கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Thursday, July 23, 2009
மார்க்ஸியமும் இலக்கியமும் 5
லெனினுடைய கட்டுரையின் தாற்பரியத்தை உணர்வதற்கு 1905இல் பொல்செவிக் கட்சியின் சுட்டிப்பான வரலாற்று நிலையோடு அதனைத் தொடர்புபடுத்தல் வேண்டும். அவ்வாண்டிலே நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து சார் அரசாங்கம் சில சமூக, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டது. இவற்றில் ஒன்று எதிர்க் கட்சிகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டமை. இந்தச் சூழ்நிலையில் பொல்செவிக் கட்சி தன்னைப் பகிரங்கமாக வெளிப்படுத்த முடிந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்சியில் சேர்ந்த புதிய உறுப்பினர்களை நோக்கித்தான் லெனினுடைய கட்டுரை வரையப்பட்டது; கட்சிக்கு எதிரான இலக்கியமோ, கருத்துக்களோ எச்சந்தர்ப்பத்திலும் பொல்செவிக் கட்சிக்குள் அனுமதிக்கப்பட மாட்டா. கட்சி இலக்கியம்பற்றி மட்டும்தான் - அதாவது பொல்செவிக் கட்சி உறுப்பினர்களால் படைக்கப்பட்டு, கட்சி அச்சகத்தால் வெளியிடப்பட்டு, கட்சிப் பத்திரிகைகளிலும் புத்தகக் கடைகளாலும் விநியோகிக்கப்படும் இலக்கியத்தைத் தான் - லெனின் குறிப்பிட்டார் என்பது நன்கு மனங் கொள்ளத்தக்கது. கட்சியின் தொழிற்பாடுகள் கண்டிப் பான கட்சிக் கட்டுப்பாட்டிற்கு உட்பட வேண்டும் என லெனின் வாதிட்டார்; அதுபோல எல்லாவகையான இலக்கியம்மீதும், அழகியல், விமர்சன, மெய்யியல் துறைகள் மீதும் இத்தகைய கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்றும் லெனின் கூறாமல் கூறினாரா? அவரே தொடர்ந்து எழுதினார்: ‘அமைதியுறுங்கள் கனவான்களே, ஏனெனில் நாம் இப்பொழுது கட்சி இலக்கியம் பற்றியும், கட்சிக் கட்டுப்பாட்டிற்கு அது கீழ்படிவது பற்றியுந்தான் பேசுகின்றோம். தான் விரும்பியவற்றை, எதுவித தடையுமின்றி, எவரும் எழுதுவதற்கும் பேசுவதற்கும் சுதந்திரம் உண்டு. என்றாலும் கட்சியுட்பட தன்விருப்பார்ந்த அடிப்படையில் அமைந்த நிறுவனம் ஒவ்வொன்றிற்கும் கட்சிக்கு எதிரான கருத்துக்களை கட்சியின் பெயரிலே வெளியிடும் உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கும் உரிமை உண்டு’ எல்லாவகையான இலக்கிய முயற்சிகள்மீதும் கட்சி கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என லெனின் வாதிடவில்லையென்பதே இங்கு முக்கியமாகக் குறிக்கப்பட வேண்டியது; பொல்செவிக் கட்சியுடன் நேரடி ஈடுபாடுகொண்டிருந்த எழுத்தாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சார்பு நிலையைத்தான் அவர் இங்கு சுட்டினார். இந்த விளக்கமே சரியானது என்பதை இக்கட்டுரைக்கு லெனின் எழுதிய குறிப்புகள் சான்று பகருகின்றன. அவை தெட்டத் தெளிவாக அக்சல்ரொட், மார்டொவ், பார்வஸ், ரொட்ஸ்கி பிளெக்கனொவ் ஆகிய இலக்கியவாணர்களையே சுட்டுகின்றன. 1905 இல் பெரும்பாலான நாவலாசிரியர்களோ, கவிஞர்களோ, கலைஞர்களோ கட்சி வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபடாத சூழ்நிலையில் அவர்களை விளித்துத்தான் லெனின் மேற்குறிப்பிட்டவற்றைக் கூறினார் என்பது பொருந்தாது. 1920இல்நிலவிய முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் லெனின் பின்வருமாறு எழுதினார்: ‘தன்னுடைய எண்ணப்படி சுதந்திரமாக புறநிர்ப்பந்தம் எதுவுமின்றிப் படைப்பதற்கு ஒவ்வொரு கலைஞனுக்கும் உரிமையுள்ள போதிலும் பெரும் குழப்பநிலை ஏற்படுவதற்கும் நாம் வாழாவெட்டியாகக் கைகட்டிநின்று அனுமதிக்க முடியாது’. இவ்வாறு கூறிய போதிலும் இலக்கியம்மீது சர்வாதிபத்திய கட்டுப்பாடு இருத்தல் வேண்டுமென்ற பொருளில் அவர் குறிப்பிடவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் 1921ல் கட்சி எடுத்தமுடிவு இதனை லெனினே அங்கீகரித்தார் - முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. அவ்வாண்டிலே ‘கன்னிச் செம்பூமி’ என்ற பெயரில் இலக்கிய அம்சங்களைப் பெரும்பாலும் உள்ளடக்கிய சஞ்சிகை ஒன்றினை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் ஆசிரியர் அலெக்சாண்டர் வொறன்ஸ்கி என்பவராகும். அச்சஞ்சிகைக்கு விடயதானம் வழங்கியவர்கள் பாட்டாளிவர்க்க எழுத்தாளர்கள் மட்டுமன்றி மொடனிச, தாய்நாட்டை விட்டு வெளியேறிய எழுத்தாளர்களுமாவர். ‘சரியான’ அரசியலை அறுதியிட்டுக் கூற எத்தகைய முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. பொல்செவிக்குகள் மீது அதிக அனுதாபம் கொண்டிருக்காத எழுத்தாளர்களின் விடயதானங்கள் வெளியிடப்பட்டன. இவற்றைப் போல் முக்கியமான இன்னொரு அம்சம் என்ன வெனில் இன் கொள்கையைத்தான் வொறன்ஸ்கி கடைப்பிடிக்க வேண்டுமெனக் கட்டுப்பெட்டித்தனமாகக் கட்டளையிடுவதற்கு எவரும் விழையாமையே. பில்னியாக், சாம்யாட்டின் போன்றோரின் படைப்புக்கள் அடிக்கடி இச்சஞ்சிகையில் வெளியிடப்பட்டன. சஞ்சிகையின் வளர்ச்சிப் போக்கை லெனின் மிகக் கூர்மையாக அவதானித்து வந்தார். வளர்ந்துவரும் புதிய சோவியத் கலைஞர் தலைமுறையிலிருந்து யதார்த்தவாதத்தின் மறுமலர்ச்சி ஏற்படுமென பொல்செவிக்குகள் எதிர்பார்த்தது உண்மையே. இலக்கியத்திலும், நாடகத்துறையிலும், ஒவியத்திலும், இசையிலும் யதார்த்தவாதம் ஊடுருவியிருக்க வேண்டுமென லூனசாஸ்கி எழுதினார். ஆனாலும், அரசியல் ஆஐணமூலம் பண்டப் பொருள்களை உற்பத்தி செய்வதுபோல் கலை, இலக்கியத்தைப் படைக்க முடியாதென்பதை லெனினும், ரொட்ஸ்கியும் லூனசாஸ்கியும் பூரணமாக உணர்ந்திருந்தனர். மொடனிசத்தை லெனின் எதிர்த்துநின்ற போதிலும் இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்குமிடையே உள்ள உறவு இயக்கவியற் பாங்கானதே அன்றி இயந்திரப் பாங்கானது அல்ல என்பதை லெனின் புரந்து வைத்திருந்தார். எடுத்துக்காட்டாக புரட்சிக்கு முன்னர் டால்ஸ்டாயைப்பற்றி அவர் எழுதிய நான்கு குறுங்கட்டுரைகள் பிளெக்னெவ்வின் இயந்திரப் பாங்கான கோட்பாட்டிற்கு எதிரிடையாக அமைந்தன. பிளெக்னொவ் இலக்கியப் படைப்பை வர்க்கப் பின்னணியின் வெறும் பரதிவிம்பமாக குறுக்கினார். இவருடைய கருத்துப்படி டால்ஸ்டாலிருந்து - டால்ஸ்டாயின் நிலப் பிரபுத்துவ சமூக நிலையிலிருந்து - நேரடியாகத் தோன்றிய ஒன்றே லெனின் டால்ஸ்டாயின் இலக்கியத்தை அவர் காலத்தின் ஆவணமாக நோக்கிய போதிலும் இயக்கவியல் கண்டுகொண்டு படைப்பை அணுகுவதால் டால்ஸ்டாயின் கலையில் உள்ளடங்கியிருக்கும் முரண்பாடுகளை - டால்ஸ்டரியனுடைய கோட்பாட்டிற்கும், அவரது சமூக வர்க்க நிலைக்குமிடையே உள்ள முரண்பாடுகளை -அழுத்திக் கூறமுடிந்தது. நிலமானிய முதலாளித்துவ கூறுகளின் கலப்பினை உள்ளடக்கிய 19-ம் நூற்றாண்டு ரஷ்ய சமுதாயத்தின் முரண்பட்ட வளர்ச்சிப்போக்கை டால்ஸ்டாயின் படைப்புக்கள் பரதிபலிக்கின்றன என்பதே லெனினுடைய அடிப்படைக் கருத்தாகும். டால்ஸ்டாயினுடைய நிலைப்பாடு தொழிலாளவர்க்க, சோஷலிச நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்றும் விவசாயி, பூர்சுவா புரட்சியின் குரலாகவே அது ஒலித்ததென லெனின் சுட்டிக்காட்டினார். படைப்பாளி தனது சொந்த வர்க்கப் பின்னணியையே பிரதிவிம்பம் செய்கின்றான் என்ற கோட்பாட்டை லெனின் இதனால் நிராகரித்தார் எனலாம்.
உன்னத இலக்கியத்தை டால்ஸ்டாய் படைப்பதற்கு ரஷ்யாவின் எதிர்காலம் நகரத்துப் பாட்டாளி வர்க்கத்தினதும் புரட்சிகர சோசலிசத்தினதும் கைகளிலேயே தங்கியிருக்கின்றதே அன்றி விவசாயிகளிலும் அகிம்சைக் கோட்பாட்டிலும் அல்ல என்ற உண்மையை டால்ஸ்டாய் உணந்திருக்க வேண்டிய அவசியமில்லை என லெனின் சுட்டிக்காட்டி வாதாடியது மிக முக்கியமானதொன்றாகும். தவறான வரலாற்றுக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த டால்ஸ்டாய் பால்சாக்கைப் போன்று கலையினூடாக ‘யதார்த்தவாதத்தின் வெற்றி’ மூலம் ரஷ்ய சமுதாயத்தை நேர்மையோடும் வாய்மையோடும் படம்பிடித்ததின் விளைவாகத் தனது கற்பனாவாத தத்துவத்தையும் அரசியலையும் மேவிநின்றார். அவரது கருத்து முதல்வாதத் தத்துவமும், பிற்போக்குத் தனமான கற்பனாவாதம் உயரிய இலக்கியத்தைப் படைப்பதற்கு முட்டுக்கட்டைகளாக இருக்கவில்லை.
எனவே லெனினுடைய இச்சிறு கட்டுரைகளோ அவரது அரசியல் நடவடிக்கைகளோ பின்னைய ஸ்ராலினிச நடைமுறைகளுக்கு ஊற்றாகவும் தூண்டுதலாகவும் அமைந்தன என வாதிட முடியவே முடியாது; சோசலிச யதார்த்தவாதமும் அரசின் கோட்பாட்டிற்குள் எழுத்தாளர்களைச் சிறைப்படுத்துவதும் மார்க்சியவாதத்தின் இயல்பான தன்மைகள் எனக்கூறுவதும் அறவே பொருந்தாது. சோசலிசத்தை எய்துவதற்கு சோவியத் ஒன்றியத்திலே நடைபெற்ற போராட்டத்தைப் பற்றியும் 1920களில் பொல் செவிக் கட்சியின் இடது வலது குழுக்கள் பொருதிக் கொண்டதுபற்றியும் செம்மையான, ஆழ்ந்த வரலாற்று நோக்கு இல்லாததாலேயே இத்தகைய கருத்துத் திரிபுகள் சாத்தியமாகின்றன. இந்தக் கருத்து மோதல்களின்போது இலக்கியம் அரசியல் அதிகாரத்துக்கு உட்படாத ஒரு செயற்பாடு என்ற வாதத்திற்கு எதிராக இலக்கியம் சமூகப் பொறுப்பு வாய்ந்தது என்ற அதிகாரிமயவாதம் முன்வைக்கப்பட்டது. இத்தகைய பிரச்சினைகள் குறித்து 1920களில் கடும் போராட்டம் நிகழ்ந்தது; ஒருபுறம் இலக்கிய வெளிப்பாட்டின் எல்லைகள் பரந்து அகலித்திருக்க வேண்டும் எனக் கருதியவர்கள் (வொரொன்ஸ்கி, ரொட்ஸ்கி) மறு அணியில் பழைய ‘புரொலிட்கல்ட்’டுடன் தொடர்புற்றிருந்த வறண்ட ‘ஏட்டுத்தனம்’ மிக்க அதிகாரிமயப் போக்குகள் திரண்டன ஜனநாயகத்திற்கு விரோதமாக நிருவாகக் கட்டளைகள் மூலம் ஆட்சிசெய்த சக்திகளின் ஒங்கிவரும் அதிகாரத்தின் இலக்கிய வெளிப்பாடுகளாக இப்போக்குகள் விளங்கின. சோவியத் சமுதாயம் அதிகாரிமயப்படுத்தப்படுவதையும், புரட்சி கர எழுச்சியில்லாத தேசியவாத சோசலிசம் தோன்றிவருவதையும் ஸ்ராலினும் ‘ஒரு நாட்டில் சோசலிசம்’ என அவர் முன்வைத்த சுலோகமும் பறைசாற்றின.
Subscribe to:
Post Comments (Atom)
கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை
கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
பீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...
No comments:
Post a Comment