கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Thursday, July 23, 2009
மார்க்ஸியமும் இலக்கியமும் 4
ஸ்டாலினிசத்தின் வளர்ச்சி மொடனிசத்தின் எல்லா எச்ச சொச்சங்களையும் அழித்தது. பல எழுத்தாளர்கள் அனாமதேயங்களாக தொழில் முகாம்களில் இறந்தனர். வேறு சிலர் தாய்நாட்டை விட்டுச் செல்வதற்கும் மௌனவிரதம் அனுட்டிப்பதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். (சாம்யாட்டின், ஒலெஷா, புல்ககொவ்) சிலர் தற்கொலை செய்தனர் (மாயா கொவ்ஸ்கி); அல்லது அதிர்ஷ்டத்தாலோ, நேர்மையீனத்தாலோ தம்மை விற்கத் தயாராகவிருந்ததாலோ உயிர் பிழைத்தனர் (ஷொலொக்கோவ், அலெக்சயி டொல்ஸ்ராய், பெடின், லியோனோவ்) புரட்சி மீது பொதுப்படையான பற்றீடுபாடு என்ற கொள்கை உருமாறி ஸ்ராலினுடைய வரலாற்றுத்திரிபு மீதான விடாப்பிடி பற்றாகிற்று. ஸ்ராலினுடைய சொற்களில் கூறுவதானால், எழுத்தாளன் - குறிப்பாக நாவலாசிரியர் - மனித ஆன்மாவின் பொறியியலாளனாக மாறவேண்டும்: பொது இலட்சியத்திற்காகவே தனது கலையை அவன் உருவாக்க வேண்டும். எனவே பற்றுறுதி மிக்க சோசலிச யதார்த்த இலக்கியம் ‘மொடனிச’த்தை மறுத்ததோடு சமூகஉலகை நேர்மையாக உள்ளவாறே வர்ணிப்பதையும் நிராகரித்தது. சமூக நம்பிக்கை, ஆர்வம், நம்பிக்கை மிக்க இலட்சிய கதாநாயகன், வீரம்மிக்க தொழிலாளர், நேர்மையான கட்சித் தொண்டர் - 1934ம் ஆண்டு நடைபெற்ற எழுத்தாளர் மகாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்ட ‘செயலூக்கமிக்க’ இலக்கியம் இவ்வாறே வடிவெடுத்தது.
இவ்வாறு இலக்கியத்திற்கு அதிகாரிகளினால் தலையிடப் பட்டமை, எழுத்தாளர் அணிவகுக்கப்பட்டு அரசியல் நிருவாகத்திற்கு உட்படுத்தபட்டமை, இவற்றின் விளைவாக அவர்கள் சௌலூக்க இலக்கியக் கோலம் பூண்டமை எல்லாம் பொல்சவிக் கோட்பாட்டினது - குறிப்பாக கட்சி, இலக்கியம், அரசியல் ஆகியவற்றுக்கிடையிலே நிலவவேண்டிய தொடர்புகள் பற்றி லெனின் கொண்டிருந்த எண்ணங்களினது - தர்க்கரீதியான வரலாற்றுத் தொடரின் கூட்டுமொத்தம் எனச் சில சமயங்களிலே சுட்டிக் காட்டப்படுகின்றது. ஒரு கட்சியே அனுமதிக்கப்பட்ட அரசியல் பற்றீடுபாடு அற்ற எழுத்தாளனுக்கு இடமேயில்லை எனப்படுகிறது. எனவே தான் 1920 களில் எழுத்தாளர்களுக்கும் இலக்கியக் குழுக்களுக்கும் ஒரளவு சுதந்திரம் வழங்கப்பட்டமை, கம்யூனிஸ்ட் கட்சி கலைத்துறையிலே ஆதிக்கஞ் செலுத்துவதற்கான முழு அதிகாரத்தையும் வல்லமையையும் பெறமுன்பு செய்யப்பட்ட இடைக்கால ஒழுங்காக - உறுதியற்ற நிலையில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக உத்தியாக - சிலரால் கணிக்கப்படுகின்றது. ஆனால் இத்தகைய வாதம் அக்கால கட்டத்தின் மிக முக்கிய அம்சம் ஒன்றைப் புறக்கணிக்கிறது. அக்கட்டத்திலே இரு குழுக்கள் ஒன்றை ஒன்று எதிர்த்து அரசியல் போராட்டம் நடாத்தின. ஒரு சாரார் இலக்கியம் சமூகப் பொறுப்பும், பயனும் வாய்ந்ததென வாதிட்டனர். மறுசாரார் நிருவாக ஆணைகளாலோ ‘கூட்டத்தோடு கோவிந்தா போட்டு, ஒத்தோடும் மனப் பான்மையாலோ கலை படைக்கப்பட முடியாதென்றும், கலை அரசியல் நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தப்படலாகாதென்றும் இயம்பினர். 1930 கள் அளவில் பின்னைய போக்கு ஏறக்குறைய நசுக்கப்பட்டு விட்டது. இதனால் 1928ல் தாயகம் மீண்ட மாக்சிம் கார்க்கி ‘விமர்சன யதார்த்தவாதத்’திற்கும், ‘சோசலிச யதார்த்தவாதத்’ திற்குமிடையே உள்ள அடிப்படை வேறுபாடு முன்னையது மனிதன் தனது அடிமை நிலையிலிருந்து விடுதலையை நாடுவதற்கான வழியைக் காட்டமுடியாமையே எனக் கூறமுடிந்தது. சோசலிச யதார்த்தவாதம் வெறுமனே சமூகத்தின் சீர்கேடுகளை அம்பலப்படுத்துவதோடு மட்டும் நில்லாது, சோசலிசத்தின் படைப்பாற் றலையும் அதன் சாதனைகளையும் ஆக்க பூர்வமாக பிரதிவிம்பம் செய்ய வேண்டும் என கார்க்கி வாதிட்டார். ‘விமர்சன யதார்த்த’ வாதத்தைத் தாண்டி - சமூக வாழ்வின் எதிர்மறையான, நம்பிக்கையை இழக்கச் செய்யும் இருண்ட பகுதிகளுக்கு அது கொடுக்கும் அழுத்தத்திற்கு அப்பாலே - அனைத்துலக தொழிலாள வர்க்கத்தைத் தட்டி யெழுப்பி அதன் உரிமைகள் பற்றிய புரட்சிகர அறிவுணர்வை ‘சோசலிச யதார்த்தவாத’ எழுத்தாளர்கள் தூண்ட வேண்டும் என கார்க்கி வற்புறுத்தினார். ‘மனித ஆன்மாவின் பொறியியலாளன்’ என்ற முறையில் வர்க்க உணர்வை உருவாக்குவதே எழுத்தாளனின் பணி; ‘பல இனங்கள் வாழும் சோவியத் ஒன்றியத்திலே எவ்வாறு நோக்க ஒருமைப்பாடு பற்றிய உணர்வு தோன்றியதென அவன் காட்ட வேண்டும்’ இக் கூற்றின்படி, இலக்கியம் எதிர்காலத்தைச் சார்ந்து நிற்கிறது: சமூகத்தின் தவிர்க்க முடியாத, முற்போக்கான உருமாற்றத்தில் அது பற்றுறுதி கொண்டிருக்கிறது. எழுத்தாளனின் கடமை, வாய்மை போன்ற அகமயமான கலை ஆணைகளுக்கல்ல, வரலாற்றின் உள்ளார்ந்த நோக்கத்திற்கே அவன் பொறுப்புடையவன். வரலாற்றின் நோக்கத்தை அரசும் அதன் அதிகாரிகளும் அதிகார பூர்வமாக வெளிப்படுத்தி மிகப் பெரிய பொலிஸ் அடக்குமுறை இயந்திரம் மூலம் நிறைவேற்றுகின்றது. கார்க்கியின் அதிகாரப் பாங்கான திட்டத்தில், சமூக ரீதியாகவும், கலை ரீதியாகவும் இலக்கியம் ஒரு சித்தாந்தமாகப் பணியாற்றுகின்றது; வர்க்கத் தொழிற்பாடு, அரசியல் அமைப்புக்கள் ஆகியவற்றின் வெறும் துணை உறுப்பாகத்தான் எழுத்தாளன் இருக்கிறான்; முதலாளித்துவத்தை அகற்றி சோசலிசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் அவன் ஓர் உறுப்பு.
இலக்கியம் உலகை அறிவுபூர்வமாக உருமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை சோசலிச யதார்த்தவாதம் சாராம்சத்தில் தன்னுள் அடக்கியுள்ளது. இந்நிலைப்பாட்டிற்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கே விஞ்ஞான பூர்வமான வரலாற்றுணர்வும், இன்றைய வருங்காலப் பணிகள் பற்றிய தெளிவான விளக்கமும் இருப்பதால் இலக்கியத்தில் உள்ளடக்கத்தையும் தன்மையையும் வரையறுப்பதற்கு அதற்கே உரிமையும் அதனிடமே வழிவகைகளும் உண்டு என்ற கருத்து நிலைக்கும் அதிக இடைவெளி இல்லை. கட்சியின் ஆற்றுப் படுத்தலில் எழுத்தாளன் ‘சீருடை அணிந்த கலைஞனாகின்றான். ‘நட்பு ரீதியான ஆலோசனை’ வழங்கப்படுவதன் மூலம் படைப்புத் தொழிற்பாட்டில் உள்ளடங்கி யிருக்கும் ‘அராஜகப் போக்குகளை’ எழுத்தாளன் களைந்து கம்யூனிச இலட்சியங்களை உறுதிப்படுத்துகின்றான்.
இத்தகைய சர்வாதிபத்திய நிலைப்பாட்டிற்கு அரண் செய்யும் பொருட்டு லெனினுடைய எழுத்துக்கள் வரவழைக்கப்படுகின்றன. சோசலிச யதார்த்வாத பற்றீடுபாட்டிற்கு மூலமாகவும், அடிப்படையாகவும் அவையே மேற்கோள் காட்டப்படுகின்றன. மறுபுறம் மார்க்சீயத்தைக் கண்டிப்பவர்களின் கண்களுக்கு லெனினுடைய எழுத்துக்களிலே இலக்கியம்பற்றி சோவியத் மார்க்சீசம் உள்ளார்ந்து கொண்டிருக்கும் இழிவான கண்ணோட்டம் தென்படுகின்றது. இரு சாராரின் நிலைப்பாடுகளையும் சமரசப்படுத்த முடியாது. ஆயினும் இரு சாரார்க்கும் அதிமுக்கியமாக விளங்குவது ‘கட்சி ஒழுங்கமைப்பும் கட்சி இலக்கியமும்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையே. 1905ல் லெனின் எழுதிய இச் சிறுகட்டுரை 1920 களின் முற்பகுதியில் சோவியத் இலக்கியம் பற்றி நடைபெற்ற விவாதங்களிலே பெரும்பாலும் பொருட்படுத்தப்படவில்லை. எனினும், 1932ல் இருந்து இக்கட்டுரை மாசில்லாத புனிதத்துவம் பெற்றதுடன் நேர்மையான சோசலிச இலக்கியத்தின் கோட்பாட்டு அளவு கோலாகவும் கருதப்பட்டு வரத் தொடங்கியது. இக்கட்டுரையிலே, இலக்கியத்தின் வர்க்க அடிப்படையை லெனின் தெட்டத் தெளிவாக விளக்கினார். முற்போக்கான கண்ணோட்டத்தை எழுத்தாளன் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தினை எடுத்துக்கூறி, இலக்கியம் கட்சி இலக்கியம் ஆகவேண்டும் என லெனின் உரைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை
கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
பீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...
No comments:
Post a Comment