ய எழுத்தாளர்கள் இத்துணை ஆர்வம் காட்டவில்லை. 1922 அளவில் பெருமளவில் ரஷ்ய எழுத்தாளர்கள் மேற்கு ஐரோப்பாவிற்குப் படையெடுத்துச் சென்றமை பொல்ஷெவிசம் மீது கற்றறிந்தோர் வர்க்கம் பரவலாகப் பகைமை கொண்டிருந்ததைக் குறிக்கின்றது. ஜவன்பவனின், லியோனிட், அன்ரேயேவ், அலெக்சயி ரெமிசொவ் ஆகியோர் நிரந்தரமாகவே தாய்நாட்டை விட்டு வெளியேறினர். அலெக்சயி ரொல்ஸ்டாய், கோர்க்கி, ஏரன்பேர்க் ஆகியோர் தற்காலிக நாடோடிகளாயினர். ரஷ்யாவில் தொடர்ந்தும் வாழ்ந்த புரட்சிக்கு முற்பட்ட ஏனைய எழுத்தாளர்கள் புதிய நிலைமைக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்வதில் சங்கடப்பட்டதால் முக்கியத்துவம் வாய்ந்த அதிக படைப்புக்களை உருவாக்கவில்லை, யதார்த்த இலக்கியத்திற்கு புரட்சி புத்துயிரளித்து சோசலிச இலக்கியத்தை உருவாக்கும் என்ற எதிர் பார்ப்புகள் விரைவிலே கலைந்தன; புரட்சிக்கு உடன் பின் வந்த ஆண்டுகளிலே முன்னணிக்கு வந்த புதிய எழுத்தாளர் தலைமுறை 19ம் நூற்றாண்டு இலக்கிய ஆசான்களால் அல்ல குறியீட்டு வாதம், பியூச்சரிசம் ஆகியவற்றால் பாதிப்புற்றிருந்தனர். மொடனிசம் நசுங்குண்டிருப்பதற்குப் பதிலாக வலுவாக உயிர்ப்புப் பெற்றது. புரட்சியை விமர்சனக் கண்ணோட்டத்தோடு ஏற்றுக்கொண்ட அதேவேளை அதை ஒதுக்கி நின்று ஐயுறவாக நோக்கிய எழுத்தாளர்களினூடாகத்தான் - ‘இலக்கிய உடன் பிரயாணிகள்’ என ரொட்ஸ்கி இவர்களை அழைத்தார் - புரட்சி தனது உச்ச கலை வெளிப்பாட்டைப் பெற்றது: பில்னியாக், சாம்யாட்டின், பெடின், ஓலெசா, லியேனோவ் புரிவதற்கு கடினமாயிருப்பதாக லெனின் குறிப்பிட்ட மொடனிசத்திற்கு ஒரு புதிய, பற்றுறுதி வாய்ந்த யதார்த்தவாதம் சரியான சவால் விடவில்லை. 1920 களில் ஏறக்குறைய ஒருவகை ‘தற்போக்குக்’ கொள்கையே ரஷ்ய பண்பாட்டுத் துறையில் பரவியிருந்தது. ஆனால் 1930 கள் அளவில் மிகக்கட்டுப்பெட்டித் தளமான, நெகிழ்ந்தே கொடுக்க மறுத்த வைதீகப்போக்கு பல்வகைத் தன்மையையும் பரிசோதனையையும் அகற்றிவிட்டது. 1934ல் நடைபெற்ற சோவியத் எழுத்தாளர் மகாநாட்டில் முதன் முதலாக எடுத்துரைக்கப்பட்ட சோசலிச யதார்த்தவாதக் கோட்பாடு இலக்கியத் துறையிலே செல்லுபடியாகக் கூடியவற்றின் அரசியல் உரைகல் ஆகிற்று. ஸ்டாலினுடைய கலாசார ‘சீர்திருத்தங்கள்’ சோவியத் இலக்கியத்தை சிறைப்படுத்தத் தொடங்கிய காலகட்டத்திலேதான். மேற்கத்தைய எழுத்தாளர்கள் புரட்சியின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அரசியல் - இலக்கிய விவாதம் ஒன்றில் ‘சிக்கிக்’ கொண்டனர். இந்த விதாதமே நவீன சோசலிச நாவலின் தலை விதியை நிர்ணயித்தது எனலாம். யதார்த்த வாதம் குறித்து எழுந்த விவாதத்தில், நேரடியாகவோ மறைமுகமாகவோ மால்றோ, டொஸ் பஸ்சொஸ், ஹெமிங்வே, கேஸ்லர், ரொமெயின் ரோலண்ட், கீற், பார்புசே, மாட்டரின் நெக்சோ (டானிஷ் எழுத்தாளர்) இஷவுர்ட், லியோன் பியுட்வங்கர், ஹைன்ரிக் மான் ஆகியோர் சம்பந்தப்பட்டனர். சோவியத் யூனியன் மீதும், சோசலிசம், மரர்க்சியம் எனத் தாங்கள் விளங்கிக் கொண்டதன் மீதும் பலர் உறுதியற்ற நம்பிக்கை விசுவாசம் கொண்டனர். புரட்சிகரக் கட்டத்தை கம்யூனிசம் தாண்டிவிட்ட பின்னர்தான் மேற்கு ஐரோப்பாவின் முக்கிய எழுத்தாளர் சிலர் அக்கோட்பாட்டினால் ஈடுக்கப்பட்டு பாதிப்புற்றனர். 1917ஆம் ஆண்டு இலட்சியங்களான சர்வதேசீயத்திற்கும் ஜனநாயக சோசலிசத்திற்கும் பதிலாக தேசீயவாதமும் அதிகாரி வர்க்கத்தின் மேலாதிக்கமும் அப்பொழுது நிலவின. தவிர்க்கமுடியாதவாறு - குறிப்பாக 1939இல் உருவாகிய நாசி - சோவியத் ஒப்பந்தத்திற்குப் பின் - மாயை கலையத் தொடங்கியதும், வெறுமனே ஸ்டாலினிசம் மட்டுமல்ல, சோசலிசமும், மார்க்சியமும் சில சமயங்களிலே ஜனநாயகமும் கூட நிராகரிக்கபட்டன. இந்தப்போக்கு ஓர்வெல், கோஸ்லர், கெமு, சாத்ரே, டொரிஸ் லெசிங் ஆகியோருடைய அரசியல் நாவல்களிலே காணப்படுகின்றது. 1920களின் துன்பகரமான நிகழ்ச்சிகள் பாஸ்ரனாக்கினது படைப்புகளிலே ஆவிகள் போல் உலாவுகின்றன.

No comments:

மக்களிய கலாசாரத்தின் தார்மீக உணர்வு

திரு.மாணிக்கம், நந்தா பெரியசாமி இயக்கிய 2024 ஆம் ஆண்டு தமிழ் மொழி நாடகம், பேராசை மற்றும் சந்தர்ப்பவாதத்தால் அடிக்கடி பீடிக்கப்பட்ட ஒரு சமூகத...